இது வாரிசுகள் யுத்தம்... ஜெயிக்கப் போவது யாரு?

ரஜினி ரசிகர்களை வெளிப்படையாக உற்சாகப்படுத்தும் வேலையை செய்து கொண்டே இருக்கிறார் சவுந்தர்யா.

வாரிசு அரசியல் என்பது உலகில்… இந்தியாவில்… தமிழகத்தில்… எங்குமே புதிதில்லை. ஆனால் தமிழகத்தில் முதல் முறையாக அரசியல் வாரிசுகள் சமூக ஊடகக் களத்தில் மோதுகிறார்கள். அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும், தமிழகத்தில் பிரதான போட்டியாளர்களாக இருப்பார்கள் என கணக்கிடப்படும் 3 தலைவர்களின் வாரிசுகள் அவர்கள் என்பது இன்னும் சுவாரசியம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் குமார், நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஆகியோரே அந்த வாரிசுகள்! இவர்களில் சபரீசன் பங்களிப்பைப் பற்றி அதிகம் விவரிக்கத் தேவையில்லை.

2016 தேர்தலுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் நடத்திய ‘நமக்கு நாமே’ நடைபயணத்தில் தொடங்கி, திமுக.வின் ஒவ்வொரு அசைவுகளிலும் சபரீசனின் பங்களிப்பு உண்டு. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி வியூகம், தற்போது பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’ நிறுவனத்துடன் கைகோர்ப்பு வரை சபரீசனின் கைங்கர்யம் என்பது பெரிய ரகசியம் இல்லை.

இப்போது, ‘ஒன்றிணைவோம் வா’ என்கிற பெயரில் ‘ஐபேக்’ வடிவமைத்துக் கொடுத்திருக்கும் செயல்திட்டத்தை முடுக்கி விட்டு, வேலை வாங்கிக் கொண்டிருப்பவரும் சபரீசனே. திமுக.வின் சமூக வலைதளப் பிரிவுதான் இப்போது இது போன்ற திட்டங்களுக்கு வேராகவும், விழுதுகளாகவும் இருக்கிறது. அந்த அணியின் செயல்பாட்டையும் சபரீசனே கண்காணிக்கிறார். மொத்தத்தில் வருகிற தேர்தலில் மு.க.ஸ்டாலினை முதல்வராக்கும் திட்டத்தை தோள் மேல் போட்டுக் கொண்டிருக்கும் சபரீசன், அதற்கு முழு முதல் ஆயுதமாக சமூக வலைதளங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சபரீசனுக்கு இதில் போட்டியாக நுழைந்திருப்பவர்தான், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் குமார். பொறியாளரான இவரும் நேரடி அரசியலில் இல்லை. சபரீசன் அளவுக்கு இன்னும் இவரது செயல்பாடுகள் வெளிப்படையாக அங்கீகாரம் பெறவும் இல்லை. ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இப்போதைய சமூக வலைதள ‘மூவ்’களுக்கு மூளையாக இயங்குகிறவர் மிதுன்!


எங்காவது மூலையில் ஒரு மூதாட்டிக்கு உணவு கிடைக்கவில்லை என்பதில் தொடங்கி, நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டுக்கு பால் பாக்கெட் வரவில்லை என்பது வரை முதல்வரின் ட்விட்டர் ‘டேக்’ மூலமாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுவதை கவனித்திருப்பீர்கள். இந்த நெட்வொர்க்கை, தேர்ந்த நிபுணர்கள் மூலமாக ஆபரேட் செய்கிறவர் மிதுன்தான்!

எப்படி திமுக தரப்பு பிரசாந்த் கிஷோரை பயன்படுத்துகிறதோ, அதேபோல மிதுன் தரப்புக்கு ‘ஸ்ட்ரட்டஜிஸ்ட்’டாக பிரதீப் பண்டாரி என்பவரை சுட்டிக் காட்டுகிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து செயல்பட்ட அனுபவம் கொண்ட டெல்லிக்காரர் இவர். பிரபல ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு சர்வேக்களை எடுத்துக் கொடுத்த அனுபவமும் பண்டாரிக்கு உண்டு.

பிரதீப் பண்டாரியின் ‘ஸ்ட்ரட்டஜி’ வழிகாட்டுதலில்தான் அண்மையில் முதல்வரின் வெளிநாட்டு கோட்-சூட் பயணங்கள், உள்ளூரில் விவசாயி கெட்டப் ஆகியன அமைந்ததாக கூறுகிறார்கள். மாநிலம் முழுவதும் பிரதீப் பண்டாரி டீம் சில சர்வேக்களை எடுத்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் இருக்கின்றன.

இதற்கிடையே திமுக தரப்பிடம் இருந்து விலகிய சுனில், கர்நாடகா அரசியல்வாதி ஒருவருக்கு வியூகம் வகுப்பாளராக சென்றார். ஏனோ மீண்டும் அவர், தமிழகத்திலேயே பணி செய்ய ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. அவரை பயன்படுத்த அதிமுக தரப்பு தயாராவதாக சொல்கிறார்கள்.
பிரதீப் பண்டாரி போதுமான அளவில் செயல்படுகையில் சுனில் எதற்கு? என்கிற முணுமுணுப்புகள் அதிமுக வட்டாரத்தில் இருக்கின்றன. அதையும் தாண்டி சுனில் அதிமுக தரப்பு ஆலோசகராக இடம் பெறுவது உறுதி என்றே தெரிகிறது. எனினும் திமுக போல அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இந்த விஷயத்தில் இருக்காது. தேர்தல் நெருக்கத்தில் இந்த ஸ்ட்ரட்டஜிஸ்ட்களை மிதுன் எப்படி கையாள்கிறார்? என்பதைப் பார்க்க வேண்டும்.

ஸ்ட்ரட்டஜிஸ்ட்களை அணுகியிருக்கும் இன்னொரு வாரிசு, சவுந்தர்யா ரஜினிகாந்த். எப்போது ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பை வெளியிட்டாரோ, அப்போதிருந்து ரஜினி குடும்பத்தில் அவரைத் தவிர கொஞ்சமேனும் அரசியல் சாயத்தை வெளிப்படையாக பூசிக்கொண்டிருப்பவர் சவுந்தர்யா மட்டுமே. இந்த லாக் டவுன் நேரத்திலும்கூட தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் செய்து வருகிற உதவிகளை தனது ட்விட்டரில் தவறாமல் ‘ரீ ட்வீட்’ செய்கிறார் சவுந்தர்யா. அதில் அவ்வப்போது பாராட்டு கமெண்ட்களும் இடம் பெறுகின்றன.

அதாவது, ரஜினி ரசிகர்களை வெளிப்படையாக உற்சாகப்படுத்தும் வேலையை செய்து கொண்டே இருக்கிறார் சவுந்தர்யா. நிஜம் என்னவென்றால், அந்த உதவிகளை வெவ்வேறு சேனல்கள் மூலமாக முடுக்கி விட்டு செய்ய வைப்பதிலும் சவுந்தர்யா பங்கு இருக்கிறது. சில அரசியல் வியூக நிபுணர்கள், அரசியல் விமர்சகர்கள் ஆகியோருடன் விவாதிக்கும் அளவுக்கு தொடர்பிலும் இருக்கிறார் சவுந்தர்யா. ரஜினியின் கட்சி அறிவிப்புக்கு பிறகு சமூகவலைதள வேலைகளை இவர் இன்னும் வேகப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.

வருகிற தேர்தல் சில தலைவர்களின் நேரடி மோதலாக இருக்கும்பட்சத்தில், அவர்களின் வாரிசுகள் இடையே சமூகவலைதள மோதலும் உக்கிரமாகவே இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close