பிப்ரவரி 19ம் தேதி அன்று தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன. அனைத்துக் கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக வாக்கு சேகரித்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநில தேர்தல் ஆணையம் கழுகு கண்களோடு ஒவ்வொரு நிகழ்வையும் கண்காணித்து வருகின்ற நிலையில், எந்த விதமான சிக்கலும் இன்று தேர்தல்களை நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர் காவல்துறையினர்.
தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு மத்தியில் திருப்பூரில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர பனியன் கம்பெனிகள் தற்போது, அரசியல் கட்சிகள் தரும் ”ஆர்டர்களால்” மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப துவங்கியுள்ளன. கொரோனா தொற்று மற்றும் அதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நூற்றுக்கணக்கான கம்பெனிகளை மூடும் நிலை ஏற்பட்டதோடு, ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊரை நோக்கி செல்லவும் வைத்தது.
‘மக்களுக்காக உழைக்கும் கம்யூனிஸ்ட் கட்சியை நம்புங்கள்’ – நடிகை ரோகிணி
கொரோனா தொற்றுக்கு முந்தைய நிலையில் பெறப்பட்ட ஆர்டர்கள் போன்று தற்போது ஆர்டர்கள் அதிக அளவில் இல்லை என்றாலும், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள இந்த ஆர்டர்கள் அதிக அளவில் உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
ஃபைபர் ஆஃப் பேஷன் என்ற நிறுவனத்தின் தலைவரான மயில்சாமி, “முந்தைய காலங்களைக் காட்டிலும் தற்போது மிகவும் குறைவான அளவிலேயே ஆர்டர்கள் வருகின்றன” என்று குறிப்பிட்டார். தேர்தல் காலங்களில் நாங்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டி-ஷர்ட்டுகளை உற்பத்தி செய்வோம். ஆனால் தற்போது 2000 டி-ஷர்ட்கள் உற்பத்தி என்பதே பெரிதாகிவிட்டது. திமுக மற்றும் அதிமுக கட்சியில் இருந்து தான் ஆர்டர்கள் வரும். பாஜக மற்றும் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் இதில் பெரிய அளவில் ஆர்வம் செலுத்துவதில்லை. முன்பு போன்று ”கட்சிக்காரன்” என்ற பெருமையுடன் கரை வேட்டி கட்டுவதோ அல்லது டி-ஷர்ட் போடுவதோ இப்போது அரிதான நிகழ்வாகிவிட்டது. அதே போன்று நீண்ட நாட்களுக்கு இந்த டி-ஷர்ட்டுகளை போடவும் அவர்கள் விருப்பம் காட்டுவதில்லை. எனவே ஒரு முறை பயன்படுத்தும் வகையில் டி-ஷர்ட்டுகளை உருவாக்கினால் போதும் என்றே கட்சியினர் கூறுகின்றனர். அதிக அளவில் துண்டுகளை தற்போது ஆர்டர் செய்கின்றனர் ஆனால், இவர் இந்த கட்சி தான் என்று தனித்து காட்டும் டிஷர்ட்டுகள் போன்று அவை இருப்பதில்லை என்று கூறினார் மயில்சாமி.
பழைய திருப்பூர் பஸ்டாண்ட் அருகே, வீரபத்ரா டெக்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் சரவணன். மயில்சாமி கூறியதன் தாக்கத்தையே இவரும் பிரதிபலிக்கிறார்.
”திமுக மற்றும் அதிமுக கட்சியினர் அதிக அளவில் எங்களுக்கு டி-ஷர்ட் ஆர்டர்களை தருகின்றனர்” என்று பேசிய அவர், ”எங்கள் கொடிகள் ரூ. 14 முதல் ரூ. 1000 வரை விற்பனை செய்யப்படும். பொதுத்தேர்தல் மற்றும் மாநில சட்டமன்ற தேர்தலின் போது நாங்கள் தோராயமாக ஒரு தொகுதிக்கு 5000 கொடிகள் வரை அடித்து தருவோம். உள்ளாட்சி தேர்தல் என்றால் 200 முதல் 300 கொடிகள் வரை ஒரு வார்டுக்கு அடித்து தருவோம். ஆனால் கொரோனா தொற்று தடைகள் காரணமாக பிரச்சாரங்களின் எண்ணிக்கையும், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க செல்லும் கட்சிக்காரர்களின் எண்ணிக்கையும் குறைந்து போனதால் எங்களுக்கு வரும் ஆர்டர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. கொரோனா தொற்றுக்கு முன்பு நாங்கள் பெற்ற ஆர்டர்களைக் காட்டிலும் 2 மடங்கு குறைவான ஆர்டர்களே எங்களுக்கு தற்போது கிடைக்கின்றன. மற்ற நாட்களில் எதுவுமே இல்லாமல் இருந்ததற்கு ஏதோ ஒரு உற்பத்தி நடைபெறுகிறதே என்ற சந்தோஷம் தவிர வேறொன்றும் இல்லை” என்று கூறினார்.
