தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்து கடந்த 2016-ஆம் ஆண்டில் தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது.
இதனை எதிர்த்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளித்திருந்தனர். அதில், பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த மனு மீது தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஆனால் இதை ஏற்காத தமிழக அரசு கடன் தள்ளுபடி என்பது கொள்கை சார்ந்த விஷயம் எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை பாரபட்சமின்றி ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
நீதிபதிகள் மதன் பி லோக்கூர், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்ற இந்த விசாரணையின் போது, அய்யாக்கண்ணு உள்ளிட்ட எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யக்கோரி, வருகிற 16-ம் தேதி முதல் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.
முன்னதாக, வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும், பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் சுமார் 41 நாட்களாக விதவிதமான போராட்டங்களை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.