Supreme Court Lawyer Kiruba Munusamy accused Environmentalist Piyush Manush : சமூக செயற்பாட்டாளர் முகிலன் மீது ராஜேஷ்வரி என்ற பெண், கரூர் மாவட்டம், குளித்தலையில் புகார் ஒன்றை தொடர்ந்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டின் பின்னணி குறித்து முக்கிய ஆவணங்களை பிப்ரவரி 14ம் தேதி வெளியிட்டார் முகிலன். அதன் பின்னர் இரவு எழும்பூரில் இருந்து மதுரை செல்வதற்காக ரயில் நிலையம் வந்தவர் என்ன ஆனார் எங்கே சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. 144 நாட்கள் கழித்து திருப்பதி ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டார் முகிலன். தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் முகிலனுக்கு ஆதரவாக சூழலியல் ஆர்வலர் பியூஷ் மனுஷ் ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.
ஜூலை 8ம் தேதி அவர் வெளியிட்ட அந்த வீடியோவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீது அவதூறு பரப்புவதற்காகவே சிலர் பாலியல் புகார்களை முன்வைக்கின்றனர். இதனை அவர்கள் ஒரு பேட்டர்னாகவே செய்து வருகின்றனர் என்று குறிப்பிட்டார். மேலும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக இருக்கும் கிருபா முனுசாமி அவர்களை குறிப்பிட்டு, சில வருடங்களுக்கு முன்பு கிருபா தன் மீது வைத்த பாலியல் குற்றச்சாட்டுகளை மேற்கோள்காட்டியும் பேசியுள்ளார் பியூஷ். அதில் நான் அந்த பெண்ணை கையைப் பிடித்து இழுத்ததாகவும், காலைப்பிடித்து இழுத்ததாகவும் எங்கும் புகார் இல்லை. அவருடைய நிறத்தினை மையப்படுத்தி யாரோ சிலர் கேள்வி எழுப்ப அது அன்றைய சூழலில் பேசும் பொருளாகிவிட்டது என்று குறிப்பிட்ட அவர், ஜக்கி வாசுதேவின் கையிலிருந்து கிருபாவின் நண்பர்கள் நிலங்களை பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு குற்றம் சாட்டியுள்ளார். இதனை தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் வலுத்தது.
தன்னிலை விளக்கம் அளித்த கிருபா முனுசாமி
தன்னிலை விளக்கம் அளிப்பதற்காக கிருபா முனுசாமி தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில் நான் முகிலனுக்கு ஆதரவாகவே தான் இருக்கின்றேன் என்றும், ராஜேஸ்வரி முகிலன் மீது கொடுத்த புகார் ஆனது நான் பியூஷ் மீது கொடுத்த புகாரில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இதன் மூலம் இதில் எந்தவிதமான பேட்டர்னும் இல்லை என்பது அப்பட்டமாகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். பியூஷை பொறுத்த வரையில் ஒரு பெண்ணையை கையைப்பிடித்து இழுத்தால் மட்டுமே அது பாலியல் துன்புறுத்தல் ஆகின்றது. “ஒரு பெண்ணை தவறான எண்ணத்துடன் நெருங்க நினைப்பது பாலியல் துன்புறுத்தல் இல்லை என்று அவர் நினைக்கிறாரோ என்னவோ ” என்று கூறியுள்ளார் கிருபா.
முகிலனுக்கு எதிராக கவிஞர் தாமரை எழுதிய கட்டுரை டைம்ஸ் தமிழில் வெளியானது என்றும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நான் பியூஷ் குறித்து எழுதிய கட்டுரையை டைம்ஸ் தமிழ் வெளியிட்டது என்றும் தன்னுடைய வீடியோவில் பியூஷ் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நிற ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் எனக்கு நேர்ந்த நிகழ்வுகளை நான் என்னுடைய முகநூல் பக்கத்தில் மட்டும் தான் எழுதினேன். இவ்வளவு பெரிய விஷயத்திற்கு யாருமே ஆதரவு அளிக்காத நிலையில் அதற்கு கண்டனங்கள் தெரிவிக்கும் வகையில் டைம்ஸ் தமிழ் தன்னுடைய முகநூல் பதிவை வெளியிட்டது என்றும் கூறியுள்ளார். தாமரை இதுவரை முகிலனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டைம்ஸ் தமிழில் எதுவும் எழுதியதாக தெரியவில்லை என்றும் கூறியுள்ளார் கூறியுள்ளார். எப்போது நேரம் கிடைக்கும், கிருபாவையும் டைம்ஸ் தமிழையும் பழி தீர்த்துக் கொள்ளலாம் என்று பியூஷ் காத்திருந்திருக்கலாம் என்பதன் வெளிப்பாடு தான் இந்த வீடியோ.
நான் பியூஷ் மீது பாலியல் குற்றச்சாட்டினை முன்வைக்க வேண்டும் என்றிருந்தால் அவர் சிறைக்கு செல்வதற்கு முன்பே வைத்திருக்க வேண்டும். ஆனால் பியூஷ் மானுஷை “வாங்கரி மாத்தாய்” அளவிற்கு உயர்த்திப் பிடிக்கும் போது அவருடைய உன்முகத்தை வெளிப்படுத்தவே நான் குற்றச்சாட்டுகளை முன்வைத்தேன். அதுவும் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் ஒன்றாகவே பாலியல் குற்றச்சாட்டையும் வைத்தேன். அவருடைய ஆதரவாளர்கள் அதற்காக என்னை மிகவும் நெருக்கடியான நிலைக்கு உள்ளாக்கினார்கள். நேரம் வரும் போது காத்திருந்து அனைத்திற்கும் பழி தீர்த்து கொள்கிறார் பியூஷ் என்று அந்த வீடியோவில் கிருபா குறிப்பிட்டிருக்கிறார்.
2006 – 2007 ஆண்டுகளில் கிருபா, சூழலியல் செயற்பாட்டாளர் மனுஷுடன் இணைந்து வேலை பார்த்து வந்துள்ளார். கல்லூரி படிக்கும் கால கட்டத்தில் சமூக சிந்தனையோடு அவர் அந்த பணியை மேற்கொண்டாலும், ஒன்றரை மாதங்களுக்கு மேல் அவரால் அங்கு செயல்பட முடியவில்லை. இந்த நிகழ்வு நடைபெற்று 10 வருடங்கள் கழிந்த பிறகே பொதுவெளியில் 2016ம் ஆண்டு முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டார் கிருபா என்பது குறிப்பிடத்தக்கது.
பியூஷ் வெளியிட்டிருந்த முகிலன் ஆதரவு வீடியோவை பின்பு நீக்கிவிட்டார். அதற்கான விளக்கத்தை தன்னுடைய பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.