டிஷர்ட்கள் மட்டுமின்றி எங்களுக்கு அதிக அளவில் கட்சித் தொப்பிகள் ஆர்டர்களும் கிடைக்கும். பொதுவாக ஒரு தொகுதிக்கு என்றால் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்களை உற்பத்தி செய்ய ஆர்டர் கிடைக்கும். உள்ளாட்சி தேர்தல் என்றால் ரூ. 50 ஆயிரம் வரையில் ஆர்டர் கிடைக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளில் உதயசூரியன் சின்னத்தின் நடுவே முதல்வரின் படம் போன்ற பேட்ஜ்கள் அதிக அளவில் வாங்கப்பட்டுள்ளன. திமுக, அதிமுக கொடிகள் மற்றும் டிஷர்ட்கள் தமிழகம் முழுவதும் அனுப்பப்படும். ஆனால் பாஜக மற்றும் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுக்கான கொடிகள் மற்றும் டிஷர்ட்கள் அந்த கட்சியின் செல்வாக்கு எங்கே இருக்கிறதோ அங்கு அதிக அளவில் அனுப்பப்படும் என்றும் கூறினார், சரவணன்.
கொரோனா தொற்று ஒரு பக்கம் இருக்க, மூலப்பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மற்றொரு பிரச்சனையாக பனியன் உற்பத்தியாளர்களின் தலையில் வந்து விழுந்துள்ளது. நாள் ஒன்றுக்கு ரூ. 200 கோடி மதிப்பில் ஆடைப் பொருட்களை உற்பத்தி செய்யும் திருப்பூர் உற்பத்தியாளர்கள் பருத்தி போன்ற மூலப் பொருட்களின் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களின் பிரச்சனையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்காக கடந்த மாதம் இரண்டு நாட்கள் உற்பத்தி நிறுத்தத்தை நடத்தினர் உற்பத்தியாளர்கள். நாள் ஒன்றுக்கு 3 மில்லியன் கிலோ கிராம் பருத்தியை உற்பத்திக்காக பயன்படுத்துகின்றனர் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள்.
கொரோனா தொற்றுக்கு பிறகு தற்போது தான் மெல்ல மெல்ல எங்களின் உற்பத்தி மீண்டும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. ஆனாலும் பருத்து போன்ற மூலப்பொருட்களின் விலை உயர்வால் நாங்கள் மிகவும் பாதிக்கபப்ட்டிருக்கின்றோம். மூலப்பொருட்கள் விலை உயர்வால், உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிப்பது போன்ற விவகாரங்களில் மேலும் சிரமங்கள் இருக்கின்றன. சிறுகுறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வை கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்தினோம். விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் நிர்வாகி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
திருப்பூரின் போயம்பாளையத்தில் டி-ஷர்ட் ப்ரிண்டிங் உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வருபவர் வெங்கடேஷ். முன்பு ஒரு பகுதியில் 10 வார்டுகளில் நாங்கள் ப்ரிண்டிங் மற்றும் இதர தேர்தல் தொடர்பான டி-ஷர்ட் உற்பத்தி பணிகளை மேற்கொண்டு வந்தோம். ஆனால் தற்போது 2 வார்டுகளில் மட்டுமே இப்படியான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போயம்பாளையத்தில் திமுக, அதிமுகவைக் காட்டிலும் பாஜகவினர் தான் அதிக அளவில் ஆர்டர்களை தருகின்றனர். மோடி புகைப்படம் பொறித்த டிஷர்ட் தான் அதிக அளவில் போகும். அதன் பின்னர் ஆர்.எஸ்.எஸ். சின்னம், தாமரை போன்ற இதர சின்னங்களும் ப்ரிண்ட் செய்வோம். தமிழக தேர்தல் மட்டுமின்றி இதர மாநிலங்களில் நடைபெறும் தேர்தலுக்கும் டிஷர்ட்களை ஆர்டர் செய்வார்கள். தமிழக சட்டமன்ற தேர்தல் சமயத்தில் நாங்கள் 20 லட்சம் டிஷர்ட்கள் ப்ரிண்ட் செய்து கொடுத்தோம். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உருவப்படம் பொறித்த டிஷர்ட்டுகளும் கூட ஆர்டர் செய்யப்பட்டு இருக்கிறது. ஏஜெண்ட்டுகள் மூலம் பல்க் ஆர்டர்கள் எடுக்கப்பட்டு பிறகு எங்களுக்கு ஆர்டர்கள் பிரித்து தரப்படும் என்று கூறினார் வெங்கடேஷ்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவு
தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா இறந்த சமயத்தில் 50 லட்சம் டிஷர்ட்டுகளை பிரிண்ட் செய்து தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பியுள்ளனர் திருப்பூர் உற்பத்தியாளர்கள். ஆனால் இன்று கிடைக்கும் ஆர்டர்கள் பெரிய அளவில் அவர்களின் வாழ்வியலையும் வாழ்வாதாரத்தையும் மாற்றியுள்ளது. வெளிமாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் இன்னும் திரும்பவில்லை. அதனால் எடுக்கப்படும் ஆர்டர்கள் எங்களுக்கு போதுமானதாக இருக்கிறது. வட இந்தியாவில் இருந்து மீண்டும், குறைந்த ஊதியத்திற்கு பணியாற்ற மக்கள் இங்கு வரும் போது தமிழக மக்களுக்கு இங்கு வேலை குறைவாகவே இருக்கும் அபாயமும் நிலவி வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறு சிறு உற்பத்தி அலகுகள் கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார சரிவு காரணமாக மூடப்பட்டன. புதிதாக ஒருவரும் உற்பத்தி நிறுவனத்தை துவங்க ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும் தேர்தல் ஆர்டர்கள் மட்டுமே எங்களுக்கு பெரிய அளவில் எங்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது என்று கூறினார் வெங்கடேஷ்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.