வைரலான சுந்தர் பிச்சையின் நீட் தேர்வு கருத்து... வழக்கமான வாட்ஸ்அப் வதந்தி

நீட் தேர்வு போல ஒரு தேர்வை எழுதவேண்டியிருந்திருந்தால், தற்போது நான் கூகிள் நிறுவனத்தின் சிஇஓ என்ற நிலைக்கு வந்திருக்க முடியாது

கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார் என வாட்ஸ் அப்பில் வைரலாக செய்தி பரவி வருகிறது. ஆனால்,அது வழக்கம் போல பரவி வரும் வதந்திகளில் ஒன்று என தெரியவந்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் சிஇஓ என உயர்ந்த பதவியில் இருப்பவர். கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் கூகுளின் சிஇஓ-வாக பதவியேற்றார். பெற்றோர் ரகுநாத பிச்சை மற்றும் லட்சுமி. மதுரையில் பிறந்தவரான சுந்தர் பிச்சை, சென்னை ஜவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். பின்னர் வனவாணி பள்ளியில் 12-ம் வகுப்பை படித்து முடித்தார். இதன்பின்னர் ஐஐடி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்றார். தொடர்ந்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம். எஸ் (Material Sciences and Engineering) பட்டம் பெற்றார். பின்னர் வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.

கடந்த 2004-ம் ஆண்டு கூகிள் நிறுவத்தில் இணைந்த சுந்தர் பிச்சை, கூகிள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்பு தொகுப்புகளில் முக்கிய பங்கு வகித்தார். 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆன்டி ரூபின் பதவி விலகிய போது, ஆண்ட்ராய்டு பிரிவின் தலைவரானர் சுந்தர்பிச்சை. இதையடுதது 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் கூகிள் நிறுவனத்தின் சிஇஓ-வாக சுந்தர் பிச்சை பதவியேற்றார்.

நீட் தேர்வை நடத்த தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு இருந்த போதிலும், கடந்த 7-ம் தேதி நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. பல்வேறு சர்ச்சைகள் என இன்னமும் நீட் தேர்வு குறித்து எழுந்தவாறே இருக்கிறது. நீட் தேர்வின் காரணமாக தமிழக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சமூக வலைதளமாக வாட்ஸாப்பில் சுந்தர் பிச்சை நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளதாக செய்தி ஒன்று வைரலாக பரவி வருகிறது.

அந்த வாட்ஸாப் செய்தியில் “சுந்தர் பிச்சை ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நீட் தேர்வினால் மருத்துவ மாணவர்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான் நீட் தேர்வு போல ஒரு தேர்வை எழுதவேண்டியிருந்திருந்தால், தற்போது நான் கூகிள் நிறுவனத்தின் சிஇஓ என்ற நிலைக்கு வந்திருக்க முடியாது” என்று கூறியதாக வைரலாக பரவி வருகிறது. ஆனால், சுந்தர் பிச்சை அவ்வாறு எதுவும் கூறவில்லை என்பதே உண்மை. வழக்கமாக வாட்ஸாபில் பரவி வரும் வதந்திகளில் இதுவும் ஒன்று என தெரியவந்துள்ளது. சுந்தர் பிச்சையின் பேஸ்புக் கணக்கு, ட்விட்டர் கணக்கு ஆகியவற்றை பார்த்த போது, நீட் தேர்வு குறித்து அவர் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது தெரியவந்தது.

வாட்ஸாப்பில் யார் யாரோ கிளப்பிவிடும் புரளிகள், மக்களிடத்தில் உண்மையென பதிவாகிவருகிறது. தொழிற்நுட்பம் வளர்ந்துவரும் இக்காலத்தில், வதந்திகளை பரப்புவது மிக எளிதாகிவிட்டது. வாட்ஸ்அப்பில் வரும் செய்திகளை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் முன், மக்கள் அந்த செய்தியின் நம்பகத் தன்மையை சோதனை செய்வது மிக அவசியம். அவ்வாறு செய்தால் மட்டுமே வதந்திகள் பரவுவதை தடுக்க முடியும்.

×Close
×Close