சசிகலாவின் சீராய்வு மனு தள்ளுபடி : உச்சநீதிமன்றத்தில் மிச்சமிருக்கும் இன்னொரு வாய்ப்பு

சசிகலாவின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் இன்னொரு வாய்ப்பு அவருக்கு மிச்சமிருக்கிறது. அது, ‘கியுரேட்டிவ் பெட்டிஷன்’!

சசிகலாவின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் இன்னொரு வாய்ப்பு அவருக்கு மிச்சமிருக்கிறது. அது, ‘கியுரேட்டிவ் பெட்டிஷன்’ என அழைக்கப்படும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூருவில் தனி நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த வழக்கை நீதிபதி மைக்கேல் டி குன்ஹா விசாரித்து, 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்தார். இதை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீடை நீதிபதி குமாரசாமி விசாரித்து, நால்வரையும் விடுவித்து உத்தரவிட்டார்.

நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில், வருமானத்தை கணக்கீடு செய்ததில் கணித பிழை இருப்பதாக கூறி, கர்நாடகா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவராய் ஆகியோர் தனி நீதிபதி குன்ஹா பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு கூறினர். இந்த தீர்ப்புக்கு முன்னதாக ஜெயலலிதா மரணம் அடைந்ததால், அவருக்கு தண்டனை அறிவிக்கப்படவில்லை.

சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு பிறகு சீராய்வு மனு (ரிவ்வியூ பெட்டிஷன்) தாக்கல் செய்யும் வாய்ப்பு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் இருந்தது. அதன்படி, உச்சநீதிமன்றத்தில் அதே பெஞ்சில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தனர். ஆனால் அதற்குள்ளாக நீதிபதி பினாகி சந்திரகோஷ் ஓய்வு பெற்றதால், அவரால் அந்த பெஞ்சில் இடம்பெற முடியவில்லை.

10 நாட்களுக்கு முன்பு இந்த சீராய்வு மனு நீதிபதி அமித்தவராய், ரோகின்டன் பாலி நாரிமன் பெஞ்சில் விசாரணைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரோகின்டன் பாலி நாரிமனின் தந்தையும் மூத்த வழக்கறிஞருமான பாலி நாரிமன் தான் இந்த வழக்கில் குன்ஹா தீர்ப்பு சொன்னபோது ஜெயலலிதாவுக்கு ஜாமீன் பெற்றுக் கொடுத்தார். எனவே சசிகலாவின் சீராய்வு மனுவை ரோகின்டன் விசாரிப்பதற்கு முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, பொதுநல வழக்கு மைய இயக்குனரான பிரசாந்த் பூஷன் ஆகியோர் எதிர்த்தனர். அதைத் தொடர்ந்து ரோகின்டன் அந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து ஒதுங்கினார்.

கடைசியாக அமித்தவராய், எஸ்.ஏ.பாப்டே அடங்கிய பெஞ்சில் சீராய்வு மனு விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணையைப் பொறுத்தவரை, வழக்கறிஞர்களின் வாதம் கிடையாது. திறந்த நீதிமன்றத்திலும் விசாரணை நடைபெறாது. நீதிபதிகளின் சேம்பரில் இரு நீதிபதிகளும் சசிகலாவின் சீராய்வு மனுவை இன்று (ஆகஸ்ட் 23) ஆய்வு செய்தனர். ‘நாங்கள் மூவரும் அரசு ஊழியர்கள் அல்ல. எனவே ஊழல் தடுப்புச் சட்டம் எங்களுக்கு பொருந்தாது. இந்த வழக்கை மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என அவர்கள் சசிகலா உள்ளிட்ட மூவரும் தங்கள் மனுவில் கோரியிருந்தனர்.

நீதிபதிகள் அமித்தவராய், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் இதை ஆய்வு செய்து, சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தனர். இதன்படி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரின் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் உறுதி செய்யப்பட்டன.

இதன்பிறகும் உச்சநீதிமன்றத்தில் இன்னும் ஒரு வாய்ப்பு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் இருக்கிறது. அதாவது, உச்சநீதிமன்றத்தில் ‘ரிவ்வியூ பெட்டிஷன்’ தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும், ‘கியுரேட்டிவ் பெட்டிஷன்’ (நிவாரண மனு) தாக்கல் செய்ய அனுமதி இருக்கிறது. நீதித்துறையின் இறுதி உத்தரவிலும்கூட ஒரு பிழை இருந்துவிடக்கூடாது என்கிற நோக்கில் கொடுக்கப்படும் கடைசி வாய்ப்பு இது!

மிக அபூர்வமான வழக்குகளில் மட்டுமே, இந்த ‘கியுரேட்டிவ் பெட்டிஷனை’ உச்சநீதிமன்றம் ஏற்கும். முதல்முதலாக கடந்த 2002-ம் ஆண்டு ரூபா அஷோக் ஹுரா மற்றும் அஷோக் ஹூரா இடையிலான வழக்கில் இந்த வசதியை உச்சநீதிமன்றம் உருவாக்கியது. சீராய்வு மனுவை தண்டனை கிடைத்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் ‘கியுரேட்டிவ் பெட்டிஷனு’க்கு அப்படி காலக்கெடு இல்லை.

ஆனால் ரிவ்வியூ பெட்டிஷனில் சொல்லப்பட்ட அதே அம்சங்களை குறிப்பிட்டே கியுரேட்டிவ் பெட்டிஷனை தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கனவே சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகளைத் தவிர, உச்சநீதிமன்றத்தின் மிக மூத்த 3 வழக்கறிஞர்களுக்கு அந்த மனு அனுப்பப்படும். அவற்றை அவர்கள் பரிசீலிப்பார்கள். மெஜாரிட்டியான எம்.எல்.ஏ.க்கள் இதை விசாரிக்கலாம் என கருத்து கூறினால், மீண்டும் பழைய பெஞ்சுக்கே அனுப்பி மனுவை ஆய்வு செய்வார்கள்.

இந்த முறையும் வழக்கறிஞர்களின் வாதம் கிடையாது. சரியான அல்லது வலுவான காரணம் இல்லாமல் இந்த கியுரேட்டிவ் பெட்டிஷனை தாக்கல் செய்தால், நீதிமன்றம் அபராதம் விதிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த வாய்ப்பை சசிகலா பயன்படுத்துவாரா? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. சட்ட நிபுணர்களின் ஆலோசனையைப் பொறுத்து அவரது முடிவு இருக்கும்.

×Close
×Close