Entry Requirements in National Education Policy: கடந்த சில வருடங்களாக இந்தியாவின் கல்வி அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வர பல்வேறு முன்னெடுப்புகளை மத்திய அரசு செய்து வருகிறது. அனைத்து விதமான முன்னெடுப்புகளும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவிடுவதில்லை. மாநிலத்தில் நிலவும் சூழல், மக்களின் வாழ்வாதாரம், சமூக பொருளாதார சூழல், கல்வியின் தரம், கல்வி நிர்வாகம், கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சில முடிவுகள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சில முடிவுகள் நிராகரிக்கப்படுகிறது. மும்மொழிக் கல்வி, நீட் தகுதித் தேர்வு, தேசியக் கல்விக் கொள்கை போன்றவற்றை மாணவர்களின் நலனுக்கு சிறிதும் உறுதுணையாக இருக்காது என்று வெளிப்படையாக தன்னுடைய எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது தமிழக அரசு.
பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய உயர்க்கல்வித் தகுதி கட்டமைப்பின் வரைவில் (Draft National Higher Education Qualification Framework) இடம் பெற்றுள்ள நுழைவுத் தகுதிகளுக்கு (Entry Requirements) கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது தமிழக அரசு.
இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசியக் கல்விக் கொள்கை குறித்து மாநில அரசின் நிலைப்பாட்டை கோரும் மத்திய அரசின் மின்னஞ்சல், தமிழக அரசால் 18.02.2022 அன்று பெறப்பட்டது. இது குறித்து கல்வியாளர்கள், பொதுமக்களின் கருத்தினைப் பெற்று விரிவான ஆய்வை மேற்கொள்வதற்கு மாநில அரசுகளுக்கு குறைவான நேரமே வழங்கப்பட்டுள்ளது. எனவே வரைவு செயலாக்கத்திட்டம் (Draft Implementation Plan) குறித்து ஆய்வு செய்து விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Entry Requirements in National Education Policy – வரைவின் அம்சங்கள்
“பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு நுழைவுத் தகுதிகள் தேவை என்று வரைவு முன்மொழிவு செய்துள்ளது. 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியே பட்டப்படிப்பு படிக்க தேவையான அடிப்படைத் தகுதியாக இருக்கின்ற நிலையில், குறிப்பிட்ட அளவிலான சாதனைகள் உட்பட, நுழைவுத் தகுதிகளைப் பெற்ற மாணவர்களுக்கு, சேர்க்கை விதிமுறைகளின் படி முதலாம் ஆண்டு படிக்க வாய்ப்புகள் வழங்கப்படும்” என்று வரைவு குறிப்பிட்டுள்ளது

முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும், நுழைவுத் தகுதி என்று மத்திய அரசு வரையறை செய்திருக்கும் அளவுகளின் அடிப்படையிலும் தான் கல்வியை தொடர முடியும் என்பதையும் முன்மொழிகிறது இந்த வரைவு.
வரைவில் முதலாம் ஆண்டுடன் வெளியேறும் மாணவர்களுக்கு சான்றிதழும், இரண்டாம் ஆண்டில் வெளியேறும் மாணவர்களுக்கு பட்டயமும், மூன்றாம் ஆண்டில் வெளியேறும் மாணவர்களுக்கு பட்டமும் வழங்கப்படும். ஹானர்ஸ் படிப்பு படிக்க விரும்புபவர்கள் தங்களின் கல்வியை மேற்கொண்டு தொடரலாம். அதற்கு அவர்கள் 7.5% சி.ஜி.பி.ஏ-வைப் (CGPA) பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறுகிறது வரைவு.
நீட்டில் 505 மதிப்பெண்; தந்தையின் மரணம்; நிறைவேறுமா MBBS கனவு? முதல்வர் உதவியை நாடும் மாணவன்
கல்வியாளர்களின் கருத்துகள் என்ன?
பல்கலைக்கழக மானியக் குழுவின், தேசிய உயர்க்கல்வி தகுதி கட்டமைப்பு வரைவின் மூலம் தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்தவே மத்திய அரசு முயல்கிறது என்று கூறுகிறார் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
”இந்திய அரசியல் அமைப்பில் பல்கலைக்கழங்கங்கள் மாநிலப் பட்டியலில் 32வது அதிகார வரம்புகளில் ஒன்றாக உள்ளது. தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி உள்ளிட்ட கல்வி பொதுப்பட்டியலில் 25-வது அதிகாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னிச்சையாக, மத்திய அரசு இந்த அதிகாரங்களில் திருத்தங்களை ஏற்படுத்துவது இந்திய அரசியலமைப்பு, மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ள உரிமைகளை மீறுவதற்கு சமமானது.
மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள தேசிய கல்விக் கொள்கை மற்றும் தேசிய உயர்க்கல்வி தகுதி கட்டமைப்பு வரைவு பல்கலைக்கழகத்தின் அடிப்படையையே மாற்றி அமைக்கிறது. பல்கலைக்கழகம் தொடர்பான எந்த வித சட்டத்தையும் சம்பந்தப்பட்ட மாநில அரசே இயற்ற முடியும் என்கிற சூழலில், கல்லூரிகளுக்கு தன்னாட்சி அங்கீகாரம் வழங்க வரைவு பரிந்துரைக்கிறது. இதனால் பல்கலைக்கழகங்கள், தங்களின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, பாடத்திட்டம் வரையறை, தேர்வு நடத்துவது உள்ளிட்ட எந்தவிதமான கல்விப் பணிகளிலும் தலையிட முடியாத சூழலை தான் உருவாகும். இது கல்வி நிலையங்களின் நிர்வாக அமைப்பில் சிக்கலை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

சமூக நீதி எங்கே?
அனைத்துக் கல்லூரிகளும் தன்னாட்சி அங்கீகாரம் பெற்றுவிட்டால் பாடத்திட்டங்கள், மதிப்பெண், மாணவர் சேர்க்கை என்று அனைத்தையும் அந்த கல்லூரி நிர்வாகமே உறுதி செய்யும். இட ஒதுக்கீடு இந்த கல்லூரிகளில் வருங்காலத்தில் உறுதி செய்யப்படுமா என்ற கேள்வி எழுகிறது. அரசுகளின் தலையீடும் குறைய வாய்ப்புகள் உண்டு.
தனியார் கல்லூரிகள் தொடர்ந்து இயங்க தேவையான நிதியை அவை பெற்றிருக்கும். ஆனால் அரசு நிதியில் இயங்கும் கல்லூரிகளின் நிலைமை என்னவாகும்? வரைவு அமலுக்கு வரும் பட்சத்தில் 3-ல் 2 பங்கு அரசுக் கல்லூரிகள் மூடப்படும் அபாயம் ஏற்படும். இந்த கல்லூரிகளையே பெரிதும் நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பொருளாதார ரீதியில் பின் தங்கி இருக்கும் மாணவர்களின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.
இடை நிற்றல் அதிகரிக்கும்
வரைவில், அனைத்து கல்வி ஆண்டுக்கும் தகுதி அடிப்படையில் வாய்ப்பு என்று அறிவிக்கிறது மத்திய அரசு. 12ம் வகுப்பில் அவர்கள் (மத்திய அரசு) எதிர்பார்க்கும் தகுதிகளைப் பெற்றிருந்தால் மட்டுமே மாணவர்கள் கல்லூரியில் சேர முடியும். முதலாம் ஆண்டில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறும் வரை, பள்ளிகளில் இருப்பதைப் போன்றே அதே வகுப்பில் மாணவர்கள் படிப்பைத் தொடர வேண்டும் என்கிறது அரசு. ஒரு சில மாணவர்களுக்கு தங்களின் பாடத்திடங்களை புரிந்து கொள்ளவே அதிக காலம் எடுக்கும். சமூகம், பொருளாதாரம், அவர்களுக்கான வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்டையில் இந்த புரிதலுக்கான காலம் வேறுபடும்.
சிலர் முதலாம் ஆண்டில் தேர்ச்சி அடையாத பாடங்களை மூன்றாம் ஆண்டில் தேர்ச்சி செய்வதும் உண்டு. புதிய வரைவு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கல்வி கற்கும் காலத்தை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறது. இதனால் அதிக அளவில் கல்லூரியில் இருந்து வெளியேறும் மாணவர்கள் சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட மாணவர்களாகவே இருப்பார்கள்.
வரைவில் 3 ஆண்டுகளுக்கு மேல், விருப்பத்தின் அடிப்படையில், நான்காம் ஆண்டு படிக்கவும் மாணவர்கள் செல்லலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 4 ஆண்டுகள் படிக்கும் மாணவருக்கும் அதே ”டிகிரி” வழங்கப்படும் எனில்,சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும், பணி உயர்வு தருணங்களிலும் எந்த கல்வி அடிப்படையில் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்?
பொருளாதார தேவைக்காக வேலைக்கு செல்ல அவசியம் இல்லை என்ற உயர்த்தட்டு மாணவர்கள் நான்காம் ஆண்டு படிக்க முடியும். இதர மாணவர்களின் நிலை என்னவாகும்? மீண்டும், வசதி படைத்த, நன்கு கல்வி கற்ற சமூகத்தை சேர்ந்த, சமூக கட்டமைப்பில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் குறிப்பிட்ட சில பிரிவினரே தொடர்ந்து இத்தகைய திருத்தங்கள் / திட்டங்கள் மூலம் பயன் அடைவார்கள் என்றும் கூறினார் கஜேந்திர பாபு.
