செருப்பால் தங்களை அடித்துக் கொண்ட தமிழக விவசாயிகள்: வேதனையின் உச்சக்கட்டம்!

"இந்தியாவில் விவசாயிகளாக இருப்பது பிச்சைக்காரர்களாக இருப்பதைவிட கேவலமானது"

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், பயிர்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இன்றைய போராட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பிய விவசாயிகள், தங்களது செருப்பை கழட்டி தங்களைத் தாங்களே அடித்துக் கொண்டனர். அப்போது பேசிய அய்யாக்கண்ணு, “இந்தியாவில் விவசாயிகளாக இருப்பது பிச்சைக்காரர்களாக இருப்பதைவிட கேவலமானது” என்றார்.

நேற்று நடந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தின் இறுதி நாளில், தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.55,000-லிருந்து, ரூ.1,05,000-ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதேசமயம், எம்.எல்.ஏ.க்களின் தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.2.5 கோடியாக உயர்த்தப்படுகிறதென முதல்வர் அறிவித்தார்.

இதனைக் கண்டித்தும் தற்போது தமிழக விவசாயிகள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயக் கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் கடந்த மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 23 வரை 41 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது டெல்லி வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளை சந்தித்துப் பேசினார்.

அதைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து, டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. மே 25-ம் தேதி வரை போராட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் விவசாயிகள் கடந்த ஜூலை 16-ஆம் தேதி டெல்லிக்கு வந்தார்கள். அய்யாக்கண்ணு தலைமையில் பிரதமர் வீட்டுக்குச் செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து, நாள் முழுவதும் காவல் நிலையத்தில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close