நிலையான சினிமா டிக்கெட் விலை இல்லாமல், ஏற்ற, இறக்கங்கள் கொண்ட டிக்கெட் விலை நிர்ணயம் செய்யும் பட்சத்தில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கான டிக்கெட் விலை உயர வாய்ப்புள்ளது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் படி, அதிகபட்சமாக 28 சதவீதம் வரை வரி வசூலிக்கப்படுகிறது. அதன்படி, அதிகபட்ச வரியான 28 சதவீதம் திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது. ரூ.100-க்கு கீழ் டிக்கெட் வசூல் செய்தால் 18 சதவீதமும், ரூ.101 முதல் விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதமும் வரி செலுத்த வேண்டும் என்பது ஜிஎஸ்டி முறை. மேலும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுகளுக்கு 30 சதவீத கேளிக்கை வரி வசூலிக்கும் முறை ஏற்கனவே நடைமுறையில் இருப்பதால், திரையரங்கங்கள் 58 சதவீத வரி செலுத்த வேண்டியுள்ளது.
இந்த வரிவிதிப்பு முறைக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வரி விதிப்பு முறையே கண்டித்து, ஜூலை 3-ம் தேதி முதல் திரையரங்குகளை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு அடைத்து திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, கேளிக்கை வரி வசூலிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, டிக்கெட் விலையுடன், ஜிஎஸ்டி வரி மட்டும் சேர்த்து விற்பனை செய்ய அரசு அனுமதித்தது. மேலும், திரையரங்கு உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைக்கு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்தே போராட்டம் கைவிடப்பட்டு திரையரங்கங்கள் திறக்கப்பட்டன.
பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில், இன்னும் ஒரு கட்ட பேச்சுவார்த்தை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நிலையான டிக்கெட் விலையை நிர்ணயம் செய்யாமல் ஏற்ற, இறக்கங்கள் கொண்ட டிக்கெட் விலையை நிர்ணயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த யோசனையை பேச்சுவார்த்தையின் போது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அரசிடம் தெரிவித்துள்ளனர். இந்த யோசனைக்கு அரசும் சம்மதம் தெரிவிக்கும் மனப்பான்மையில் உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒருவேளை இந்த யோசனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு செயல்வடிவம் கொடுக்கப்படும் போது, ரஜினிகாந்த், கம்ஹாசன் போன்ற நடிகர்களின் படங்கள் உயர் மதிப்பு படங்களாக கருத்தில் கொள்ளப்படும். அத்தகைய படங்களுக்கு டிக்கெட் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும். அஜீத், விஜய் போன்ற நடிகர்களின் படங்களும் உயர் மதிப்பு படங்களாக எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்புள்ளது. அதேசமயம், மற்ற படங்களுக்கான டிக்கெட் விலையானது, தற்போதைய விலையை விட குறைய வாய்ப்புள்ளது.
அதன்படி, சென்னையில் சினிமா டிக்கெட் விலை ரூ.50 – ரூ.160 வரை விற்பனை செய்யப்படும். அதேபோல், சென்னை தவிர தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் டிக்கெட் விலை அதிகபட்சமாக ரூ.140 வரை விற்பனை செய்யப்படும். இந்த விலை தவிர வழக்கம் போல், ரூ.100-க்கு கீழ் உள்ள டிக்கெட்டுகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரியும், அதற்கு மேல் உள்ள டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படும். ஒருவேளை ஆன்லைன் புக்கிங் செய்தால் (ரூ.10 முதல் ரூ.30 வரை) அச் சேவையை வழங்கும் நபர்களால் அதற்கு தனிக் கட்டணம் வசூலிக்கப்படும்.