சமூக ஆர்வலர் இரோம் சர்மிளாவின் திருமணத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கொடைக்கானல் சார்பதிவாளர் நிராகரித்தார்.
மணிப்பூரை சேர்ந்த இரோம் சர்மிளா, சர்ச்சைக்குரிய அஃப்ஸ்பா எனப்படும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி, 16 ஆண்டுகளாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட நிலையில், 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
அதன்பின், தேர்தலில் போட்டியிட்டு படுதோலி அடைந்தபிறகு, தன் காதலரான அயர்லாந்த் நாட்டை சேர்ந்த தேஸ்மண்ட் ஹட் ஹோவிடன்-ஐ திருமணம் செய்துகொண்டு வாழ விரும்புவதாக தெரிவித்த இரோம் சர்மிளா, தன் காதலருடன் கொடைக்கானலில் குடியேறினார்.
இந்நிலையில், இரோம் சர்மிளா தன் காதலர் தேஸ்மண்ட் ஹட் ஹோவிடனுடன் திருமணம் செய்துகொள்வதற்காக கடந்த ஜூலை மாதம் 12-ஆம் தேதி கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/07/DEg40EJXUAEeyc2-300x217.jpg)
இவர்களுடைய திருமணத்திற்கு ஒரு மாத காலத்திற்குள் யாரும் ஆட்சேபணம் தெரிவிக்காவிட்டால், அவர்களுடைய திருமணம் நடைபெறும்.
ஆனால், ”கொடைக்கானலில் திருமணம் செய்து அவரை இங்கேயே நிரந்தரமாக தங்க அனுமதிக்கப்பட்டால், கொடைக்கானலின் அமைதி கெடும்”, எனக்கூறி அவரது திருமணத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பாக கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் இரோம் கொடைக்கானலில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக தான் போராடவிருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இரோம் சர்மிளாவின் திருமணத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என மகேந்திரன் தாக்கல் செய்த மனுவை சார்பதிவாளர் நிராகரித்தார்.
இதுதொடர்பாக, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட உத்தரவில், ”சிறப்பு திருமணச் சட்டத்தின் பிரிவு 4-ன் படி திருமணம் செய்யும் இருவருக்கும் ஏற்கனவே வாழ்க்கைத் துணை இருக்கக் கூடாது மற்றும் இருவரும் ஆரோக்கியமான மனநலத்துடன் இருக்க வேண்டும். இந்த இரண்டில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் மட்டுமே திருமணத்திற்கு அனுமதி அளிக்க முடியாது. ஆனால், மனுதாரரின் காரணம் இந்த இரண்டும் இல்லை.”, என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, இரோம் சர்மிளாவின் திருமணம் வரும் 16-ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.