நிறைகளும் – குறைகளும் இருக்கிறது
கல்வி அமைப்பில் ஒரு சீர்திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்றால் அதில் நிறை – குறை இரண்டுமே இருக்கும். கல்லூரியில் முதலாம் ஆண்டோடு வெளியேறும் மாணவர்களுக்கு சான்றும், இரண்டாம் ஆண்டோடு வெளியேறும் மாணவர்களுக்கு பட்டயமும், மூன்றாம் ஆண்டில் பட்டமும் வழங்கப்படும் பட்சத்தில் அதனை நான் வரவேற்கின்றேன். இதற்கு முன்பு கல்லூரிப் படிப்பை பாதியிலேயே விடும் மாணவர்களுக்கு எந்த விதமான கல்வி தகுதிச் சான்றும் கிடைக்காது. ஆனால் இதில் அவர்களுக்கு சான்று கிடைப்பது ஒரு கல்வித் தகுதியாக கருதப்படும் என்கிறார் போட்டித் தேர்வு பயிற்சியாளரும் கல்வியாளருமான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
பட்டயம் கிடைத்தது வரை போதும் என்று வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம். “அரியர்ஸ்” இருந்தாலும் மூன்றாம் ஆண்டு முடித்தால் தான் “டிகிரி” கிடைக்கும் என்ற எண்ணம் மாறும் போது, மாணவர்கள் மேற்கொண்டு படிக்க ஆர்வம் காட்டுவார்களா என்ற சந்தேகம் எழுகிறது.

”அரசு தன்னுடைய வரைவில் குறிப்பிட்டிருக்கும் தகுதிகள் எதன் அடிப்படையில் அமைகிறது என்பதை ஆராய வேண்டும். ஏற்கனவே உள்ள தகுதியை உறுதி செய்கிறதா அல்லது புதிதாகத் தரம் பிரித்து, உயர் கல்விக்கான தகுதியை மறு நிர்ணயம் செய்கிறதா? முன்னதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மறுவரையறை – கண்டிப்பாக ஏற்பதற்கில்லை. ‘தகுதித் தேர்வு’ மூலம், புதிதாக ஒரு தகுதியை அறிமுகம் செய்தல், முற்றிலும் தவறானது.”
”கல்வி கற்றல் முறை, சூழல், கல்வி ஆண்டின் துவக்கம் என்பது தொடர்பாக நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விவகாரங்கள் நிறைய இருக்கிறது எனவே அரசு நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வு, தகுதி வரையறை என்பது போன்ற விசயங்களை தவிர்த்து, தேவையான பிரிவுகளில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன்” என்றார் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் அறிக்கை
இந்த சூழலில் வெளியான அமைச்சரின் 3 பக்க அறிக்கையில் மேலும், ”தேசியக் கல்விக் கொள்கை, அனைவருக்கும் கல்வி என்ற தமிழகத்தின் நிலைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் இருப்பதால் முதல்வர் ஸ்டாலினின் சீரிய தலைமையில் நடைபெறும் தமிழக அரசு அதனைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. பட்டப்படிப்பு பயில தகுதிகளை மாணவர்கள் நிறைவு செய்திருக்க வேண்டுமென்று இவ்வரைவு கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழக அரசின் கொள்கைக்கு ஏற்புடையதல்ல.
மருத்துவம், பொறியியல் படிப்புகளில் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் பயில நுழைவுத் தேர்வு தடையாக இருந்த காரணத்தால், அன்றைய முதல்வர் கருணாநிதியால் ரத்து செய்யப்பட்டது. இலவசக் கல்வி, கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, தேவையான அளவு கல்லூரிகளும், அவற்றில் போதுமான அளவு வேலை வாய்ப்பிற்கேற்ற பாடப்பிரிவுகளும் அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட சமூகநீதி உத்தரவுகளால் அனைத்து தரப்பு மாணவர்களுக்குமான கல்வி என்பது தமிழக அரசால் உறுதிப்படுத்தப்பட்டது என்று மூன்று பக்க அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே நீட் போன்ற தகுதி தேர்வுகள் நாடு முழுவதும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வுக்காக தனியாக சில ஆண்டுகள் படிப்பதும் அதிகரித்து வருகிறது. தோல்வி அடையும் போது விரக்தியில் தற்கொலை போன்ற தவறான முடிவுகளையும் மேற்கொள்கின்றனர். கல்வி கற்க வரும் முதல் தலைமுறையினர் ஏற்கனவே பிரச்சனைகளை அனுபவித்து வருகின்ற நிலையில் இது போன்ற ஒரு கட்டமைப்பு அவர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தை வெகுவாக குறைத்துவிடும். அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதை இத்தகைய திட்டங்கள், அறிவிப்புகள், வரையறைகள் உறுதி செய்கிறதா என்றால் ”இல்லை” என்பது தான் உண்மை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil