நாடு முழுவதும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 7–ந் தேதி நடந்தது. பல்வேறு மொழிகளில் வெளியான வினாத்தாள்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதுதொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது.
இதற்கு எதிராக சி.பி.எஸ்.இ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மதுரை ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடையை ரத்து செய்ததுடன் நீட் தேர்வின் முடிவை வெளியிட அனுமதியும் அளித்தனர்.
சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், மோகன் சந்தான கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு கடந்த 31–ந் தேதி விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், பிராந்திய மொழிகளில் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதியிருக்கிறார்கள் என்பதை மத்திய அரசு ஒரு பட்டியலாக மொழிவாரியாக தயாரித்து கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். அந்த பட்டியலில் எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்ற விவரம் மற்றும் ஆங்கிலம், இந்தி மொழிகளில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் மற்றும் பிராந்திய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் சதவீதம் ஆகிய ஒப்பீடும் அடங்கியிருக்கவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் பிராந்திய மொழிகளில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களைப் பற்றிய பட்டியல் தாக்கல் செய்ய மேலும் சிறிது அவகாசம் தேவை என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் மீதான விசாரணையை நாளைக்கு (வியாழக்கிழமை) ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இதற்கிடையில் மாணவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங், மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேதி நெருங்கி வருகிறது என்றும், அதனால் கலந்தாய்வுக்கான தேதியை மேலும் நீட்டிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு நீதிபதிகள் இந்த வழக்கின் போக்கையொட்டி அந்த தேதியை முடிவெடுக்கலாம். இப்போது கலந்தாய்வு தேதியை ஒத்திவைக்க தேவையில்லை என்று கருத்து தெரிவித்தனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வுக்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது. தமிழக கட்சிகளும் இதனை வன்மையாக கண்டித்து வருகின்றன. மத்திய அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கவில்லை. மாநில பாடத்திட்டத்தின்படி படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையும் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.