தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷாலின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி’ சென்னை வடபழனியில் அமைந்துள்ளது.
இந்த அலுவலகத்தில் நேற்று மாலை சுமார் மூன்றரை மணி நேரம் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையை ஜிஎஸ்டியின் நுண்ணறிவு பிரிவினர்தான் மேற்கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை பின்னர் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு மறுத்தது. விஷால் அலுவலகத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள் யார் என்பதில் குழப்பம் நிலவி வந்த நிலையில், சோதனையை மேற்கொண்டது வருமான வரித்துறையின் ஒரு அங்கமான செலவை மதிப்பிட்டு, வரியை கணக்கிடும் டிடிஎஸ் பிரிவு என்பது பின்னர் தெரிய வந்தது.
இந்த சோதனை அவரது ரசிகர்களிடையேயும் திரையுலகினரிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் விஷாலுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அவரது நிறுவனம் வரிப்பிடித்தம் செய்ததில் 51 லட்ச ரூபாய் வரை அரசுக்கு செலுத்தவில்லை என்ற புகார் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விஷாலின் திரைப்பட தயாரிப்பு நிறுவன வங்கி கணக்கு புத்தகத்துடன் வரும் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
முன்னதாக, விஜய் நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான ‘மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக வசனங்கள் இடம்பெற்றதால், அது தொடர்பான காட்சிகளை பாஜகவினர் நீக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருப்பது நமக்கு தெரிந்த ஒன்றே.
ஆனால், இதற்கும் விஷால் அலுவலகத்தில் ரெய்டு நடந்ததற்கும் என்ன தொடர்பு என பார்த்தோமேயானால், ‘எதிர்ப்புகளுக்கு பின்வாங்கி படத்தில் வரும் ஒரு காட்சிகளை கூட நீக்கக் கூடாது’ என அவர் விடுத்த ஸ்டேட்மென்ட் தான் காரணமாம். இதனால், பாஜகவின் கோபப் பார்வையில் அகப்பட்ட விஷாலின் அலுவலகத்தில் தற்போது ரெய்டு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஷால் நடிக்க வந்த இத்தனை ஆண்டுகளில், முதன்முறையாக அவரது அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆனால், இதில் மற்றொரு அதிர்ச்சி கலந்த ஆச்சர்ய விஷயம் என்னவெனில், இந்த ரெய்டு குறித்து இதுவரை திரைத் துறையினர் வாய்த் திறக்காமல் இருப்பது தான். பெரும் ‘தலை’களில் யாரும் இதுவரை இதுகுறித்து ஒரு அறிக்கை கூட விடவில்லை. ‘ஆண்டவர்’ கூட இதில் அமைதி காப்பது, புரியாத புதிராக உள்ளது. ஒருவேளை, இது பம்மலா? அல்லது பதுங்கிப் பாயும் திட்டமா? என்பது ஆண்டவருக்கே வெளிச்சம்.
சூப்பர்ஸ்டாரை பொறுத்தவரை, அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்ற பாலிசி கொண்டிருப்பதால், நிச்சயம் அங்கிருந்து இந்த விஷயம் குறித்து வாய்ஸ் வராது என்றே தெரிகிறது.
மற்ற நடிகர்களோ, இப்போதைக்கு இந்த விஷயத்தை ஆறப்போட்டு பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறார்களாம். பாஜகவின் கோபத்தை சம்பாதித்துக் கொள்ளவேண்டாம் என்றும் அவர்கள் நினைக்கிறார்களாம்.
ஆனால் விஷாலோ, ‘என்னுடைய இந்தப் பிரச்னையை நான் சமாளித்துக் கொள்வேன். தனிப்பட்ட தாக்குதலாக இது தெரியவில்லை’ என்று கூறிவிட்டார்.
‘மெர்சல்’ படம் ரிலீசாகும் முன்பும் பிரச்சனை, ரிலீசான பின்பும் பிரச்சனை, இன்னும் அது தொடரும் என்றே தெரிகிறது.