விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் பிரதமரின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக விவசாயிகளை டெல்லி காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
தேசிய வங்கிகளில் வாங்கப்பட்ட விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர்க்காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த மார்ச் மாதம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் 40 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நிவாரண போராட்டம், தங்களது சிறுநீரைக் குடித்தல், எலிக்கறி உண்ணுதல் உள்ளிட்ட பல்வேறு நூதன முறைகளில் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் நேரில் சந்தித்து ஆதரவு அளித்தனர்.
இதையடுத்து, விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மத்திய, மாநில அரசுகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். இதன்பின், ஊர் திரும்பிய தமிழக விவசாயிகள், மத்திய அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் டெல்லி சென்று போராட்டம் நடத்துவோம் என அவர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து, மத்திய அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி, கடந்த 14-ஆம் தேதி தமிழக விவசாயிகள் சுமார் 70 பேர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டனர். அவர்கள் ஞாயிற்றுக்கிழமை டெல்லி சென்றடைந்தனர். இந்நிலையில், விவசாயிகள் பிரதமர் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து, அவர்களை தடுத்து நிறுத்தி விவசாயிகளை டெல்லி காவல் துறையினர் கைது செய்தனர்.
“உறுதியளித்தபடி எங்கள் கோரிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நிறைவேற்றவில்லை. அதனால், நாங்கள் 100 நாட்களுக்கு டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.”, என அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
40 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் வறட்சி நிவாரண திட்டத்தை அறிவிக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.