Advertisment

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த சதியா? முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் மாறிமாறி குற்றச்சாட்டு

தமிழக உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த சதி செய்கின்றனர் என்று தமிழக முதல்வர் பழனிசாமியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் மாறிமாறி குற்றம் சாட்டியுள்ளனர்.

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
முதல்வரின் தனிச் செயலர் மறைவு : இபிஎஸ், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்!

தமிழக உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த சதி செய்கின்றனர் என்று தமிழக முதல்வர் பழனிசாமியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் மாறிமாறி குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisment

தமிழக உள்ளாட்சித் தெர்தல் 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டபோது பழங்குடியினர் இடஒதுக்கீடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு டிசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியாகுமா என்பது பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அப்போது வார்டுகளில் பழங்குடியினருக்கு போதிய இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை என்று கூறி திமுக தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி உத்தரவிட்டது.

அதன் பிறகு, தமிழக உள்ளாட்சிகளில் தொகுதி மறுவரையறை, வார்டு மறுவரையறை செய்யப்பட்டு, உரிய இடஒதுக்கீடுகள் பின்பற்றப்பட்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்து 3 ஆண்டுகள் கடந்துவிட்டது.

எதிர்க்கட்சி திமுகவும் அதிமுக அரசு தோல்வி பயத்தில் தொடர்ந்து தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் கடத்தி வருவதாக குற்றம்சாட்டி வருகிறது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை முடிந்துவிட்டதாகவும் வருகிற டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையே, அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, ஆகிய அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்களை பெற்றது.

தமிழக அரசு, உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும் விதமாக அவசர சட்டத் திருத்தம் செய்து ஆளுநர் ஒப்புதல் பெற்று வெளியிட்டது.

இதனால், மக்கள் நிச்சயமாக தமிழக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உள்ளாட்சிகளில் தொகுதி மறுவரையறை, வார்டு மறுவரையை பணிகள் நிறைவு செய்யாமல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தக்கூடாது என்று திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

திமுகவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்து, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் புதிய மாவட்டங்கள் தொடக்க விழாவில் பேசிய, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “புதிய மாவட்டங்கள் உருவாக்குவதற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை. உள்ளாட்சித் தோ்தலை நடத்தும் அமைப்பு ஒரு தன்னாட்சி அமைப்பாகும். அவா்கள் நடத்தக்கூடிய தோ்தலை அதிமுக அரசு நிறுத்த முடியாது. ஆனால், திமுகதான் அதிமுக மீது குற்றம்சாட்டி நீதிமன்றம் மூலம் தோ்தலை நிறுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது. இதைத்தான் ஜெயலலிதா இருந்தபோதும் திமுக செய்தது. தற்போதும் அதே வேலையை அக்கட்சி செய்து வருகிறது.

அதிமுக எந்தக் காலத்திலும் தோ்தலுக்கு அஞ்சிய வரலாறு கிடையாது. எந்தத் தோ்தலையும் எதிா்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. ஆனால், ஸ்டாலின் உள்ளாட்சித் தோ்தலைத் சந்திக்க அஞ்சுவதால்தான் நீதிமன்றம் சென்று தோ்தலை எப்படியாவது நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா். அவா்களால் எக்காரணம் கொண்டும் தோ்தலை நிறுத்த முடியாது. 2018-ஆம் ஆண்டில் வாா்டு மறுவரையறை செய்யப்பட்டதன் அடிப்படையில் விரைவில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும்.” என்று கூறினார்.

இதனிடையே, புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் எங்கள் மாவட்டங்களில் தொகுதி மற்றும் வார்டுகள் மறுவரையறை செய்ய வேண்டும் என்று 6 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

முதல்வரின் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த அ.தி.மு.க அரசு சதி செய்வதாக குற்றம்சாட்டினார்.

மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சென்னை அண்ணா அறிவாலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “உள்ளாட்சித் தேர்தலுக்கு யாராவது தடை பெற்று தேர்தலை நிறுத்திடுவார்களா என்கிற எண்ணத்தோடேயே அ.தி.மு.க அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதற்கான அனைத்து சதித் திட்டங்களையும் தீட்டிவிட்டு, தி.மு.க தான் தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறது என தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டை சொல்லி வருகிறார்கள் ஆளும்கட்சியினர். ஆளுங்கட்சியினராவது அரசியல் நோக்கத்தோடு இதைச் சொல்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. மக்களுக்கு உண்மையைச் சொல்லவேண்டிய ஊடகங்களும், தி.மு.க தான் உள்ளாட்சித் தேர்தலை தடுக்க முயற்சிக்கிறது என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதுதான் வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

இந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க அரசு பல குழப்பங்களை செய்திருக்கிறது. அதிமுக அரசு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வார்டு மறுவரையறையை இதுவரை செய்யவில்லை. அதே போல, புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறையை இதுவரை செய்யவில்லை. அதிமுக அரசு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளின் பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை இன்னும் பின்பற்றவில்லை. மாவட்ட பஞ்சாயத்துகளுக்கும் இன்னும் அ.தி.மு.க அரசு இடஒதுக்கீடு செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டதை மாற்றி, மறைமுக தேர்தல் முறையை கொண்டுவந்திருக்கிறார்கள். இந்தக் குழப்பங்கள் ஏன்?

இப்படி, தொடர்ந்து, பல குழப்பங்களைச் செய்து, இதன் மூலமாக யாராவது நீதிமன்றத்திற்கு சென்று உள்ளாட்சி தேர்தலுக்கு தடை பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவற்றை முறைப்படுத்தி இந்தத் தேர்தலை நடத்திட வேண்டும் என்பதில் தி.மு.க விழிப்போடு இருக்கிறது. அதே நேரத்தில், முறையான ஏற்பாடின்றி உள்ளாட்சித் தேர்தலை நடத்த முற்பட்டால் அதைச் சந்திக்கவும் தயாராக இருக்கிறது தி.மு.க” எனத் தெரிவித்தார்.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில், ஆளும் கட்சியான அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுகவின் நிலைப்பாடு பற்றி கருத்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் அதிமுக, திமுக கண்ணாமூச்சி விளையாடுகிறது. ஆளும் கட்சியும், ஆள்வதற்கு ஆலாய் பறக்கும் கட்சியும் சுயநலத்துக்காக தேர்தல் நடக்காமல் பார்த்துக்கொள்கிறது.” என்று குற்றம் சாட்டினார்.

தமிழக முதல்வரும் எதிர்க்கட்சி தலைவரும் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த முயற்சிப்பதாக ஒருவருக்கொருவர் மாறிமாறி குற்றம்சாட்டியிருப்பது, தமிழக மக்களிடையே உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா என்ற ஐயம் மீண்டும் தலை தூக்கியுள்ளதாகத் தெரிகிறது.

Mk Stalin Dmk Kamal Haasan Aiadmk Edappadi K Palaniswami Mnm
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment