ரஜினிகாந்த் புத்தாண்டு பரிசாக தனது அரசியல் என்ட்ரியை வெளியிட இருக்கிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவும் அவரை உற்சாகப் படுத்தியிருக்கிறது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நீண்ட காலத்திற்கு பிறகு கடந்த மே மாதம் 15 ஆம் தேதி, தனது ரசிகர்களை சென்னையில் உள்ள அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு அழைத்து சந்தித்தார். 32 மாவட்டங்களில் சுமார் 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை ரஜினி சந்தித்தார்.
அப்போது பேசிய ரஜினி, "நம்மை விமர்சிப்பவர்களை கண்டு அஞ்சாதீர்கள். எதிர்ப்புகள் இருக்கத் தான் செய்யும். தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லாமல் போச்சு. என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கு நான் திரும்பி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பது தவறா? போருக்கு தயாராக இருங்கள்” என்று தனது அரசியல் என்ட்ரி குறித்து சூசகமாக தெரிவித்தார்.
மீதமுள்ள 17 மாவட்ட ரசிகர்களை அடுத்த மாதமே சந்திப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், காலா ஷூட்டிங் தொடங்கியதால் முழுக்க ரஜினி அதில் பிஸியானார். அதன் பிறகு இன்று டிச.,26 முதல் டிச.,31 வரை இரண்டாவது கட்டமாக மீதமுள்ள மாவட்டத்தின் ரசிகர்களை அவர் சந்திக்கிறார். அடுத்த சில நாட்கள் இதுதான் தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக இருக்கப்போகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இந்த சந்திப்பின் போது, இறுதி நாளான 31ம் தேதி, தனது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என தமிழருவி மணியன் கூறியிருந்தார். அதை இன்று ரஜினிகாந்தும் ரசிகர்கள் மத்தியில் அறிவிப்பாக வெளியிட்டார். இதனால், தமிழகம் முழுவதிலும் உள்ள ரஜினி ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உள்ளனர்.
ஒவ்வொரு முறையும் ரஜினி இப்போது அரசியலுக்கு வருவார், நாளைக்கு அறிவிப்பு வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன. ஆனால், ஒவ்வொரு முறையும் மிஞ்சியது ஏமாற்றமே. பல வருடங்களாக அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என்பதை யோசித்துக் கொண்டே இருக்கிறார் என்பதே ரஜினி மீதுள்ள குற்றச்சாட்டு.
இம்முறை நிலைமை வேறு. இதற்கு மேலும் ரஜினி எதையும் நேரடியாக அறிவிக்காவிட்டால், அவரது ரசிகர்களே அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது போன்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. இனியும் தாமதப்படுத்துதல் என்பது தன்மீது கண்டிப்பாக உச்சக்கட்ட வெறுப்பை ஏற்படுத்திவிடும் என்பதை ரஜினி நன்கே உணர்ந்து விட்டார். அதன் எதிரொலியே இன்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.
அரசியலுக்கு வர அறிவு மட்டும் முக்கியம் அல்ல, வியூகமும் தேவை என ரஜினி இன்று கூறினார். அவரது இந்தப் பேச்சு ஆர்.கே.நகர் தேர்தல் முடிவை மனதில் வைத்து பேசப்பட்டது என்கிறார்கள். ஆர்.கே.நகரில் இரு பெரும் கட்சிகளை எதிர்த்து சுயேட்சையாக புதிய சின்னத்தில் நின்ற டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இதன் மூலமாக பெரிய கட்சிகள்தான் ஜெயிக்க முடியும் என்கிற மாயை தகர்துவிட்டதாக ரஜினி கருதுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
தவிர, இரட்டை இலை, உதயசூரியன் என சின்னங்கள் முக்கியமல்ல என்பதையும் ஆர்.கே.நகர் உறுதிப் படுத்துகிறது. இதையும் பாசிட்டிவான அம்சமாக ரஜினி கருதுவதாக கூறுகிறார்கள். ஆர்.கே.நகரில் பணப் புகார்கள் ஒருபக்கம் இருந்தாலும், டிடிவி தினகரன் மக்களை சந்தித்த விதம், மீடியாவை தனது பக்கம் எப்போதும் திருப்பி வைத்திருக்கும் லாவகம் ஆகியவற்றைத்தான் வியூகமாக ரஜினி கருதுகிறார்.
தீவிரமாக அரசியல் பேசி வந்த கமல்ஹாசன், ஓகி புயலுக்கு பிறகு காணாமல் போய்விட்டது, திடுதிப்பென களம் இறங்கிய விஷால் அதே வேகத்தில் வெளியேறிவிட்டது ஆகியனவும் ரஜினியை களம் இறங்க இதுதான் தருணம் என உணர வைத்திருக்கின்றன. தமிழகத்தில் இப்போதைக்கு பெரிய கட்சியான திமுக.வை எதிர்த்தே அரசியல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதை ரஜினி அறிவார். அதற்காக இப்போதைக்கு டெல்லி அதிகார வர்க்கத்தின் ஆதரவு தனக்கு தேவை என ரஜினி கருதுவதாக கூறுகிறார்கள். இதெல்லாம்தான் அவரது வியூகம் பட்டியலில் வருகின்றன.
அரசியலுக்கு வர விருப்பம் இல்லையென்றால், ரஜினி இப்படி குறிப்பிட்ட ஒரு தேதியை குறிப்பிட்டு அறிவித்திருக்க தேவையில்லை. தவிர, புத்தாண்டுக்கு முந்தைய தினம் நெகடிவான அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தும் முடிவையும் அவர் எடுக்கவே மாட்டார். எனவே புத்தாண்டு பரிசாக ரஜினி தனது ரசிகர்களுக்கு கொடுக்கப் போவது, அரசியல் என்ட் ரிதான்! அவரது அரசியல் என்ட் ரி, தனிக்கட்சியாகவே இருக்கும்.
இப்போதைக்கு தனி ஆளாக மக்கள் பிரச்னைகளை முன்வைத்து அரசியல் செய்வார். தேர்தல் வரும்போது பாஜக.வுடன் கரம் கோர்ப்பார் என்கிறார்கள் அவரது வியூகத்தை அறிந்தவர்கள்!