'ஒரே நாடு, ஒரே வரி' எனும் கொள்கையின் அடிப்படையில், ஜி.எஸ்.டி. வரி நாடு முழுவதும் கடந்த 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதன்படி தமிழக திரைத் துறையினருக்கு 28% சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரியும், மாநில அரசின் 30% கேளிக்கை வரியையும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாநில அரசின் இந்த கேளிக்கை வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த திங்கட்கிழமை முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் மூடப்படுவதாக தமிழ் திரைப்பட வர்த்தக சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்தார். அதன்படி, சுமார் 1000 தியேட்டர்களில் அனைத்து பட காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்றுடன் மூன்றாவது நாளாக இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால், கடந்த வாரம் ரிலீசான சில படங்களின் தயாரிப்பாளர்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றனர். குறிப்பாக, கடந்த வெள்ளியன்று ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'இவன் தந்திரன்' படத்தின் இயக்குனர் ஆர்.கண்ணன், 'எனது படத்தை திரையிட உதவுங்கள்' என கண்ணீர் மல்க பேசிய ஆடியோ ஒன்று சமூக தளங்களில் பரவியது.
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடித்து வெளியான 'அதாகப்பட்டது மகாஜனங்களே' என்ற படமும் கடந்த வாரம் வெளியானது. ஆனால், தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டதால், 'என் மகன் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றான். அவன் மூன்று வருடமாக உழைத்ததற்கு பலன் இல்லாமல் போய்விட்டது' என்று சமீபத்தில் தம்பி ராமையா அளித்த பேட்டியில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த அபிராமி ராமநாதன், 'ஆர்.கண்ணன் மட்டும்மல்லாது கடந்த வாரம் வெளியான படங்கள் குறித்து, நிச்சயம் கலந்து பேசி ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்' என்றார்.
ஆனால் விஷால் தலைமையிலான திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தரவில்லை. இருந்தாலும் கடந்த மூன்று நாட்களாக தொடரும் போராட்டத்தால், பல கோடி ரூபாய் திரைப்பட துறையினருக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று தமிழகத்தில் கோரிக்கை எழுந்துள்ளது. ரசிகர்கள சந்தித்த அவரும், போர் வரும் போது நீங்கள் வாங்க என்று சூசகமாக அரசியல் பிரவேசம் பற்றி தெரிவித்தார். ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று சீமான், வேல் முருகன் போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தின் வாழ்வாதார பிரச்னைகளில் அவர் குரல் கொடுத்ததில்லை என்பது அவர்களது வாதம்.
ஆனால், இயக்குநர் சேரன் போன்றவர்கள், சினிமாவுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து ரஜினி குரல் எழுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளவர்கள், 'மோடி ரஜினிக்கு நெருக்கமானவர். எனவே அவர் மோடியிடம் பேசி இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என்று சொல்லி வந்தனர்.
கடந்த வாரம் காலா திரைப்பட படப்பிடிப்புக்காக மும்பை சென்றார், ரஜினி. அங்கு மழை பெயது வருவதால், படப்பிடிப்பு ரத்தானது. உடன் அவர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட்டார்.
இந்நிலையில் இன்று அதிகாலை அவருடைய ட்விட்டர் பக்கத்தில், 'தமிழ் திரைப்படத்துறையில் பணிபுரியும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அவர்களின் வேண்டுகோளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
Keeping in mind the livelihood of Lakhs of people in the tamil film industry, I sincerely request the TN GOVT to seriously consider our plea
— Rajinikanth (@superstarrajini) 4 July 2017
இந்த பிரச்னையில் ரஜினி இதுவரையில் அமைதியாக இருந்ததாக செய்யப்பட்ட விமர்சனம் இதன் மூலம் முடிவுக்கு வந்ததாக கருதுகிறார்கள். ரஜினி சென்னை திரும்பியதும், திரைப்பட துறையினருடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.