மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் தமிழக குடியரசு அணிவகுப்பிற்காக களமிறங்குகிறது. குடியரசு தினத்திற்கு தமிழ்நாட்டின் பிரதிநிதியாக அனுப்பப்பட்ட அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டதால் சர்ச்சை கிளம்பியது. இதனால் இந்த குறிப்பிட்ட ஊர்தியைப் பார்வையிட மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.
ஜனவரி-26ம் தேதி சென்னையில் அணிவகுப்பு நடைபெறும் பொழுது அலங்கரிக்கப்பட்ட இந்த ஊர்திகளை சமர்ப்பிப்பதற்காக கைவினைஞர்கள் முயற்சி செய்கிறார்கள். சுப்ரமணிய பாரதி, வ. உ. சிதம்பரம், வேலு நாச்சியார் மற்றும் மருது பாண்டியர் சகோதரர்கள் ஆகியவர்களை வைத்து 'சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற தமிழ் விடுதலை போராளிகள்' என்ற தலைப்பில் மூன்று அலங்கார ஊர்திகள் இடம்பெறும் என்று கூறுகிறார்கள்.
திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வில்லிங்டன் கல்லூரி மைதானத்தில் கைவினைஞர்கள், அலங்கார ஊர்திகளின் இறுதிக்கட்ட பணிகளை செய்து அணிவகுப்பிற்காக தயாராகிக்கொண்டு இருக்கின்றனர். விடுதலைப் போராளிகளுக்கு சரியான பிரதிநிதித்துவத்தை அளிப்பதற்காக களிமண்ணில் வடிவம் கொடுக்க தச்சர்கள், ஓவியர்கள் மற்றும் சிற்பிகளின் குழுக்கள் உழைக்கின்றனர்.
ஒரு ஊர்தியில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட முதல் ராணி வேலு நாச்சியார், ஈட்டிகளை ஏந்திய பெண் வீரர்களுடன் குதிரையில் ஏறிச் செல்வது போல உருவாக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தை பார்வையிட இந்த ஆண்டு கொரோனா காரணமாக பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும், இந்த ஆண்டு தமிழக குடியரசு தின நிகழ்வுகளில் ஒரு பகுதியாக அலங்கார ஊர்திகள் மீது கவனம் செலுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவிட் தொற்று பரவளின் அதிகரிப்புக் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலாச்சார நிகழ்வுகள் எதுவும் நடைபெறாது. இந்த நிகழ்வு 35 நிமிடங்களுக்கு மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளது. அணிவகுப்பிற்கு அரசுத் துறைகளிடமிருந்து வேறு எந்த விளக்கக்காட்சிகளும் கிடையாது என்று தகவல் வெளியாகிறது.
சென்னையில் நடைபெறும் குடியரசு தின நிகழ்வுக்குப் பிறகு, மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் அலங்கார ஊர்திகள் எடுத்துச் செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil