ரஜினியை சீண்டிய சுவாமிக்கு டுவிட்டரில் ரசிகர்கள் பதிலடி

ரஜினியை விமர்சித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை, பிரத்யேக ஹேஷ்டேக் மூலம் டுவிட்டரில் சிலர் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர்.

அமெரிக்காவில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் சூப்பர்ஸ்டார் ரஜினி இருப்பது குறித்த புகைப்படத்தை வெளியிட்டு விமர்சித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை, பிரத்யேக ஹேஷ்டேக் மூலம் டுவிட்டரில் சிலர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மே மாதம், தனது ரசிகர்களைச் ரஜினிகாந்த் சந்தித்தார். ரசிகர்கள் சந்திப்பு தொடங்கிய முதல் நாளிலேயே அரசிய குறித்து சூசகமாக பேசினார். “போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்” என தேர்தல் வரும் போது அரசியல் பிரவேசம் என சூசகமாக கூறினார்.

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சை பலரும் விமர்சித்து வருகின்றனர். பல ஆண்டுகளாகவே அப்படித் தான் சொல்லுகிறார். இப்போது அவரால் அரசியலில் ஜொலிக்க முடியாது. அந்த காலம் முடிந்து விட்டது என சிலர் எதிர்மறையாகவும், சிலர் நேர்மறையாகவும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இத்தகைய அரசியல் பரபரப்புகளுக்கிடையே, கபாலி கூட்டணியின் அடுத்த படமான “காலா” படபிடிப்பில் ரஜினி தீவிரமாக பணிபுரிந்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்தின் 164-ஆம் படம் ‘காலா’. தனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வருகிறார்கள். அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுகளுக்கிடையே இந்த படப்பிடிப்பு நடந்து வருவதால், படம் குறித்த விஷயங்களும், ரஜினியின் செயல்பாடுகளும் உற்று நோக்கப்படுகின்றன.

மும்பையில் முதற்கட்ட காலா படப்பிடிப்பில் கலந்து கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினி சில நாட்கள் ஓய்வுக்கு பின்னர், வழக்கமான உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அந்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு செல்லும் ரஜினி குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி, கார் ஒன்றில் அவர் செல்வது போன்ற செல்பி வீடியோ மற்றும் சூதாட்ட விடுதி ஒன்றில் அவர் இருப்பது போன்ற புகைப்படம் வைரலானது.

இதனையடுத்து, சூதாட்ட விடுதியில் ரஜினி இருப்பது போன்ற புகைப்படத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி,”ரஜினிகாந்த் 420 அமெரிக்காவில் உள்ள கேசினோ சூதாட்ட விடுதிக்கு தனது உடல்நலத்தை மேம்படுத்துவதற்கு சென்றுள்ளார்” என விமர்சித்திருந்தார். மேலும், அவருக்கு அமெரிக்க டாலர்கள் எங்கிருந்து வருகிறது என அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் எனவும் அந்த டுவிட்டர் பதிவில் சுவாமி குறிப்பிட்டிருந்தார்.

அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக ரஜினி அறிவித்த நாள் முதலே, அவரை சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து கடுமையாக சாடி வருகிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில்,”ரஜினிகாந்த் நிதி மோசடி செய்துள்ளார்” என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், டுவிட்டர் பயனாளி ஒருவர் சுப்பிரமணியன் சுவாமியை பிரத்யேக ஹேஷ்டேக் மூலம் விமர்சித்துள்ளார். சுவாமி அரசியல் பொறுக்கி #PoliticalPorikkiSuSwamy என்ற அந்த ஹேஷ்டேக் மூலம் ரஜினி ரசிகர்கள் சுப்பிரமணியன் சுவாமிக்கு அஞ்சலி செலுத்தலாம் என்றும் தனது டுவீட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டுவிட்டரில் இந்த ஹேஷ்டேக் தற்போது டிரெண்டாகி பலரும் சுவாமியை அதில் விமர்சித்து வருகின்றனர்.

×Close
×Close