தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அரசியல் நாகரிகம் இல்லாமல் அநாகரிகமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது என்பது அதிகரித்து வருகிறது.இதில் ஆளும் அதிமுக, பாஜக, எதிக்கட்சிகளான திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பெரிய கட்சிகள் எதுவும் விதிவிலக்கல்ல.அரசியல் கட்சி தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி நாள் தோறும் தமிழக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.இந்தப் போக்கு தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மிகவும் கவலை அளிக்கும் வகையில் வளர்ந்து காணப்படுகிறது.
குறிப்பாக பாஜக தலைவர் ஹெச்.ராஜா, அதிமுகவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மற்றும் அதிமுக, திமுக அடிமட்ட பொறுப்பாளர்களின் பேச்சுகள் சர்ச்சையை ஏற்படுத்துபவையாகவே உள்ளன. அண்மையில், கலைஞர் வாசகர் வட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஊடகங்களை மும்பை ரெட்லைட் ஏரியா மாதிரி நடத்துகிறார்கள் என்று அநாகரிகமாக பேசினார். அது மட்டுமில்லாமல் உயர் நீதிமன்றங்களில் ஆதி திராவிடர்கள் நீதிபதியானார்கள் என்றால் அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்றும் ஹெச்.ராஜாவை சாதியைக் குறிப்பிட்டும் பிராமணர்களை விமர்சித்தும் பேசினார்.
ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையாகி கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து மன்னிப்பு கேட்டார்.
இதுபோல அரசியல் தலைவர்களின் அநாகரிகமான பேச்சு இளைஞர்கள் மத்தியில் அரசியலைப் பற்றி அவநம்பிக்கையை விதைக்கிறது. அல்லது வெறுப்பை பரப்புகிறது என்பதே யதார்த்தமாக உள்ளது.
இப்படி அரசியல் கட்சிகளின் உயர் மட்ட தலைவர்கள் அநாகரிகமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசும் போக்கு எப்படி தமிழக அரசியலில் தொடங்கியது. இப்போது அதிகரித்து காணப்படுவதற்கு என்ன காரணம் என்பது குறித்து எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் கூறுகையில், “தமிழக அரசியல் தலைவர்கள் இப்படி பேசுவது என்பது புதிது அல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தப் போக்கு கட்டுப்பட்டு இருப்பதாகவே நான் கருதுகிறேன். அதை மீறி வருபவைகள்தான் இவை. ஏனென்றால், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிப்பதற்கான வெளி, ஊடங்கள், சமூக வலைதளங்கள் மூலம் அதிகரித்திருக்கிறது. அது வரம்பில்லாமல் பேசுவதைக் கட்டுப்படுத்தி இருக்கிறது. இப்போதுகூட ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு ஒரு உள்ளரங்கில் பேசிய பேச்சு. அது அவருடைய இயல்பு. அது திமுகவின் இயல்பு. திமுக தலைவர்கள் அண்ணாதுரை முதல் நெடுஞ்செழியன் கருணாநிதி வரை இப்படிதான் பேசி வந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் இந்த மாதிரி ஊடகங்களின் வளர்ச்சி இல்லை. அதனால், அது பல பேருக்கு தெரியவில்லை. இப்போது இருப்பது போல ஊடகங்கள் அன்று இருந்திருந்தால் நாம் மிக மோசமான பேச்சுகளை பார்த்திருக்கலாம். அதனால், இதைவிட மோசமான பேச்சுகளை நாம் பெரிய தலைவர்களிடமே சந்தித்திருக்கலாம்.
இது போன்ற பேச்சு திமுக மட்டுமில்லை எல்லா கட்சிகளிடமுமே இருந்திருக்கிறது. குறிப்பாக கட்சிகளில் தலைவர்கள் என்பதைத் தாண்டி கட்சியின் கருத்துகளை பிரசாரம் செய்ய கீழ்மட்ட பேச்சாளர்கள் என்ற ஒரு வகையினர் உருவாகின்றனர். இந்த பேச்சாளர்கள் இரவு நேரங்களில் 9 மணிக்கு மேல் கூட்டங்களில் பேச தொடங்குவார்கள். இவர்கள் பேச்சை கேட்க ஒரு பார்வையாளர்கள் கூடுவார்கள். பேச்சைக் கேட்பதற்கு கூடும் பார்வையாளர்கள் யாரும் பணக்காரர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் கூலி வேலை செய்யும் உழைக்கும் மக்களாக இருப்பார்கள். அதனால், அவர்களுடைய மொழியில் அவர்களுக்கு நெருக்கமாக பேசுவதாக நினைத்து நகைச்சுவையாக கிண்டலாக பேசுவது என்ற ஒரு கலாச்சாரம் இந்த பேச்சாளர்கள் இடையே உருவானது. அதனால், தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் பேசியையெல்லாம் ஒப்பிடும்போது ஆர்.எஸ்.பாரதி பேசியது ரொம்ப சாதாரணம்.
அதனால், இந்தப் போக்கு ஏற்கெனவே அரசியலில் இருந்த ஒன்றுதான். அது புதிதல்ல. இது திமுக, அதிமுக என எல்லா கட்சிகளிலும் மிக நீண்ட காலமாக இந்தப் போக்கு இருந்திருக்கிறது.இந்த தாக்கத்தில் தலைவர்களே அப்படி பேசியிருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு இயல்பான பேச்சு. ஒரு திமுககாரர் பொலிட்டிக்கல் கரக்ட்னெஸ் இல்லாமல் தனியாக இருக்கும்போது என்ன பேசுவாரோ அதை பேசியிருக்கிறார். அதை தன்னுடைய கூட்டத்தினர் இடையே ஒரு அரங்கத்தில் பேசியுள்ளார்.
பொதுவாக அரசியல் கட்சிகளில் பொது இடங்களில் பேசும்போது ஒன்றாகவும் அவர்களுக்கு நெருக்கமான குழுவில் பேசும்போது வேறொன்றாகவும் பேசுவார்கள். அப்படித்தான் ஆர்.எஸ்.பாரதி பேசியிருக்கிறார். இதுதான் யதார்த்தம். அது சமூக வலைதளங்கள் பெருகி இருப்பதால் வெளியே தெரியவந்துள்ளது.
இந்தப் போக்கு என்பது ஒரு அரசியல் இயக்கம் உருவாக்கும் அரசியல் கலாச்சாரத்துடன் சம்பந்தப்பட்டது.
காந்தியவாதிகள் இப்படி அநாகரிகமாக பேச மாட்டார்கள். காந்தியவாதிகள் என்று நான் காங்கிரஸ்காரர்களை குறிப்பிடவில்லை. அதே போல, மார்க்ஸிஸ்ட்கள், இடது சாரிகள் இப்படி அநாகரிகமாக பேச மாட்டார்கள்.” என்று கூறினார்.
இது போல, அம்பேத்கரியர்களும் மேடைகளில் அநாகரிகமாக பேசியுள்ளார்கள் இல்லையா என்ற கேள்விக்கு. “அம்பேத்கரியர்களும் அப்படி பேசியிருக்கிறார்கள். ஏனென்றால், அவர்களும் அப்படி பயிற்றுவிக்கப்படவில்லை” என்று ஸ்டாலின் ராஜாங்கம் தெரிவித்தார்.
அரசியல் தலைவர்களின் அநாகரிக பேச்சு குறித்து சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் கூறுகையில், “பொதுவாக அரசியல் கட்சி தலைவர்கள் அவர்களுடைய கொள்கைகள், கோட்பாடுகள் என்ன என்பது குறித்து தொண்டர்களுக்கோ அல்லது அடுத்த கட்ட தலைவர்களுக்கோ பயிற்சி கொடுத்து அது சார்ந்த விஷயங்களை பேசுவது என்பது ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், இன்றைக்கு அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் சிலரை கேட்டால் அவர்கள் கட்சியின் முக்கிய கொள்கை கோட்பாடு என்ன என்று அவர்களுக்கே தெரியாது. தேர்தல் வந்தால் போட்டியிட வேண்டும். வெற்றி பெற வேண்டும் என்ற சூழல் இன்று ஏற்பட்டுவிட்டது.
