நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதாவின் தற்கொலை குறித்து, இரண்டு வாரங்களில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்தவர் மாணவி அனிதா. தலித் சமூகத்தை சேர்ந்த மாணவி அனிதாவின் தந்தை, திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அனிதா பன்னிரெண்டாம் வகுப்பில் 1200 மதிப்பெண்களுக்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றார். நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் பெற்றார்.
இந்நிலையில், நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு நடைபெற உத்தரவிட கோரி, சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், தன்னை எதிர்மனுதாரராக இணைத்துக்கொண்ட மாணவி அனிதா, நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றால் தன்னைப் போன்று கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களால் மருத்துவம் படிக்க இயலாது என வாதாடினார்.
இதையடுத்து, நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை கலந்தாய்வு நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், மருத்துவ படிப்பில் நுழையும் வாய்ப்பை இழந்த அனிதா, கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவ, மாணவிகள் சார்பில் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், வழக்கறிஞர் ஜி.எஸ். மணி என்பவர், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது, நீதிமன்ற உத்தரவை அவமதிப்பது போன்றது எனக்கூறி, அப்போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், அனிதா மரணம் தொடர்பான வழக்கை திங்கள் கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், இரண்டு வாரங்களில் அனிதா மரணம் குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இதனிடையே, கடந்த 16-ஆம் தேதி, அனிதாவின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் விசாரணை மேற்கொண்டார். அனிதாவின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் அளிக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என முருகன் தெரிவித்தார். மேலும், அனிதா மரணம் தொடர்பாக, 15 நாட்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.