Nilgiris News : 2011ம் ஆண்டு மாவனஹல்லா பகுதியில் சுற்றித்திரிந்த ரிவால்டோ யானையின் தும்பிக்கையில் அடிபட்டது. அந்த யானைக்கு மருத்துவர் அன்பழகன் கொடுத்த மருத்துவத்திற்கு பிறகு 2012 - 13 வாக்கில் அதன் காயம் சரியாக துவங்கியது. இருப்பினும், தும்பிக்கையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக முறையாக உணவினை எடுத்துக் கொள்வதில் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகிறது அந்த யானை. உதடு பிரிவுகளில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக சுவாச குழாய்கள் அந்த பகுதியில் சிறிய அளவிலேயே இருப்பதால் ரிவால்டோவிற்கு சுவாச பிரச்சனையும் உள்ளது.
மசினக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்திருக்கும் பகுதிகளுக்கு செல்லும் ரிவால்டோவிற்கு தேவையான உணவுகளை உள்ளூர்வாசிகள் கொடுக்க துவங்கினர். பல்வேறு சமயங்களில் உணவு தேவைக்காக அங்கிருக்கும் தனியார் ரெசார்ட் பகுதிகளுக்கு செல்வதையும் வழக்கமாக கொண்டிருந்தது.
வனத்துறையினர் அந்த யானையை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு அழைத்துச் செல்லும் பணியை மேற்கொண்டுள்ளனர். வாழைத்தோட்டத்தில் சுற்றித்திரிர்ந்த ரிவால்டோவை, மாவனஹல்லா, மசினக்குடி வழியாக தெப்பக்காட்டிற்கு அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர் வனத்துறையினர். ரிவால்டோவிற்கு சுவாசக்கோளாறு இருப்பதால் அதற்கு மயக்க ஊசி செலுத்துவது ஆபத்தை விளைவிக்கும் என்று அதனை நடத்தியே அழைத்து செல்கின்றனர் வனத்துறையினர்.
செவ்வாய் கிழமை அன்று துவங்கிய இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மசினக்குடியில் மற்றொரு யானையின் இருப்பை உணர்ந்த யானை காட்டிற்குள் ஓடி மறைந்துவிட்டது. விரைவில் அந்த யானையை தெப்பக்காட்டிற்கு அழைத்து செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர் வனத்துறையினர். கடந்த மாதம் மாவனஹல்லாவில் குடியிருந்த ஒரு சிலர் எஸ்.ஐ. யானை மீது எரியும் டையரை தூக்கி வீசியதால் பலத்த காயங்களுக்கு ஆளாகி அந்த யானை உயிரிழந்தது. மனித - யானை மோதல்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க : பெற்ற மகனை இழந்தது போல் துடித்தேன் – உருகும் பெல்லன்!
இது தொடர்பாக மசினகுடி வனக்கோட்டம், சிங்காரா வனச்சரக வன அலுவலர் காந்தனிடம் பேசிய போது, “செவ்வாய் கிழமை துவங்கிய இந்த பணி எந்த சிரமும் இன்றி நடைபெற்றது. முதல்நாள் இரவில் மாவனல்லாவில் தங்க வைத்தோம். இரண்டாம் நாள் இரவில் பொக்காபுரம் அருகே அமைந்திருக்கும் விபூதி மலைப் பகுதியில் யானை கொண்டு வந்து தங்க வைக்கப்பட்டது. வியாழக்கிழமை மாலை வரை சுமார் 7 கி.மீ எந்த பிரச்சனையும் இன்றி நடந்து வந்தது ரிவால்டோ. ஆனால் தன்னுடைய இருப்பிடமான மாவனல்லா மற்றும் மசினக்குடி பகுதியை தாண்டி காட்டிற்குள் செல்கின்றோம் என்பதை உணர்ந்தோ, அல்லது மற்ற யானையின் வாசத்தை அறிந்தோ காட்டிற்குள் மீண்டும் ஓடிவிட்டது” என்றார் காந்தன். நேற்று இரவு 09:30 மணி அளவில் அந்த யானையை மாவனல்லாவில் பார்த்ததாக வனத்துறையினர் தகவல்கள் தெரிவித்துள்ளனர். இன்றும் யானையை தேடும் பணி தீவிரமாக நடைபெறும் என்று அவர் கூறினார்.
15 கி.மீ நடைபயணத்தில் யானையை பாதுகாக்க பகலில் மருத்துவக்குழு உட்பட 20 பேரும், இரவில் 13 பேரும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். கரும்பு, வாழைப்பழம், தர்பூசணி மற்றும் அன்னாட்சி பழங்களை காட்டி மசினக்குடி வரை அந்த யானை அழைத்து வரப்பட்டுள்ளது. மேலும் கும்கிகள் வந்தால் மிரண்டுவிடலாம் என்று எண்ணியதால் யானைக்கு நன்கு பரீட்சையமான வேட்டைத்தடுப்பு காவலர் பண்டன், ஓய்வு பெற்ற வனத்துறை காப்பாளர் கணேஷ் ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
தனக்கு காயம்பட்டதில் இருந்து மாவனல்லா, வாழைத்தோட்டம் பகுதிகளை தாண்டி அது வெளியேறவே இல்லை. மக்கள் வாழும் பகுதியில் அதிகமாக சுற்றித்திரிந்த காரணத்தால் காட்டை கண்டு மிரளுவதாக பலரும் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க : உயர்ந்த மலைச் சிகரங்களில் வாழும் சைவப் பழங்குடிகள்; தொதவர்கள் குறித்த ஒரு பார்வை!
“இந்த யானை இங்கு தான் அடிக்கடி சுற்றிக் கொண்டிருக்கும். மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் அதற்கு உணவுப் பொருட்களை வழங்கி வந்தோம். ஆனால் அதற்கு மஸ்த் ஏற்படும் காலத்தில் என்ன செய்வது என்ற பயம் எங்களுக்கு இருக்கிறது. மதம் பிடித்து மக்கள் இருக்கும் பகுதிக்கு யானை வந்தால் அதனை எப்படி கையாளுவது என்பதில் எங்களுக்கு குழப்பம் நிலவி வருகிறது. பயமாகவும் உள்ளது” என்று பெயர் கூற விரும்பாத உள்ளூர்வாசி ஒருவர் குறிப்பிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.