கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம், அரசாணை-354ன் படி ஊதியம் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை தமிழ அரசு நிறைவேற்றுமாறு அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு கோரிக்கையளித்துள்ளனர்.
கொரோனா பேரிடரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு மருத்துவர்கள் ஓய்வின்றி பணியாற்றி வருகிறார்கள். நோய்த்தொற்று பரவலில் மருத்துவர்கள் உயிரிழந்த போதும், இங்கு தன்னலமின்றி தொடர்ந்து அர்ப்பணிப்போடு பணியாற்றி வரும் மருத்துவர்கள் மீது முதல்வரின் பார்வை விழவில்லை என்று வருத்தத்திற்குள்ளாகிறார்கள்.
இதை தொடர்ந்து அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழுவின் தலைவர், டாக்டர். எஸ். பெருமாள் பிள்ளை கூறியதாவது:
" தமிழக சுகாதாரத் துறை 10 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது, தற்போது எப்படி உள்ளது என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். இருப்பினும் இந்த அளவிற்கு சுகாதாரத் துறையை வலுப்படுத்த தங்கள் பங்களிப்பை வழங்கி வரும் அரசு மருத்துவர்களை கௌரவப்படுத்துவதற்கு பதிலாக, நாட்டிலேயே மிகவும் குறைவான ஊதியத்தை வழங்கி, அவமானப்படுத்துவதை நம் முதல்வர் நிச்சயம் விரும்ப மாட்டார் என்று நம்புகிறோம்.
தமிழகத்தில் சுகாதாரத் துறையை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை நம் முதல்வர் வெளிப்படுத்தியுள்ளார். அதே நேரத்தில் உலகிலேயே தமிழகத்தில் தான் மருத்துவர்கள் தங்களின் சம்பளத்திற்காக, பல வருடங்களாக, தொடர்ந்து போராடி வருகிறார்கள் என்பதை இந்த நேரத்தில் வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
பல மாநிலங்களில் இன்னமும் கிராமங்களில் மருத்துவர் இருப்பை உறுதி செய்வதே மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்நிலையில் கிராமப்புற சுகாதார சேவையில் முதல் இடத்தை பிடித்த தமிழகத்தில், அரசு மருத்துவர்களுக்கான உரிய ஊதியத்தை தருவதற்கு அரசு மறுத்து வருவது தான் வருத்தமளிக்கிறது.
மேலும் 2009ஆம் ஆண்டில், டாக்டர் கலைஞரின் ஆட்சியில் போடப்பட்ட அரசாணை - 354இல், 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை தருவதற்கு வழிவகை செய்யப்பட்டும், இதுவரை தரப்படவில்லை. இத்தனைக்கும் மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 300 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படுகிறது.
ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றுவது ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரி வரை பணியாற்றி வரும் இளைய மருத்துவர்களுக்கு பேருதவியாக இருக்கும். குறிப்பாக எத்தனையோ சவால்களை சந்தித்து வரும் அரசுப் பணியில் இருக்கும் முதல் தலைமுறை மருத்துவர்களை ஊக்குவிப்பதாக அமையும்.
மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியம் என்பது மக்களின் சுகாதாரத்திற்கான முதலீடு தானே தவிர செலவினம் அல்ல என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். மேலும், கர்நாடக உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் குறைவாக ஊதியம் தரப்படுவது என்பது நம் மருத்துவர்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்படுவதையே காட்டுகிறது.
மற்ற மாநிலங்களில் உள்ள மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களின் ஊதியத்தை விட, தமிழகத்தில் பணி செய்யும் சிறப்பு மருத்துவர்களின் ஊதியம் மிக குறைவாக இருப்பது எந்த வகையில் நியாயம்? கொரோனா சமையத்தில் கூட மருத்துவர்களின் உணர்வுகளை அரசு மதிக்கவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி என்ற டாக்டர் கலைஞரின் கொள்கையை செயல்படுத்தி வருவதாக முதல்வர் பெருமையாக கூறுகிறார். ஆனால் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட டாக்டர் கலைஞர் கொடுத்த அரசாணை - 354க்கு உயிர் கொடுப்பதோடு, உயிர்காக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் கிடைத்திட வழிவகுக்கும் நடவடிக்கையை எடுக்க அரசு மறுப்பது கேள்வியை எழுப்புகிறது.
எனவே தற்போது அச்சுறுத்தி வரும் ஓமைக்ரானை எதிர்கொள்ள, தமிழகத்தின் பலமாக உள்ள, அரசு மருத்துவர்களுக்கு, உரிய ஊதியம் கிடைத்திட மாண்புமிகு தமிழக முதல்வர் உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என வேண்டி, விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம். அதுவும் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை இப்போது நிறைவேற்றுவதன் மூலம் இந்த அசாதாரண சூழ்நிலையில், தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் அரசு மருத்துவர்கள், இன்னும் உற்சாகமாக பணி செய்ய வழிவகுக்கும் என்பதை உறுதியோடுத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதற்கு மேலும் அரசு மருத்துவர்களின் உணர்வுகளை அரசு புரிந்து கொள்ளாவிடில், சென்னையில் வருகின்ற ஜனவரி 19 அன்று தர்ணா போராட்டமும், பிப்ரவரி 10 அன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதமும் மேற்கொள்ள இருக்கிறோம்", என்று கூறுகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.