திராவிட இசைக் கருவிக்கு கிடைத்த புவிசார் குறியீடு - இது தான் இந்த வாரம் தமிழ் இசையுலகில் பேசப்பட்ட மிக முக்கிய விசயம். நாகஸ்வர உருவாக்கத்தில் ஈடுபட்டிருக்கும் தஞ்சை, நரசிங்கன்பேட்டை மக்களின் உழைப்பிற்கும், நுட்பத்திற்கும், நீண்ட நாள் காத்திருப்பிற்கும் கிடைத்த வெகுமதியாகவே பார்க்கப்படுகிறது இந்த புவிசார் குறியீடு அங்கீகாரம். கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கிராமம்.
”புவிசார் குறியீடு கிடைத்தால் அதிக லாபத்திற்கு நாகஸ்வரத்தை விற்க முடியுமா என்று எனக்கு தெரியாது ஆனால் எங்களின் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இது என்பதே அளவற்ற மகிழ்ச்சியை தருகிறது. அக்கம் பக்கம் ஊர்களில் கூட நாகஸ்வரம் செய்கிறார்கள் தான். ஆனாலும் அது நரசிங்கன்பேட்டை வம்சத்தினர் செய்யும் நாதத்தின் ஓசையை தருவதில்லை. அது தான் இதன் தனித்தன்மை” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் நரசிங்கன்பேட்டையில் நாகஸ்வரத்தை உருவாக்கும் குணசேகரன் (59).
கோவில்களில் இசைக்கப்படும் மல்லாரி துவங்கி, திருமணம் உள்ளிட்ட அனைத்து விதமான சுபகாரிய நிகழ்வுகளுக்கு மங்கள நாதமாக நாகஸ்வரம் இசைக்கப்படுகிறது. தஞ்சாவூர் மண்ணில் இன்று நேற்றல்ல, கிட்டத்தட்ட 3 நூற்றாண்டுகளுக்கும் மேலாக நாகஸ்வரம் இசைக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று நாம் பார்க்கும் நாகஸ்வரத்திற்கும் அன்றைய காலத்தில் இசைக்கப்பட்ட நாகஸ்வரத்திற்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது.
பாரி நாக(த)ஸ்வரமும் ரங்கநாத ஆச்சாரியும்
”1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த போது பிரதமர் நேரு மற்றும் இதர தலைவர்கள் முன்பு சண்முக ப்ரியா ராகத்தை, என்னுடைய தாத்தா உருவாக்கிக் கொடுத்த நாகஸ்வரத்தில் தான், இசைத்தார் டி.என். ராஜரத்தினம் பிள்ளை” என்று தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார் ரங்கநாதரின் பேரனும் நாகஸ்வரத்தை உருவாக்கும் கலைஞருமான சதீஸ் செல்வராஜ் (28).
நாதஸ்வர சக்கரவர்த்தி என்று இசை உலகம் கொண்டாடும் ராஜரத்தினம் பிள்ளைக்கு திமிரி என்ற ஆரம்பகால நாகஸ்வரத்தில் விருப்பத்திற்கு ஏற்ற இசையை மிக துல்லியமாக வாசிக்க இயலவில்லை என்ற வருத்தம் இருந்தது. திமிரியில் பிரதி மத்தியம ஸ்வரம் மட்டுமே வாசிக்க முடியும்.
நாகஸ்வரத்தை வடிவமைக்கும் ரங்கநாத ஆச்சாரியிடம் ராஜரத்தினம் தன்னுடைய கவலையை எடுத்துக் கூற இதில் இருக்கும் சவால் என்ன என்பதை அறிந்து கொள்ள ஸ்ரீரங்கம் அருகே அமைந்திருக்கும் திருவாணைக்காவலுக்கு சென்றார். அங்கே சில நுட்பங்களை கற்ற அவர் 6 நாகஸ்வரங்களை உருவாக்கினார். அதுவே பின்னாளில் பாரி நாகஸ்வரமாக, இன்று நாம் பார்க்கும் நாகஸ்வரமாக மாறியது. இக்குடும்பத்தில் கோவிந்த சாமி, நாராயண சாமி, ரங்கநாதன், செல்வராஜ் ஆகியோரை தொடர்ந்து ஐந்தாவது தலைமுறையாக தற்போது சதீஷ் மற்றும் பிரகாஷ் சகோதர்கள் நாகஸ்வரத்தை செய்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் ஐந்து கட்டை, ஆறு கட்டையில் வாசிக்கப்பட்ட சிறிய அளவிலான திமிரி நாகஸ்வரம் புழக்கத்தில் இருந்து வெளியேற அங்கே ஆணித்தரமாக அமர்ந்து கொண்டது இரண்டு, இரண்டரை கட்டையில் வாசிக்கப்படும் பெரிய அளவிலான பாரி நாகஸ்வரம். இதன் சிறப்பு என்னவென்றால், கலைஞனின் விருப்பத்திற்கு ஏற்ப நாதம் இசைக்க முடியும் என்பது தான். சரியான உதாரணம் தர வேண்டும் என்றால் சிவாஜி, பத்மினி நடிப்பில் உருவான தில்லானா மோகனாம்பாள் படத்தின் ”நலம் தானா” பாடல் தான்.