மக்கள் மத்தியில் அதிமுக தலைவர்கள் மத்தியில் இப்படி பேசுகிறார்கள். என்றால் ஜெயலலிதா இருக்கும் வரை இப்படி பேச முடியாது. ஏதாவது சர்ச்சையாக பேசிவிட்டால் உடனே பொறுப்பில் இருந்து நீக்கி விடுவார்கள். அது போல, எந்த கட்டுப்பாடும் அதிமுகவில் இல்லை. அதனால், அவர்கள் இப்போதுதான் பேசவே ஆரம்பித்துள்ளார்கள்.
பொதுவாக தலைவர்கள் பேச்சாளர்கள் ஏதேனும் நலத் திட்டங்களை பேசினால், கிடைக்கும் வரவேற்பைவிட இது போல சர்ச்சையாக பேசினால் அது கவனிக்கப்படுகிறது. அதனால், எதையாவது சொல்லி மக்களிடம் சென்றடைய வேண்டும் என்று பேசுகிறார்கள்.
திமுகவில் இன்னும் கீழ்மட்ட தலைவர்கள் கொச்சையாக பேசும் நிலை இருக்கிறது. ஒரு கிராமத்தில் ஒரு இரட்டை அர்த்த வசனத்தைப் பேசினால்தான் கைதட்டுகிறார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், மக்கள் அப்படி எதிர்பார்க்கவில்லை. ஆனால், அவர்கள் அதைப் பேசிபேசி வளர்த்து விடுகிறார்கள். அதனால், இரட்டை அர்த்த பேச்சாளர்கள் வந்தால்தான் கூட்டம் அதிகமாக இருக்கும் கைத்தட்டல் இருக்கும் என்ற போக்கு இருந்துகொண்டுதான் இருக்கிறது. அரசியல் கட்சிகள் அதை ஊக்குவிக்கின்றன.
ஆர்.எஸ்.பாரதி பேசியது வேறு ஒரு வகை. ஊடகங்களை தாக்கிப் பேசியது ஒன்று சாதி சார்ந்து பேசியுள்ளார்.
அரசியல் தலைவர்கள் எதை பேசினாலும் சாதாரணமாக ஒரு மன்னிப்பு சொல்லிவிட்டு போயிவிடலாம் என்ற போக்கு இருக்கிறது. அரசியல் கட்சிகளும் இதை கவனத்தில் எடுத்துக்கொள்வது இல்லை. மக்களும் இதை பெரிதாக கவனத்தில் வைத்துக்கொள்வதும் இல்லை.
அதே நேரத்தில் ஊடகங்களும் இது போன்ற சர்ச்சை பேச்சுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. அதனாலும் இந்தப் போக்கு வளர்ந்துள்ளது.
போதுவாக அரசியல் கட்சிகளில் உயர்மட்ட தலைவர்கள் கிழ்மட்ட தலைவர்கள் அநாகரிகமாக பேசும்போது அவர்கள் ரசிக்கிறார்கள். அவர்கள் ஒப்புதலுடன்தான் பேசுகிறார்கள். யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. அரசியல் கட்சி உயர் மட்ட தலைவர்கள், அநாகரிகமாக பேசும் கீழ்மட்ட தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இந்தப் போக்கை கட்டுப்படுத்த வேண்டும். ஹெச்.ராஜா போன்ற தலைவர்கள் அப்படி பேசும்போது தலைவர்கள் கண்டிக்க வேண்டும். ஆனால், அவர்கள் கண்டிப்பதில்லை. அதனால், நீதிமன்றத்திற்கு சென்று மன்னிப்பு சொல்லிவிட்டு வந்தால் போகிறது என்று நினைக்கிறார்கள்” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.