Advertisment

சுதந்திர தின விழா; ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்; மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டு மாணவர்களை, பெற்றோர்களை, அவர்களது எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையில் பேசி வரும் ஆளுநரை வன்மையாகக் கண்டிக்கிறேன்; முதல்வர் மு.க.ஸ்டாலின்

author-image
WebDesk
New Update
Governor Stalin

ஆளுனர் ஆர்,என்ரவி - முதல்வர் மு.க.ஸ்டாலின்

சுதந்திர தின விழாவையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தினை புறக்கணிக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை கூறியிருப்பதாவது, குமரிக் கடல் முதல் இமயப் பெருமலை வரை வாழும் மக்கள் ஒன்றுபட்ட சிந்தனையுடன் போராடிப் பெற்றதே இந்திய நாட்டின் விடுதலை ஆகும். அப்போது வாழ்ந்த முப்பது கோடி மக்களும் நாட்டு விடுதலைக்காகப் போராடியதன் விளைவே 1947 ஆகஸ்ட் 15 அன்று கிடைத்த வெற்றிச் செய்தி. இன்று, நாம் இந்தியத் திருநாட்டின் 77-ஆவது விடுதலை நாளைக் கொண்டாடுகிறோம் என்றால், இதற்காகத் தியாகம் செய்த அனைவரது போராட்டத்துக்கும் தலைவணக்கம் செலுத்தவே! போராடிப் பெற்ற விடுதலையை எந்நாளும், எச்சூழலிலும் போற்றிப் பாதுகாப்பதே அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி ஆகும்.

இதையும் படியுங்கள்: ஆளுனர் ஆர்.என் ரவி இதயம் கரையாது: நீட் தேர்வால் தந்தை- மகன் மரணம் பற்றி ஸ்டாலின் அறிக்கை

விடுதலை அடைவதற்கு முன்பே, 'ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்' என்று அனைவரையும் பாடச் சொன்னார் மகாகவி பாரதியார். விடுதலை பெற்ற இந்தியாவானது, அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் இந்தியாவாகத்தான் இருக்கும் என்று அந்தத் தமிழ்க்கவி கனவு கண்டார். நாட்டின் 77 ஆவது விடுதலை நாளைக் கொண்டாடும் நேரத்தில், சில நாட்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது தந்தை செல்வசேகர் ஆகிய இருவரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி, நம் முன்னோர் தம் இன்னுயிர் ஈந்து நமக்களித்த விடுதலை எல்லோருக்குமானதா அல்லது வசதி வெகு சிலருக்கானதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. அரியலூர் அனிதாவில் தொடங்கி இதுவரை விலைமதிப்பில்லா பல மாணவர்களின் உயிர்களை, நீட் தேர்வு முறை காரணமாக தமிழ்நாட்டில் நாம் இழந்திருக்கிறோம். இவர்களின் மரணங்கள் எழுப்பும் தார்மீகக் கேள்விகள் நமது மனச்சாட்சியை உலுக்கி வருகிறது.

ஆனால், ஏழை எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர், அவர்தம் பெற்றோரின் கனவுகளை, எதிர்கால நல்வாய்ப்புகளை இழந்து வரும் நிலையை உணர மறுத்து, தமிழ்நாட்டு ஆளுநர் இரக்கமற்ற வகையில் பேசி வருகிறார். ’நீட் தேர்வு விலக்குக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன். அந்த அதிகாரம் எனக்கு இருந்தால் நிச்சயம் நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன்' என்று பொதுவெளியில் ஆளுனர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது தமிழ்நாட்டு மாணவர்களையும், இளைஞர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏழு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்து வரும் நீட் எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் பொறுப்பில் இருப்பவர் பொறுப்பின்றிப் பேசுகிறார்.

தமிழ் மக்களைப் பற்றி அக்கறையுள்ளோர், தமிழர் உயிர் துறப்பதைக் கண்டு கலங்குவர். ஆனால், ஆளுநர் ரவியின் செயல்பாடுகள், 'அதைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை' என்பது போல உள்ளது. இந்த நிலை மாறவே, நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, சட்டம் இயற்றி, தமிழ்நாடு அரசு, மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது. மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள், இதற்கு ஒப்புதல் வழங்கக் கோரி, இன்று (14-8-2023) கடிதம் அனுப்புகிறேன்.

ஆளுநர், அரசியல் ரீதியாக திராவிடம் ஆரியம், தி.மு.க, திருவள்ளுவர். வள்ளலார், சனாதனம் பற்றிப் பேசி வருவதை நாங்கள் மதிக்கவில்லை. அது கபட வேடம் என்பதை அறிந்தே இருக்கிறோம், ஆரியப் புலம்பலாக ஒதுக்கித் தள்ளுகிறோம். ஆனால். ஏழை எளிய, விளிம்பு நிலை அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை அப்படித்தான் சிதைப்பேன் என்று நியமனப் பதவியில் இருக்கும் ஒரு ஆளுநர் கொக்கரிப்பார் என்றால், இது கல்வித் துறை மீது நடத்தப்படும் சதியாகவே கருதுகிறோம். தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம் எங்களுக்கு முக்கியமானது. நாங்கள் இந்த மாநிலத்திற்கு, இந்த ஆண்டு வந்து, அடுத்த ஆண்டு செல்பவர்கள் அல்ல. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ் மக்களுக்காக என்றென்றும் உரிமைக் குரலை எழுப்பும் ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

பல்கலைக் கழகங்களைச் சிதைத்தும் - உயர் கல்வித் துறையைக் குழப்பியும் - தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி தராமலும் - இதன் உச்சமாக தமிழ்நாட்டு மாணவர்களை, பெற்றோர்களை, அவர்களது எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையில் பேசி வரும் ஆளுநரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதன் அடையாளமாக ஆகஸ்ட் 15 அன்று, ஆளுநர் மாளிகையில், அவர் ஏற்பாடு செய்திருக்கும் தேநீர் விருந்தினைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Dmk Neet Stalin Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment