சென்னையில் நடந்து வந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அய்யாக்கண்ணு நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று போராட்டத்தை தொடங்கினார்கள். இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது. விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் குதிக்கப்போவதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று காலை அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகளை முதல்வர் சந்திக்க அனுமதி கொடுத்தார். இந்த சந்திப்பின் போது உடன்பாடு ஏற்பட்டது.
முதல்வரை சந்தித்த பின்னர் அய்யாகண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :
5 ஏக்கர் மேலுள்ள விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டை திரும்பபெறுவது தொடர்பாக பரிசீலனை செய்வதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். வேளாண்துறை செயலாளரிடம் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
அறுபது வயதுக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 5000 ஓய்வூதியம் வழங்க 2 மாதத்திற்குள் முயற்சி செய்வதாக முதல்வர் உறுதியளித்துள்ளார். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் நகைகள் ஏலம் விடுவதை முழுமையாக நிறுத்துவதாக உறுதியளித்தார் . கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகை 8450 கோடி ரூபாயை வழங்க ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அத்திகடவு அவினாசி திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டாலும் மாநில அரசு நிதி ஒதுக்கி செயல்படுத்தும் என கூறியுள்ளார்
100 கோடி ரூபாயில் பாசன சங்கங்கள் அமைத்து விவசாயிகளுக்கு உதவுவதாக கூறியுள்ளார். மற்ற விவசாயிகளிடம் பேசிய பினனர் போராட்டத்தை கைவிடுவது குறித்து முடிவு எடுக்கபடும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
தலைமை செயலகத்தில் இருந்து போராட்டம் நடைபெறும் சேப்பாக்கம் வந்த அய்யாக்கண்ணு விவசாயிகளுடன் பேசினார். பின்னர் அவர் பேசிய போது, ‘போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. 2 மாதங்களுக்குள் முதல்வர் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் தொடரும்’ என அறிவித்தார்.