/indian-express-tamil/media/media_files/2025/10/13/tamilnadu-stalin-vijay-2025-10-13-11-47-39.jpg)
கரூர் குர்ட்ட நெரிசல் தொடர்பான வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள டெல்லி உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு அவசாகம் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தற்போது இருந்தே தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த செப்டம்பர் 27-ந் தேதி நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். இதில் பகலில் நாமக்கலில் பிரச்சாரம் செய்த விஜய், மதியம் கிளம்பி கரூருக்கு சென்றிருந்தார்,
பிரச்சார கூட்டத்தில் விஜய் பேசி முடித்தவுடன் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பரபரப்பு உருவானது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, குழந்தைகள் பெண்கள் உட்பட 41 பேர் பலியான நிலையில், 100-க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தங்கள் இரங்கலை தெரிவித்திருந்தனர். இந்த சம்பவத்திற்கு காவல்துறை சரியான பாதுகாப்பு அளிக்கவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியது.
அதே சமயம், தி.மு.க மற்றும் காவல்துறை சார்பில், விஜய் கூட்டத்திற்கு தாமதமாக வந்தார், த.வெ.க.கட்சியினர், இவ்வளவு பேர் வருவார்கள் என்று முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தனர். இதனிடயே, இந்த சம்பவம் நடந்த உடனே, ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்ற நிலையில், த.வெ.க கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கட்சியின் பொதுச்செயலாளர், இணை பொதுச்செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயக்கு, தலைமை பண்பு இல்லை என்று கடுமையாக விமர்சித்த நீதிபதி செந்தில்குமார் அவரது பிரச்சார வாகனத்தையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டிருந்தார். இதனிடையே இந்த வழக்கை, உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு சென்ற த.வெ.க.வினர், வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியதில் அடுக்கடுக்கான பல கேள்விகளை முன்வைத்தார்.
விசாரணை முடிந்து அக்டோபர் 13-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், கரூர் சம்பவம் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்திய முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், மதுரை வரம்புக்குள் வருவதை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு எப்படி விசாரித்தது? அரசு ஆணையம் அமைத்தபோதும், நீதிமன்றம் தன்னிச்சையாக எப்படி உத்தரவிட முடியும் என்று கேள்வி எழுப்பியது.
இந்நிலையில், இந்த வழக்கில், சம்பந்தப்பட்டோருக்கு தெரியாமலே சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், இது குறித்து விசாரிக்கப்படும் என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.