காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.
இதில் கர்நாடகம் மற்றும் கேரள அரசுகள் தரப்பிலான வாதங்கள் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், தமிழக அரசின் இறுதிவாதம் கடந்த 2-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல குற்றச்சாட்டுக்களை முன்னடுக்கிய தமிழக அரசு, "காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் மிகவும் சோர்வு அடைந்து விட்டோம். எங்கள் உரிமையை பெறுவதில் மத்திய அரசின் உதவி எங்களுக்கு கிடைத்தது இல்லை. எங்கள் விவசாயிகளின் துயரங்கள் குறித்து கேட்கப்படுவது இல்லை.
ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்துக்கு உரிய தண்ணீர் பங்கினை வழங்க மறுக்கும்போது, மத்திய அரசு வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இந்தியாவின் கூட்டாட்சி தத்துவ முறையில் மத்திய அரசு தன்னுடைய பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது.
கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 11,700 குளங்கள் உள்ளன. இரு மாநிலங்களுக்கு இடையிலான நீர்ப்பங்கீட்டில் இந்த கொள்ளளவு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை. 1990-ம் ஆண்டில் கர்நாடகாவில் காவிரி பாசனம் செய்யப்படும் சாகுபடி நிலத்தின் அளவு 1.53 லட்சம் ஏக்கர் ஆகும். 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி 1.10 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யலாம் என்றே உள்ளது. ஆனால் காவிரி நடுவர் மன்றம் கர்நாடகாவுக்கு பாசனத்துக்கான நிலப்பரப்பளவு 6.57 லட்சம் ஏக்கராக ஒதுக்கியுள்ளது.
இதைப்போல கர்நாடக மாநிலத்தின் மண்வளம் நெற்பயிர் சாகுபடிக்கு ஏற்றது இல்லை என்று தெரிந்தும், அதைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து நெற்பயிர் சாகுபடி செய்து தண்ணீரை வெகுவாக வீணடித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவில் தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் வாடி, பருவ மழையும் எவ்வித உதவியும் செய்யாத நிலையில் கர்நாடகாவில் தண்ணீர் பெருமளவில் வீணடிக்கப்படுகிறது" என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹரின் பதவிக்காலம் நிறைவடைந்ததால், புதிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் ஏ.சேகர் நாப்டே, வக்கீல்கள் ஜி.உமாபதி, சி.பரமசிவம் ஆகியோர் ஆஜரானார்கள்.
தமிழக அரசின் விசாரணையின் முடிவில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது என்று தெரிவித்துள்ளது.
மேலும், "தமிழக அரசு கர்நாடக அரசை நம்பவில்லை என்றாலும், நீதிமன்றத்தை நம்பலாம். காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது. கூடுதல் நீரை இரு மாநிலங்களும் பயன்படுத்தும் வகையில் அணை கட்டலாம். நீரை முழுமையாக பங்கிட்டு வழங்க ஒழுங்குமுறை வாரியம் அமைக்கலாம்" என்றும் உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.