தன்ஷிகாவை அழவைத்த டி.ராஜேந்தருக்கு நடிகர் விஷால் கண்டனம்

தன்ஷிகாவை மேடையில் அழவைத்த டி.ராஜேந்தருக்கு கண்டனங்கள் குவிகின்றன. ‘ஒரு படைப்பாளியிடம் இதை எதிர்பார்க்கவில்லை’ என நடிகர் சங்கத் தலைவர் விஷால் கூறினார்.

நடிகை தன்ஷிகாவை மேடையில் அழவைத்த டி.ராஜேந்தருக்கு கண்டனங்கள் குவிகின்றன. ‘ஒரு மூத்த படைப்பாளியிடம் இதை எதிர்பார்க்கவில்லை’ என நடிகர் சங்கத் தலைவர் விஷால் கூறினார்.

விழித்திரு படத்தின் குழுவினர் செப்டம்பர் 28-ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் நடிகை தன்ஷிகா பேசியபோது, டி.ராஜேந்தரின் பெயரை குறிப்பிடவில்லை. அடுத்து பேசிய டி.ராஜேந்தர், ‘இந்த விழித்திரு படத்தில் நடித்தபிறகுதான் கபாலியில் நடித்தார் தன்ஷிகா. சூப்பர் ஸ்டாருடன் நடித்ததால் இந்த ராஜேந்தரை அவருக்கு தெரியவில்லை. நீயெல்லாம் என பெயரைச் சொல்லியா, என்னை உலகுக்கு தெரியப் போகிறது? ஹன்சிகாவைப் பற்றியே கவலைப்படாத நான் தன்ஷிகாவைப் பற்றியா கவலைப்படுவேன்?’ என அடுக்கு மொழியில் அள்ளி விட்டார் டி.ஆர்.

அப்போது இடையிடையே தன்ஷிகா குறுக்கிட்டு, மன்னிப்பு கேட்டார். டி.ஆரின் காலையும் தொட்டு கும்பிட்டார். ஆனால் அவரை பேசவும் விடாமல், தானும் சமரசம் ஆகாமல், ‘மைக் உங்கிட்ட இருக்கும்போதே நீ பேசியிருக்கணும். 10 மாதத்தில பெத்தாதான் பிள்ளை. அப்புறம் வயிற்றில் இருந்தால், செத்துரும்’ என அவரை காயப்படுத்தும் விதமாக வசனத்தை டி.ஆர் எடுத்துவிட்டார்.

t.rajendar speech against actress sai danshika, t.rajendar speech at vizhithiru film function, actor vishal condemns t.rajendar

அப்போது கண்கலங்கிய தன்ஷிகா, ‘ஸாரி சார், உங்க மீது நான் ரொம்ப மரியாதை வைத்திருக்கிறேன்’ என்கிறார். அதற்கும் மசியாத டி.ஆர்., ‘நீ சாரி (சேலை) கட்டி வரலை, இப்போ ஸாரி கேட்கிற’ என தனது அடுக்கு மொழி புலமையை அள்ளி விடுவதிலேயே கவனம் செலுத்தினார். இந்தக் காட்சிகள் வீடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விழாக்களில் ஒருவரின் பெயரை மறந்து விடுவது பெரிய பாவச் செயல் இல்லை. அதை சுட்டிக்காட்டியதும் மன்னிப்பு கேட்டது, தன்ஷிகாவின் நல்ல பண்பை காட்டியது. ஆனால் மன்னிப்பு கேட்டபிறகும், மேடையில் அவரை காயப்படுத்தி டி.ஆர். பேசியது, சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

நடிகர் சங்க செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருமான விஷாலும் இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது. ‘விழித்திரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாக கண்டித்ததும் தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் கூட டிஆர் அவரை மன்னிக்காமல் தொடர்ந்து காயப்படுத்தியதையும் அறிந்தேன்.

டி.ராஜேந்தர் ஒரு மூத்த கலைஞர். பன்முக வித்தகர். மேடையில் ஒரு நடிகை பேசும்போது ஒருவரது பெயரை மறப்பது என்பது இயல்பானதே… நானே சில மேடைகளில் அருகில் அமர்ந்திருந்தவர் பெயரை மறந்திருக்கிறேன். டிஆர் சுட்டிக் காட்டிய பின்னர் சாய்தன்ஷிகா அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அப்படி மன்னிப்பு கேட்கும் தன் மகள் வயதையொத்த சாய்தன்ஷிகாவை பெருந்தன்மையாக மன்னித்திருக்கலாம். ஆனால் மென்மேலும் அவரைக் காயப்படுத்திய செயலை டிஆர் போன்ற ஒரு படைப்பாளியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

திரையுலகில் ஒரு பெண் நடிகையாவது எத்தனை சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு சாய்தன்ஷிகாவை நன்றாக தெரியும். அவரை அறிந்தவர்கள் அவர் அப்படி வேண்டுமென்றே அவமரியாதை செய்யும் குணம் கொண்டவர் அல்ல என்பதையும் அறிவர். அவர் மன்னிப்பு கேட்டும்கூட தொடர்ந்து காயப்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்திய டிஆர் அவர்களுக்கு நான் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு விஷால் கூறியிருக்கிறார்.

இந்த விஷயத்தில் தனக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் தன்ஷிகா. ‘பெண்கள் தனித்து விடப்படும்போது இதுபோன்ற ஆதரவு கிடைப்பது இயல்பானதுதான்’ என கூறினார் அவர்.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close