“புகழ்பெற்ற நாகஸ்வர சிற்பி இந்த ரங்கநாதன்” என்ற பாராட்டு மடலை ராஜரத்தினம் எழுத அதனை பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர் ரங்கநாதனின் குடும்பத்தினர். காருக்குறிச்சி அருணாச்சலம் போன்ற இதர வித்வான்களும் ரங்கநாதன் செய்த நாகஸ்வரத்தையே பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நரசிங்கன்பேட்டை நாகஸ்வரத்தின் இன்றைய நிலை
ஒரு காலத்தில் பல குடும்பத்தினர் இந்த தொழில் ஈடுபட்டிருந்தாலும் போதிய வருமானமின்மை காரணமாகவும், கச்சேரி காலங்களில் மட்டுமே அதிகம் விற்பனையாகும் என்பதாலும் பலர் இத்தொழிலில் இருந்து வெளியேறினர். இன்று இக்கிராமத்தினர் மிக சொற்பமான அளவிலேயே நாகஸ்வரத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
“நான் மூன்றாவது தலைமுறையாக நாகஸ்வரத்தை உருவாக்கி வருகிறேன். எனக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். என்னுடைய மருமகன்களும் இந்த தொழிலை கற்றுக் கொள்ள முன்வரவில்லை. அப்படியே ஒரு சிலர் கற்றுக் கொள்ள முன்வந்தாலும் கூட அது நரசிங்கன்பேட்டை மண்ணில் உருவாகும் நாகஸ்வரம் போல் இருக்குமா? என்ற சந்தேகமே எழுகிறது” என்று கூறுகிறார் குணசேகரன்.
”எனக்கு ஆரம்பத்தில் நாகஸ்வரம் செய்வதில் பெரிய அளவில் ஈடுபாடு இல்லை. ஆனாலும் அப்பாவின் வேண்டுகோளுக்கு இணங்க நான் நாகஸ்வரம் உருவாக்கத்தை கற்றுக் கொண்டேன். என்னுடைய அப்பா செல்வராஜ் இறந்த பிறகு, ”என்.ஆர். நாகஸ்வர கம்பெனி” என்ற ஸ்தாபனத்தை நடத்த ஆளில்லாமல் போய்விட்டது என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காகவும், என் தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்றவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக முழு மனதோடு இக்கலையில் ஈடுபட்டு வருகின்றேன் என்று கூறுகிறார் சதீஸ் செல்வராஜ்.
மேலும், ”இங்கே பட்டறைகளில் தான் நாகஸ்வரத்தை உருவாக்குகின்றோம். அவற்றில் இரண்டு முழுக்க முழுக்க கைத் தச்சு வேலையை பயன்படுத்தியும் மற்ற சில ஸ்பாதனங்கள் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டும் இசைக் கருவியை உருவாக்குகின்றனர். நாங்கள் கைத்தச்சு தொழிலை கைவிடாமல் இருப்பதற்கு 2 காரணங்கள் உண்டு. முதலாவது இந்த தொழிலையே நம்பி எங்களுடன் பணியாற்றும் உதவியாளர்களின் வாழ்வாதாரம் மற்றொன்று முழுமையாக பணியாற்றிய நிம்மதி. என்னுடைய காலம் முடியும் வரை அப்பா எந்த வழியில் நாகஸ்வரத்தை உருவாக்கினாரோ அதையே நானும் பின்பற்றுவேன்” என்றார்.
