காலை சிற்றுண்டியை நாங்கள் தருகிறோம்; எதற்கு தொண்டு நிறுவனம்; சத்துணவு ஊழியர்கள் போர்க்கொடி

மாநகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டியை வழங்குவதற்கு தொண்டு நிறுவனத்துக்கு அனுமதி அளித்ததற்கு தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சத்துணவு திட்டத்தில் அதற்கான கட்டமைப்பு இருக்கும்போது ஏன் ஒரு தொண்டு நிறுவனத்துக்கு இந்த திட்டத்தை கொடுக்கிறார்கள் என கேள்வி.

By: March 15, 2020, 12:16:35 AM

சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளுக்கு அட்சயப் பாத்ரா என்ற தொண்டு நிறுவனம் மூலம் காலை சிற்றுண்டி வழங்குவதற்கு தலைமை சமையல் அறை கட்டுவதற்கு அண்மையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமைச்சர்கள் அடிக்கல் நாட்டிய நிலையில், தமிழ்நாடு சத்துணவு உழியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று தாலுக்கா தோறும் ஆர்பாட்ட்டங்களை நடத்தி போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

சென்னையில் உள்ள மாநகராட்சி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி வழங்க இஸ்கான் என்ற ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற கிருஷ்ண பக்தி அமைப்பின் பிரிவான அட்சயப் பாத்ரா தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த தொண்டு நிறுவனம், மாணவர்களுக்கு உணவு வழங்க சமைப்பதற்காக தலைமை சமையல் நிறுவனம் கட்டுவதற்கு தமிழக அரசு சென்னை கிரீம்ஸ் சாலையிலும், பெரம்பூர் பேரக்ஸ் சாலையிலும் இடம் அளித்துள்ளது. அதற்கான கட்டடம் கட்ட அண்மையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். மாநகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டியை வழங்குவதற்கு இந்த தொண்டு நிறுவனத்துக்கு அனுமதி அளித்ததையும் அவர்களுக்கு நிலம் ஒதுக்கியதையும் அந்த நிறுவனம் அளிக்கும் பூண்டு வெங்காயம் இல்லாத உணவையும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் விமர்சனம் செய்ததால் விவாதமானது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சுந்தரம்பாள், ஐ.இ.தமிழுக்கு கூறுகையில், “சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை வரவேற்கிறோம். ஆனால், மிகப்பெரிய அளவில் தமிழக அரசின் சத்துணவு திட்டத்தின் கட்டமைப்பு இருக்கும்போது ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற ஒரு தொண்டு நிறுவனத்துக்கு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்க அனுமதி தருவதை எதிர்க்கிறோம். முதலில் சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு மட்டும்தான் இந்த நடவடிக்கை என்று விட முடியாது. இது தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தினால் சத்துணவு ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். காலைச் சிற்றுண்டி வழங்கும் இஸ்கான் தொண்டு நிறுவனம் தான் வழக்குகிறது. இவர்களின் சமையலறை கட்டுவதற்காக தமிழக அரசு சென்னை கிரீம்ஸ் சாலையில் 20,000 அடி இடத்தையும் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் 36,000 அடி இடத்தையும் கொடுத்துள்ளார்கள். இதனுடைய மதிப்பு 500 கோடி ரூபாய். ஆளுநர் 5 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். இந்த நிதியை சத்துணவு திட்டத்துக்கு கொடுத்தால் அதற்கான கட்டமைப்புள்ள சத்துணவு ஊழியர்களால் தர முடியும்.

காமராஜர் முதலில் மாணவர்களுக்கு உணவு வழங்கும்போது நன்கொடை பெற்றுதான் நடத்தினார்கள். அதே போல் நன்கொடை பெற்று அதை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்துங்கள் என்று கேட்கிறோம்.

ஏற்கெனவே, இந்த ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற தொண்டு நிறுவனம் கர்நாடகாவில் பள்ளிகளுக்கு உணவு வழங்குகிறது. அவர்கள் கொடுக்கும் பூண்டு வெங்காயம் இல்லாத உணவு மாணவர்களால் சாப்பிட முடியவில்லை. பூண்டு வெங்காயம் இல்லாத உணவால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காமல் போகிறது என்று கர்நாடகா அரசு பூண்டு வெங்காயம் கொண்ட உணவை அளிக்க வேண்டும் என்று கூறியும் அந்த தொண்டு நிறுவனம் கண்டுகொள்ளவில்லை.

அரசு கொண்டுவரும் காலை சிற்றுண்டி திட்டத்தை வரவேற்கிறோம். ஆனால், அதை சத்துணவு ஊழியர்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அது மட்டுமில்லாமல், குறைந்த சம்பளம் வாங்கும் சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம், வழங்கி ஓய்வூதியத் தொகையை உயர்த்த வேண்டும். நாங்கள் இதுவரை போராடியதில், தமிழக அரசு டி.ஏ.வைத் தவிர வேறு எந்த பலனையும் எங்களுக்கு அளிக்கவில்லை.

இப்போது, தமிழக அரசு சத்துணவு சமையலர்களுக்கு ஓய்வு பெறும்போது 50 ஆயிரம் ரூபாயும் அமைப்பாளர்களுக்கு 1 லட்சம் ரூபாயும் வழங்குகிறது. நாங்கள் அதை சமையலர்களுக்கு 3 லட்சம் ரூபாயும் அமைப்பாளர்களுக்கு 5 லட்சம் ரூபாயும் வழங்கக் கோருகிறோம். தற்போது 16 ஆயிரம் 17 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு சத்துணவு ஊழியருக்கு ஓய்வுதியமாக வெறும் 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. அதுவும் ஊழியர் உயிரோடு இருக்கும் வரை அவருக்கு மட்டும்தான் வழங்கப்படுகிறது. அவருடைய வாரிசுகளுக்கு கிடையாது. ஆனால், மற்ற அரசு ஊழியர்களுக்கு அவர்களுடைய வாரிசுகளுக்கு ஓய்வுதிய உதவித்தொகை உள்ளது. மத்திய அரசு ஒரு அரசு ஊழியருக்கு குறைந்தப் பட்சமாக 9 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்குகிறது. மாநில அரசு குறைந்தபட்சமாக 7 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வழங்குகிறது.

அதனால், தமிழக அரசு சத்துணவு ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்குகிற அதே குறைந்த பட்ச ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். அல்லது சம்பளத்தில் பாதியை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். எங்களுடைய வாரிசுகளுக்கும் ஓய்வூதிய உதவித்தொகை வழங்க வேண்டும்.

எங்களுடைய பல ஆண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களையும் மனு கொடுத்துள்ளோம். 21-ம் தேதி சத்துணவு மானிய கோரிக்கை சட்டப் பேரவையில் நடைபெறுகிறது. அதற்கு முன்பு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களை சந்தித்து எங்கள் கோரிக்கைகளை முன்வைக்க உள்ளோம். தொண்டு நிறுவனம் பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதை நிறுத்தி அதை சத்துணவு ஊழியர்கள் மூலம் வழங்க வலியுறுத்துவோம்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tamil nadu sathunavu staffs demand to stop ngo morning food plan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X