ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வருவதாக ஆளும்கட்சியினர் புகார் தெரிவித்து வருகிறார்கள். எனவே, குறிப்பிட்ட கால வரம்புக்குள் துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்தது.
இந்நிலையில், இந்த மனுவை நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது. இந்த நிலையில், மசோதா ஒப்புதல் விவகாரத்தில் ஆளுநர் ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது
அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில், "குடியரசு தலைவருக்கு ஒரு மசோதா அனுப்பபட்டால், அவர் அதன் மீது தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. மாறாக, குடியரசு தலைவர் ஒன்றிய அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்றுதான் முடிவெடுக்க முடியும், எனவேதான், முடிவு எடுப்பது ”aid and advice" அடிப்படையில் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது." என்று தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், "அரசியல் சாசன பிரிவு 200ன் கீழ் ஆளுநர் தனது விருப்பத்தின்படி, முடிவு எடுக்க முடியாதா?" என்று கேள்வி எழுப்பினர். அப்போது, "அரசியல் சாசனத்தின் அடிப்படையில், மாநில அமைச்சரவை ஆலோசனைப்படியே ஆளுநர் முடிவடுக்க முடியும். அரசியல் சாசன பதவி வகிக்கும் ஒருவர், அரசியல் சாசன விதிகளுக்கு மாறாக ஒரு மாநிலத்தின் மக்களை அவமதிப்பது, மாநிலத்தை செயல்படவிடாமல் தடுப்பது ஜனநாயகத்தின் தோல்வியாகும்." என்று தமிழ்நாடு அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், "ஆளுநர் ஏதோ தேவையில்லாத இடத்தில் உள்ளார் என்று சித்தரிக்கப்படுகிறது" என்று வாதிட்டார். அப்போது நீதிபதிகள், "ஆளுநர் பதவியை, அவரது அதிகாரத்தை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. ஏன் 12 மசோதாக்கள் மீது முடிவெடுக்கவில்லை என்றுதான் கேட்கிறோம். 2 மசோதாக்களை ஏன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்? 10 மசோதாக்கள் மீது ஏன் முடிவெடுக்க மறுத்தார்? என்பதுதான் கேள்வி. அரசு மறுபடியும் மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பும் போது மசோதாக்களை ஆளுநரால் நிறுத்திவைக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஆளுநர் தரப்பு, "ஆளுநர் மசோதாவை திரும்ப அனுப்பினால் அதனை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றுமனால் அது சட்டமாகிவிடும், பல்கலை. துணை வேந்தர் என்பது ஒரு மிக முக்கிய பொறுப்பு, அதனை அரசு மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று கருதுகிறீர்களா?" என்று கோரினர்.
அப்போது நீதிபதிகள், "அரசு என்ன செய்ய முன்வருகிறதோ அது ஆளுநருக்கு பிடிக்கவில்லை என்றால் அது அவருடைய சொந்தக் கருத்துதானே?" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ஆளுநர் தரப்பு, "தமிழ்நாடு அரசு மறைமுகமாக நீதிமன்றத்தின் மூலம் தங்களது மசோதாக்களை சட்டப்பூர்வமக்க கோருகிறார்கள்." என்று கூறினர் .
அப்போது நீதிபதிகள், "நாங்கள் கேட்பது, அனைத்து மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் வாய்ப்பு இருந்தபோது, ஏன் 2 மட்டும் முதலில் அனுப்பினார்? என்பதைக் கூறுங்கள். ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் நிறுத்தி வைத்தார் (with hold) என்றால் அது எந்த பிரிவின் படி?, அரசியல் சாசனம் 200 அல்லாமல் வேறு ஏதேனும் விதிமுறை உள்ளதா?
ஆளுநர் தனக்கு வேண்டியபடி சுயமாக முடிவு எடுத்துள்ளார். எந்த ஆதாரங்களும் ஆவணங்களும் இல்லாமல் மசோதாக்களை நிறுத்தி வைத்ததற்கு ஆதரவாக வாதிடுவதை ஏற்க முடியாது. ஆளுநர் ஏன் மசோதாக்களை நிறுத்தி வைத்தார் என்பதை தெரிவிக்க வேண்டும். 10 மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் நிறுத்தி வைத்ததற்கு என்ன காரணம் என்பதை விளக்க வேண்டும்" என்று கூறினர். மேலும் வழக்கு விசாரணை நாளை காலைக்கு ஒத்திவைத்தனர்.