உருவாக்கமும் அமைப்பும்
மொத்தம் 3 பாகங்களைக் கொண்டது நரசிங்கன்பேட்டை நாகஸ்வரம். உடல் பகுதி குழல் என்றும் முன்னால் விரிந்திருக்கும் பகுதி அணசு என்றும் வழங்கப்படுகிறது. காவிரி ஆற்றங்கரையில் வளரும் கொறுக்கைத் தட்டை என்ற நாணலில் செய்யப்படும் சீவாளி என்ற மூன்றாவது பாகம் மற்றொரு முனையில் இணைக்கப்படுகிறது. குழல் ஆச்சாமரத்திலும், அணசு வாகை மரத்திலும் செய்யப்படுகிறது.
ஆச்சாமரத்தைப் பெறுவதில் இருக்கும் சிக்கல் குறித்து பேசிய சதீஸ் செல்வராஜ் “பச்சை ஆச்சாமரத்திலோ அல்லது 20, 30 வயது கொண்ட மரத்திலோ நாகஸ்வரத்தின் குழலை உருவாக்க முடியாது. 70 - 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரத்தில் தான் செய்ய முடியும். என்னுடைய தாத்தா மரம் நட்டு வைத்தால் என்னுடைய மகன் தான் அதில் நாகஸ்வரம் செய்யக் கூடும். காரைக்குடி, திருவண்ணாமலை, வேலூர், ஆந்திரா பகுதிகளில் உள்ள மர வியாபாரிகளுக்கு ஆச்சா மரம் கிடைத்தால் எங்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள்” என்றார்.
பழைய வீடுகள், அரண்மனைகளில் இருந்து பெறப்படும் மரங்களைப் பற்றி வியாபாரிகள் கூற அதனை வாங்கி வருவோம். இடைத்தரகர்கள் மூலம் கிடைக்கும் போது வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக பணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகும் என்றும் தெரிவிக்கிறார்.
”முதலில் குழல் பாகமும் பிறகு அணசு பாகமும் உருவாக்கப்படும். மொத்தமாக நாகஸ்வரத்தில் 12 துளைகள் இருக்கின்றன. மேலே இருக்கும் 7 துளைகள் ஸ்வரங்கள், பக்கவாட்டில் உள்ள இதர ஐந்தும் பக்க ஸ்வரங்கள் ஆகும். குழலின் நடுபாகத்தில் துளையிடுவது தான் மிகவும் கடினமானது. மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டிய இடமும் கூட. மோசமான மனநிலையோடு வந்து அமர்ந்தால், அத்தனை நேர உழைப்பையும் கொண்டு போய், விறகாய் வைத்து அடுப்பெரிக்க வேண்டியது தான். அனைத்தும் சரியாக அமைந்தால் தான் அது வாத்தியக் கருவி இல்லை என்றால் வெறும் விறகு தான். தங்கம் போன்று உருக்கி வேறு மாற்று ஏதும் செய்ய இயலாது” என்று தன்னுடைய பணியில் தேவைப்படும் எச்சரிக்கை குறித்து விவரிக்கிறார்.
ஒன்று முதல் 6 கட்டை நாகஸ்வரங்கள் பயன்பாட்டில் இருந்தாலும் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மை இசைக் கலைஞர்கள் 2, 2 1/2 கட்டை நாகஸ்வரத்தை பயன்படுத்துகின்றனர். திரைத்துறையில் ஒன்று, ஒன்றரைக் கட்டை நாகஸ்வரங்கள் பயன்படுத்தப்படுகிறது. புதிதாக இக்கலையை கற்றுக் கொள்பவர்கள் 3 கட்டை நாகஸ்வரத்தில் இருந்து பயணத்தை துவங்குகின்றனர்.
சவால்கள் என்னென்ன?
”ஒரு நாதஸ்வரத்தை உருவாக்க 2 முதல் 3 நாட்கள் தேவைப்படும். மரம் வாங்குவது துவங்கி விற்பனைக்கு வைப்பது வரை கிட்டத்தட்ட 10 படி நிலைகள் இருக்கின்றன. ஒரு வாத்தியத்திற்கு 2 முதல் 4 கிலோ மரத்தை ஒதுக்கினால், இறுதியாக கைக்கு வரும் நாகஸ்வரம் இருநூறு முதல் முந்நூறு கிராம் வரை தான் இருக்கும். மரம், வேலையாட்களுக்கு சம்பளம், போக்குவரத்து என்று அனைத்தையும் கணக்கில் வைத்தால் கூட முதலீடு செய்த எங்களுக்கு கூலி கூட நிற்காது. பணத்திற்காக இந்த தொழிலை தொடரவில்லை. என் தாத்தாவும், அப்பாவும் காத்து வந்த தொழிலை நான் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்” என்று கூறுகிறார் சதீஸ் செல்வராஜ்.
ஒரு சிலர் அளவில் பெரிதாக இருக்கும் இசை வாத்தியத்தை கற்க அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள். அவர்களுக்கும் ஏற்றவாறு எப்படி நாகஸ்வரத்தை வடிவமைப்பது என்பது குறித்து நான் யோசித்துக் கொண்டிருக்கின்றேன். எங்களின் வாடிக்கையாளர்கள் என்பது மிகவும் குறிப்பிட்ட வட்டத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்பதால் நாகஸ்வரத்தின் பயன்பாடு மற்றும் விற்பனையை அதிகரிப்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற 46 பொருட்களில் 27 பொருட்களுக்கு அங்கீகாரம் பெற்றுக் கொடுத்த அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தான் நாகஸ்வரத்திற்கும் புவிசார் குறியீடு கிடைக்க தேவையான பணிகளை மேற்கொண்டார். இந்த அங்கீகாரத்தால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று அவரிடம் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் கேள்வி எழுப்பியது.
“பாரி நாகஸ்வரம் தான் மனிதன் நினைக்கும் கீர்த்தனையை இசையாக வழங்கும். மற்ற இடங்களிலும் நாகஸ்வரம் செய்து அதை நரசிங்கன்பேட்டை நாகஸ்வரம் என்று விற்பனை செய்கிறார்கள். இது பாரம்பரிய கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்குகிறது. புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்ததால் இது நிச்சயமாக குறையும்” என்று கூறுகிறார்.
”மேலும் தரமான பொருட்களுக்கு அங்கீகாரம் கிடைத்தால் அதனை மக்கள் தேடி வந்து வாங்குவார்கள். அதற்கான தேவையும் அதிகரிக்கும். முன்பு நாகஸ்வரம் உற்பத்தி செய்து தற்போது வேறு வேலைக்கு செல்லும் குடும்பத்தினரும் கூட ஆர்வத்துடன் இப்பணியை தொடர்வார்கள். இசைக்கல்லூரி மாணவர்களுக்கு எங்கே தரமான இசைக்கருவிகள் கிடைக்கும் என்பது இதன் மூலம் தெரிய வரும். தமிழக அரசின் அறநிலையத்துறை நினைத்தால் இங்கே உற்பத்தி செய்யப்படும் நாகஸ்வரத்தை மட்டுமே தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் மங்கள வாத்தியம் இசைக்க பயன்படுத்த வேண்டும் என்று அறிவிக்கலாம். நாகஸ்வரம் இல்லாத கோவில்களுக்கு வாங்கியும் தரலாம். இது இக்கலையை உயிர் மூச்சாக சுமக்கும் கலைஞர்களுக்கு நிம்மதியையும் உற்சாகத்தையும் வழங்கும்” என்றும் தெரிவித்தார் சஞ்சய் காந்தி.
தனிச்சிறப்பு மிக்க இந்த நாகஸ்வரத்திற்கு புவிசார் குறியீடு கேட்டு ஜனவரி 31, 2014ம் ஆண்டு தஞ்சாவூர் இசைக்கருவிகள் உற்பத்தி மற்றும் குடிசைத் தொழில் கூட்டுறவு சங்கம் விண்ணப்பித்திருந்தது. 8 வருட போராட்டத்திற்கு பிறகு கடந்த வாரம் நரங்சிகன்பேட்டை நாகஸ்வரத்திற்கு புவிசார் குறியீடு வழங்கி, இந்த கைவினைக் கலைஞர்களின் நுட்பமும் திறனும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் 46 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தஞ்சையில் இருந்து மட்டும் இந்த நாகஸ்வரத்தையும் சேர்த்து 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.