மத்திய அமைச்சரே கலவரத்தை தூண்டுவதா? பொன்னார் மீது புகார்

இந்துக்கள் மீதான தாக்குதலை தடுக்காவிட்டால், தமிழகம் கலவர பூமியாகும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

இந்துக்கள் மீதான தாக்குதலை தடுக்காவிட்டால், தமிழகம் கலவர பூமியாகும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கன்னியாகுமரி எஸ்.பி.யிடம் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஜூலை 9-ம் தேதி கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய கப்பல்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘தமிழகத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதை மாநில அரசு கட்டுப்படுத்தாவிட்டால், தமிழகம் கலவர பூமியாகும்’என குறிப்பிட்டார். இதற்கு இடதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சமூக வலைதளங்களிலும் மத்திய அமைச்சரின் பேச்சு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
இந்தச் சூழலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் குமரி மாவட்ட கிளை சார்பில் அந்த மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டிடம் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில், ‘கோவையில் ரமேஷ் என்பவர் மீதான தாக்குதலை குறிப்பிட்டே இந்த பேட்டியை பொன்னார் வழங்கியிருக்கிறார். மேற்படி ரமேஷ், அவரது தவறான நடவடிக்கை காரணமாக எந்த மத விரோதமும் இல்லாத நபர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்.
அதைக்கூட புரிந்துகொள்ளாமல் மத்திய அமைச்சர் அவசரப்பட்டு பேட்டி கொடுத்திருக்கிறார். இந்தியாவின் இதர பகுதிகளில் பா.ஜ.க. தலைவர்கள் பலர் இதேபோல பேசியிருக்கிறார்கள். அதனால் அங்கு கலவரங்கள் நடந்திருக்கின்றன. தமிழகத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் அண்ணன் – தம்பியாக வாழ்கிறார்கள். இந்தச் சூழலில் இங்கும் கலவரத்தை தூண்டும் விதமாக பொன்னார் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. அவர் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!’என அந்த மனுவில் கூறியிருக்கிறார்கள்.

×Close
×Close