சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.
கடந்த 1991-ஆம் அண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரை தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக அரசு வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த 2015-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தார்.
அதனையடுத்து, சிறை சென்ற ஜெயலலிதா தரப்பில் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசரித்த தனி நீதிபதி குமாரசாமி, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதன் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தும், அம்மாநில உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தும் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.
அதன்படி, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள் என கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும், ஜெயலலிதா காலமானதால் அவரை தவிர்த்து மற்ற மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சசிகலா தரப்பில் கடந்த மே மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த சீராய்வு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது. நீதிபதிகள், ரோஹின்டன் பாலி நரிமன், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு மீதான விசாரணை நடைபெறவுள்ளது.