கொலை வழக்கில் தேடப்பட்ட சுபாஷ் பண்ணையார் நெல்லை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவர் சென்னையில் என்கவுண்டர் செய்யப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் சகோதரர்!
ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியில் சென்னையில் போலீஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டவர், வெங்கடேச பண்ணையார். இவரது மனைவி ராதிகா செல்வி, திமுக. சார்பில் எம்பி-யாக ஜெயித்து, மத்திய உள்துறை இணை அமைச்சராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கடேச பண்ணையாரின் சகோதரர் சுபாஷ் பண்ணையார். தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகேயுள்ள அம்மன்புரம், இவர்களின் ஊர்! வெங்கடேச பண்ணையாரின் தாத்தா காலத்தில் இருந்தே அவர்களது குடும்பத்திற்கும், தேவேந்திர குல வேளாளர்கள் இளைஞர் பேரவை என்ற அமைப்பை நடத்தி வந்த பசுபதி பாண்டியனுக்கும் மோதல் இருந்தது.
இந்த மோதலில் பல கொலைகள் நடந்தன. பசுபதி பாண்டியனும் அந்த மோதலில்தான் கொல்லப்பட்டார். வெங்கடேச பண்ணையார் என்கவுண்டர் செய்யப்பட்ட பிறகும் அந்த மோதல் அடங்கவில்லை. பசுபதி பாண்டியன் ஆதரவாளர்களுக்கும், சுபாஷ் பண்ணையார் தரப்புக்கும் இடையிலான மோதலாக அது நீண்டு கொண்டிருக்கிறது.
இந்த தொடர் மோதலில் கொல்லப்பட்ட ஒருவர்தான் சிங்காரம். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள புல்லாவெளியை சேர்ந்தவர்! இவர் பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளர். இவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிங்காரம் அழைத்து செல்லப்பட்டார். அப்போது பாளையங்கோட்டை கேடிசி நகர் நான்கு வழி சாலையில் ஒரு கும்பல் போலீஸ் வேனை மறித்து சிங்காரத்தை வெட்டி கொன்று விட்டு தப்பியது.
இது தொடர்பாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த எட்வின் ராபர்ட், அனிஸ் குமார் உள்பட 13 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் தேடப்படும் குற்றவாளியாக சுபாஷ் பண்ணையாரை அறிவித்தனர். அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில், சுபாஷ் பண்ணையாரின் சொத்துகளை முடக்கும் வேலைகளை போலீஸ் மேற்கொண்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்று (10-ம் தேதி) சுபாஷ் பண்ணையார் தனது வழக்கறிஞர் துணையுடன் நெல்லை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். பொதுவாகவே எந்த வழக்கிலும் கைதும் ஆகாமல், சுலபத்தில் சரண்டரும் ஆகாதவரான சுபாஷ், கொலை நடந்து 7 மாதங்களுக்கு பிறகு இந்த வழக்கில் சரண் அடைந்தது பரபரப்பாக பேசப்படுகிறது.