கோவையில் அரசு அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்திய சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். இதன் பின்னர், கோவையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தினார். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் கோவை இடம்பெற்றுள்ள நிலையில், கோவையின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அமைச்சர்கள் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவது என்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக உள்ள கிரண்பேடி, புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக அம்மாநில முதலமைச்சர் நாரயணசாமி குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில், தமிழக ஆளுநராக சமீபத்தில் பதவியேற்றுள்ள பன்வாரிலால் புரோகித், தமிழகத்தின் கிரண்பேடியாகிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. புதுச்சேரி போன்ற துணை நிலை ஆளுநர்களுக்கு சில அதிகாரங்கள் உள்ளன. ஆனால் தமிழகம் போன்ற மாநிலங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது, அமைச்சரவையை ஆலோசித்தே முடிவுகளை கவர்னர் எடுக்க வேண்டும். அதிகாரிகளை நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்துவது மரபு அல்ல.
இதே போலத்தான், கடந்த மே மாதம் தமிழக தலைமைச் செயலகத்தில், அப்போது மத்திய அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடு ஆய்வு நடத்தியது சர்ச்சையை கிளப்பியது. அந்த சமயத்தில் வெங்கையா நாயுடு கூறும்போது, துறை ரீதியிலான ஆய்வு தானே தவிர, அரசியல் நோக்கத்தில் எதுவும் மேற்கொள்ளவில்லை என்றிருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மாநில அரசில் வலுவான தலைவர் இல்லதாத நிலையை பயன்படுத்தி, மத்திய அரசு வரம்பு மீறி செயல்படுவதாக எதிர்கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர். ஆனால், வெங்கையா நாயுடு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்தித்துப் பேசி, தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தியதில் எந்தவித தவறும் இல்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சர் ஆய்வு நடத்தியது என்பது வரவேற்கத்தக்கது தான் என்றும் தம்பித்துரை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டுக்குத் தாடி எப்படி தேவையில்லையோ… அப்படியே மாநிலத்துக்கு கவர்னர் தேவையில்லை என்று கோஷம் எழுப்பிய திராவிட இயக்கத்தில் இருந்து உருவான அதிமுக ஆட்சியில் இருக்கும் போதே, கவர்னர் நேரடியாக ஆய்வு நடத்தியிருப்பது, ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அரசு அதிகாரிகளுடன் சுமார் 2 மணி நேரம் ஆளுநர் பன்வாரிலால் ஆலோசனை நடத்திய நிலையில், இதைத்தொடர்ந்து அமைச்சர் வேலுமணி ஆளுநரை சந்தித்துப் பேசினார்.