நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி, சி எஸ் கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்து, அது தொடர்பான அறிக்கையை அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் 4-ம் தேதி நீதிபதி கர்ணனுக்கு மனநிலை குறித்து பரிசோதனை நடத்துவதற்காக மருத்துவக் குழுவினர் அவரது வீட்டிற்கு சென்றிருந்தனர். ஆனால், தான் நல்ல மனநிலையில் தான் இருப்பதாக கூறிய நீதிபதி கர்ணன், மனநல பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.
மேலும், தனக்கு மனநல பரிசோதனை நடத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகளுக்கு, மனநல பரிசோதனை நடத்த வேண்டும் என பதில் உத்தரவை பிறப்பித்தார். இந்த பரிசோதனையை எய்ம்ஸ் மருத்துவர் குழு மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.எஸ். கேஹர் உள்ளிட்ட 7 நீதிபதிகளும் தன்முன் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி அவர்கள் ஆஜராகவில்லை என்பதால், அவர்கள் அனைவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரவைத்தார். தொடர்ந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே எஸ் கேஹர் உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கு, தலா 5 ஆண்டுகள் கடும் சிறைத் தண்டணை விதிப்பதாக கர்ணன் உத்தரவிட்டிருந்தார். அதோடு மட்டுமல்லாமல், நீதிபதிகள் அனைவருக்கும் தலா ரூ.1,00,000 அபராதம் விதிப்பதாகவும், அவ்வாறு செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாத சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதற்காக நீதிபதி சி எஸ் கர்ணனுக்கு 6-மாத சிறைத் தண்டனை விதிப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனால், அவரைக் கைது செய்ய, கொல்கத்தா போலீசார் கடந்த மே மாதம் 10-ஆம் தேதி சென்னை விரைந்தனர். ஆனால், அன்றே அவர் சேப்பாக்கத்தில் உள்ள மாநில விருந்தினர் மாளிகையில் இருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்.
அப்போதிலிருந்து ஒரு மாத காலத்திற்கும் மேலாக கர்ணன் எங்கிருக்கிறார் என்று தெரியாமல், போலீசார் திணறி வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் ஜூன் 19-ஆம் தேதி கொச்சியில் இருந்து அவர் கோவை திரும்பியதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவை விரைந்த கொல்கத்தா போலீசார், ஜூன் 20-ஆம் தேதி அவரை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன், தனக்கு விதிக்கப்பட்டுள்ள 6 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால், இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், "நீங்கள் எத்தனை முறை மனுத் தாக்கல் செய்தாலும், அது விசாரிக்கப்படாது. நீங்கள் ஆறு மாதம் சிறைத் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். சிறை தண்டனையை ரத்து செய்யவும் முடியாது. சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று" என கூறியுள்ளது.