அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்பு கட்டாயம் என்ற உத்தரவை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வேல் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்பு கட்டாயம் ஆக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருக்கிறார். யோகாவில் பல நிலைகள் உள்ளன. உடற்பயிற்சி என்பதை தாண்டி வைதீகமத நம்பிக்கைகளின் அடிப்படையிலான தியான நிலைகளாகவே அவை இருக்கின்றன. இது முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு ஏற்புடையது அல்ல.
குறிப்பிட்ட ஒரு மதத்தினரின் வழிபாடு தொடர்பான வடிவங்களை உடற்பயிற்சி என்ற பெயரில் பிற மதத்தினர் மீது திணிப்பது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே, அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்பு கட்டாயம் என்ற உத்தரவை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இதற்குப் பதிலாக அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும். வாரத்தில் 2 வகுப்புகள் விளையாட்டுக்காக கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டு இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.