Subasri accident death after banner falls on her: அரசியல்கட்சிகளின் மாநாடு, பொதுக்கூட்டம், தலைவர்கள் வருகை, திருவிழா, திருமணம், பிறந்தநாள் கொண்டாட்டம், காதணிவிழா, கண்ணீர் அஞ்சலி, நினைவு அஞ்சலி இப்படி தமிழகத்தில் எந்த நிகழ்வாக இருந்தாலும் பேனர் வைப்பது என்பது ஒரு விளம்பர கலாச்சாரமாக மாறியிருக்கிறது. அப்படி பொது இடங்களில், சாலைகளில் வைக்கப்படுகிற பேனர்களால் சில பிரச்னைகள், தகராறுகள் மட்டுமே இருந்து வந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுக் கம்பத்தில் மோதி ரகு என்ற இளைஞர் உயிரிழந்தார். ரகுவின் நண்பர்கள் சிலர் அவர் இறந்த இடத்தில் Who Killed Ragu என்ற வாசகத்தை எழுதினர். அதை அப்போது இணையத்தில் பலர் #Who Killed Ragu என்று ஹேஷ்டேக்குடன் பகிர்ந்தனர்.
இளைஞர் ரகு உயிரிழந்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றபோது, சாலையில் அமைக்கப்பட்ட அலங்கார வளைவு காரணமாகத்தான் விபத்து ஏற்பட்டது என்றும் சாலை நடுவே பேனர்கள் வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது.
இந்த நிலையில்தான், நேற்று சென்னை பள்ளிகரணை அருகே சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் மேலே விழுந்ததால், இருசக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்த குரோம்பேட்டை, நெமிலிச்சேரியைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் கீழே விழுந்து லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். சுபஸ்ரீ கனடாவுக்குச் செல்லும் கனவுடன் தேர்வு எழுதிவிட்டு இருசக்கர வாகனத்தில் செல்லும்போதுதான், பேனர் விழுந்ததால் நிலைதடுமாறி லாரி டயரில் சிக்கி இறந்தார். அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கும் புகைப்படத்தை பார்த்த பலரையும் கண்கலங்க வைத்தது. இந்த துயரச் சம்பவத்துக்கு பள்ளிகரணை அருகே அதிமுக நிர்வாகி ஜெயகோபால் என்பவர் இல்ல திருமண நிகழ்ச்சிக்காக சாலையின் நடுவே வைத்திருந்த பேனர்தான் காரணமாகியுள்ளது.
அனுமதியின்றி போக்குவரத்துக்கு இடைஞ்சலாக சாலைகளில் பாதுகாப்பற்ற முறையில் பேனர்கள் வைக்கப்படுவது குறித்து டிராஃபிக் ராமசாமி போன்றவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றமும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், சாலைகளில் பேனர் வைக்கும் முறை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இப்போது இந்த மோசமான பேனர் கலாச்சாரத்தால் சுபஸ்ரீ என்ற இளம் பெண்ணும் பலியாகி உள்ளார். இப்படி ஆபத்தான முறையில் சாலைகளில் பேனர் வைப்பது குறித்து காவல்துறையும் தமிழக அரசும் எத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து வழக்கறிஞர் அஜிதாவிடம் பேசினோம்.

அஜிதா கூறுகையில் “காவல்துறைக்கும் இந்த அரசுக்கும் நீதித்துறையின் உத்தரவுகளையும் சட்டத்தையும் கடுமையாக உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் காவல்துறையை நம்பாமல் இருப்பதற்கு இதுதான் காரணம். காவல்துறை நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதை சீராக்கினால் இது சரியாகும்.
உதாரணத்திற்கு, கார் போன்ற வாகனங்களில் கருப்பு கண்ணாடி போடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது. கருப்பு கண்ணாடி போட்ட ஒரு காரில் ஒரு பெண்ணை வைத்து சித்திரவதை செய்து பாலியல் பலாத்காரம் செய்தார்கள் என்று செய்திவந்தால், அடுத்த 2 நாட்களுக்கு கார்களில் கருப்புக் கண்ணாடி போடக்கூடாது என்று சொல்வார்கள். அதன்பிறகு விட்டுவிடுவார்கள். பணக்காரர்கள், வசதி படைத்தவர்களின் கார்கள், 50 லட்சம் ரூபாய், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள் கருப்பு கண்ணாடி போட்டு போகிறது என்றால் போலீசார் தடுத்து நிறுத்தி கேட்பதே இல்லை. யாராவது ஒரு போலீஸ் தடுத்து நிறுத்தி கேட்டார் என்றால், அவர் ஏன் அந்த காரை தடுத்து நிறுதினார் என்று உயர் அதிகாரிகளிடம் இருந்து அரசியல்வாதிகளிடம் இருந்தும் கேள்வி வருகிறது.
சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாத ஒரு அரசாக இருக்கிறது. காவல்துறை இங்கு இருக்கிற ஆட்சியாளர்களுக்கு கைப்பாவையாக இருப்பது பழகிப்போய்விட்டது. எப்போது காவல்துறை சட்டத்தை மதித்து, சட்டம்தான் எங்களுடைய அரசு, ஆட்கள் இல்லை அரசு என்று செயல்படுகிறார்களோ அப்போதுதான் இதற்கெல்லாம் முடிவு வரும்.
இந்த பேனர் பிரச்னையில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். விபத்து நடந்த அந்தப் பகுதியில் பணியில் உள்ள காவலர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அபோதுதான் இவையெல்லாம் நடைமுறைப்படுத்தப்படும். அந்த பெண்ணின் உயிரிழப்புக்கு காவல்துறையும் சட்டத்தை நடைமுறைப்படுத்தாத உள்துறையும், உள்துறையை வைத்துள்ள தமிழக முதலமைச்சரும்தான் பொறுப்பேற்க வேண்டும்.” என்று கூறினார்.

பேனர் விழுந்து விபத்தில் சிக்கி பெண் உயிரிழந்தது தொடர்பாக வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறுகையில், “அந்த பெண் உயிரிழந்த போட்டோவைப் பார்ந்து மிகவும் வருத்தப்பட்டேன். நிச்சமயமாக இந்த விபத்து அந்த பெண்ணின் குடும்பத்தினர், நண்பர்களை மட்டுமில்லாமல் பலரையும் பாதித்திருக்கிறது.
பொதுவாக சாலையின் செண்டர் மீடியமில் பேனர் வைப்பதற்கு அனுமதியே கிடையாது. ஏன் என்றால், சாலையின் நடுவே உள்ள செண்டர் மீடியம் அதிகப்பட்சமாக இரண்டு அடி இருக்கலாம். பெரும்பாலும், செண்டர் மீடியம் ஒரு அடி அகலம்தான் இருக்கும். அந்த இடத்தில் 3 அடி பேனர் வைத்தால் நிச்சயமாக போக்குவரத்துக்கு இடையூறாகத்தான் இருக்கும். அதனால், அந்த பேனர் வைக்கப்பட்டிருந்த பகுதியில் பணியில் இருந்த காவல்துறையினர், போக்குவரத்து காவல்துறையினர்தான் பொறுப்பேற்கவேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமான இந்த விபத்தில் என்ன பிரிவில் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கவனக்குறைவாக விபத்து ஏற்படுத்தினார் என்று சொல்லமுடியாது. ஏனென்றால், சாலையில் பேனர் வைக்க கூடாது என்று தெரிந்தே பேனர் வைத்துள்ளதால், தெரிந்தே விபத்துக்கு காரணமாகியுள்ளார் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.” என்று கூறினார்.
பள்ளிகரணையில் சுபஸ்ரீ மீது லாரி மோதி உயிரிழப்பை ஏற்படுத்திய லாரி டிரைவர் மனோஜ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சாலையில் நடுவே பேனர் வைத்த அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுபஸ்ரீ விபத்தில் சிக்கி உயிரிழப்பதற்கு அதிமுக நிர்வாகி திருமண நிகழ்ச்சிக்காக சாலையின் நடுவே வைக்கப்பட்ட பேனர் விழுந்ததே காரணம் என்று செய்தி வெளியானதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அ.தி.மு.க.வினரின் பேனர் மற்றும் கட் அவுட் கலாச்சாரத்தால் சுபஸ்ரீ என்ற மற்றுமொரு இளம்பெண் உயிர் பலியாகியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. கழக நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.இந்த அறிவுரையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பள்ளிக்கரணையில் டிஜிட்டல் பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான சம்பவம்
தொடர்பாக வழக்கறிஞர்கள் லட்சுமி நாராயணன், கண்ணதாசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என முறையிட்டனர். இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், “பேனர் விசயத்தில் நீதிமன்ற உத்தரவுகளை அதிகரிகள் உரிய முறையில் பின்பற்றவில்லை” என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், நீதிபதிகள் ஆளும் கட்சியினர்தான் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் சட்ட விரோத பேனர்கள் வைப்பதாகக் கூறி கண்டனம் தெரித்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு பிறகு, இனிமேலாவது தமிழக அரசும் காவல்துறையும் இந்த பேனர் கலாச்சாரத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க உறுதியான நடடிக்கை எடுக்குமா? என்பது அனைவரிடமும் ஒரு கேள்வியாக எழுந்துள்ளது. நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?