டிடிவி தினகரன் மீதான பெரா வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில் டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் பெயரில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் 44 லட்சம் பவுண்டு முறைகேடாக முதலீடு செய்தது தொடர்பாக கடந்த 1996-ஆம் ஆண்டில் டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறையினர் அந்நியச் செலாவணி மோசடி வழக்கைப் பதிவு செய்தனர்.
அதேபோல், ஐரோப்பிய நாடுகளில் ஹாப்ஸ்கேரப்ட் ஹோல்ட் என்ற பெயரில் ஹோட்டல் தொடங்குவதற்காக டிப்பர் இன்வெஸ்ட்மென்ட், டெண்டி இன்வெஸ்ட்மென்ட், பேனியன் ட்ரீ ஆகிய மூன்று நிறுவனங்கள் சார்பில் இங்கிலாந்து பார்க்லே வங்கியில் 36.36 லட்சம் அமெரிக்க டாலர் மற்றும் ஒரு லட்சம் பவுண்டு முறைகேடாக முதலீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக டிடிவி தினகரன் மீது கடந்த 1996-ல் அமலாக்கத்துறை மற்றொரு வழக்கையும் பதிவு செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி டிடிவி தினகரன் மீதான இந்த இரண்டு வழக்கு விசாரணையும் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த வழக்கின் விசாரணையை மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும் என எழும்பூர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதனை உத்தரவை எதிர்த்து, டிடிவி தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுபோன்று நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வழக்கை டிடிவி தினகரன் தொடரந்தால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எச்சரிக்கை விடுத்தது. மேலும், இந்த வழக்கை திரும்பப் பெறுகிறீர்களா? இல்லை அபராதம் விதிக்கவா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையேற்ற தினகரன் தரப்பு, வழக்கை திரும்பப் பெறுவதாக தெரிவித்ததையடுத்து, வழக்கு முடித்து வைக்கப்பட்டது.