சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 6 சுற்றுகள் முடிவில் டிடிவி தினகரன் 29,267 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 15,184 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 7,983 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் 1,245 வாக்குகளையும், பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 408 வாக்குகளையும் பெற்றுள்ளனர். பாஜக பெற்றிருக்கும் இந்த வாக்கு எண்ணிக்கை, நோட்டாவின் வாக்குகளை விட மிகவும் குறைவானதாகும்.
தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்பில் திமுக, அதிமுக முதல் இரண்டு இடத்தையும், தினகரன் மூன்றாவது இடத்தையும் பிடிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது ஆறு சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், தினகரன் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று காலை வெளியிட்ட ட்வீட்டில், "ஆர்.கே.நகர் தேர்தலில் ஜெயலலிதா மரணத்தால் தினகரன் வெற்றிப் பெறுவார் என தெரிகிறது. 2019ம் ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் இரண்டு பிரிவுகளும் இணையும் என நான் எதிர்பார்க்கின்றேன்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு ட்வீட்டை சுப்ரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார். அதில், "தமிழகத்தில் பாஜக சாதனை: மத்தியில் ஆளும் ஒரு தேசிய கட்சி, நோட்டா பெற்ற ஓட்டுகளில் கால்வாசியைப் பெற்றுள்ளது. பொறுப்பாக இருக்க வேண்டியதற்கான நேரம் வந்துவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமியின் இந்த ட்வீட் அவர் சார்ந்திருக்கும் சொந்த கட்சியையே கிண்டல் செய்யும் வகையில் அமைந்துள்ளது பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.