Advertisment

நீட்டில் 505 மதிப்பெண்; தந்தையின் மரணம்; நிறைவேறுமா MBBS கனவு? முதல்வர் உதவியை நாடும் மாணவன்

இன்னைக்கு இருக்குற சூழலுக்கு என்னால வீட்டு வாடகைய தரமுடியுமான்னே தெரியல. முதல்வர்கிட்ட உதவி கேட்டுருக்கேன்.. கெடைக்கலைன்னா எங்க அப்பா மாதிரியே நானும் பெயிண்ட் அடிக்கத்தான் போகணும்

author-image
Nithya Pandian
New Update
நீட்டில் 505 மதிப்பெண்; தந்தையின் மரணம்; நிறைவேறுமா MBBS கனவு? முதல்வர் உதவியை நாடும் மாணவன்

Tamil Nadu Student approaches CM MK Stalin : நீட் விலக்கு - தமிழக வரலாற்றில் சமூக நீதிக்காக நடத்தப்பட்ட பல போராட்டங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கிராமப்புற, பழங்குடியின, மற்றும் பட்டியல் இன மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருக்கும் “சமூக நீதி” என்பது புரியாத புதிராகவே உள்ளது. மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அதிக அளவில் மன அழுத்தத்தை இத்தகைய நுழைவுத் தேர்வுகள் தருகின்றன என்று கூறி நீட் தேர்வை ரத்து செய்யவும், தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரியும் தமிழக கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றன.

Advertisment

2 ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் 7.5% இட ஒதுக்கீடு அமைந்தாலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நிலைமையும், அவர்களின் மருத்துவர் கனவும் இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது.

நீட் தேர்வு விலக்கு மசோதா: தமிழக ஆளுநர் ஒப்புதலை தாமதம் செய்வது, அதீத சந்தேகத்தை வரவழைக்கும்

Tamil News, Tamil News Today Latest Updates
நீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தும் மாணவர்கள்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் கனகேஸ்வரி- வேலுமணி தம்பதியினர். அவர்களுடைய மகன் அசோக் மிதுன், கடந்த 2019ம் ஆண்டு உடுமலைப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் எஸ்.கே.பி. பள்ளியில் 12ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றார். மருத்துவர் கனவோடு தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பயிற்சி வகுப்புகள் எங்கும் செல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியில் படித்து நீட் தேர்வு எழுதி வருகிறார். 2019ம் ஆண்டு 164 , 2020ம் ஆண்டு 346 மதிப்பெண்களை பெற்றும் அது போதுமானதாக இல்லாத நிலையில், 2021ம் ஆண்டு மீண்டும் நீட் தேர்வு எழுதி அதில் 505 மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்.

இந்த முறை எப்படியும் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துவிடும் என்ற சூழலில் இருந்த அவருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா மூன்றாம் அலை. அசோக்கின் தந்தை வேலுமணி கொரோனா தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 4ம் தேதி உயிரிழந்தார். கல்லூரி விருப்பத் தேர்வை அறிவிப்பதற்கான (Choice Filling) கடைசி நாளில் தன்னுடைய தந்தையை இழந்த அசோக் மிதுன், குடும்ப வறுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக அரசுக் கல்லூரிகளை மட்டும் தேர்வு செய்துவிட்டு காத்திருந்தார். சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் அழைப்பு ஏதும் வராத நிலையில் ஏமாற்றம் அடைந்து தற்போது முதல்வரின் உதவியை நாடியுள்ளார்.

சீர்மரபினர் (DNC) பிரிவில் 511 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ள மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க அரசு கல்லூரிகளில் வாய்ப்பு கிடைத்துள்ளது. வெறும் 6 மதிப்பெண்கள் குறைவாக பெற்றிருக்கிறேன். யாருடைய துணையும் இன்றி, பயிற்சி வகுப்பிற்கு செல்லாமல், குடும்ப சூழல் காரணமாக நானே படித்து இந்த மதிப்பெண்களை பெற்றுள்ளேன். தற்போது இருக்கும் மன அழுத்தம் காரணமாக மேற்கொண்டு மற்றொருமுறை நீட் தேர்வை எழுத முடியுமா என்ற அச்சம் தன்னை வாட்டி வதைப்பதாகவும் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

publive-image
மாணவர் அசோக் மிதுன் (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

”குடும்ப வருமானத்திற்கு ஆதாரமாக இருந்த என்னுடைய தந்தை கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், எனது தாயாரின் உடலும் சரியில்லாத சூழலில் நான் தற்போது கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன்” என்று தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அந்த மாணவர், இரண்டாம் கட்ட கலந்தாய்வின் போது தனியார் சுயநிதிக் கல்லூரியில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தால் கட்டணத்தை தமிழக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு ஒன்றை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அசோக் மிதுனுடன் பேசியது தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ். “சுயநிதிக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம் தான், ஆனால் பணம்?... என்னோட அம்மாவை என்னால வேலைக்கு அனுப்ப முடியாது. அவங்களுக்கும் அடிக்கடி உடம்புக்கு முடியாம போய்ருது. சரி, ஒரு காலேஜ்ல சேந்து, படிச்சுட்டே வேலைக்கு போலாம் என்றாலும் கூட எம்.பி.பி.எஸ் படிச்சுட்டே வேலைக்கு போறதுன்றது பெரிய காரியம். ஏற்கனவே மூனு வருசம் எழுதியாச்சு, மேற்கொண்டு ஒரு வருஷம் எழுதி பாரு.. இதவிட நல்ல மார்க் கெடச்சு அரசு கல்லூரிக்குள்ள போய்ரலாம்னு நிறைய பேரு சொல்றாங்க… ஆனா அரசுப் பள்ளில படிச்சுட்டு என்னுடைய ஜூனியர் பசங்க சிலர் இப்போ எம்.பி.பி.எஸ் படிக்க போய்ட்டாங்க! நான் 505 மார்க் வாங்கியும் மேற்கொண்டு என்ன செய்றதுனு தெரியாம இருக்கேன்… ரொம்ப கஷ்டமா இருக்கு.. மன அழுத்தமாவும் இருக்கு.. ஆர்ட்ஸ் அன்ட் சய்ன்ஸ் காலேஜ் போகலாம்னா, இன்னைக்கு இருக்குற சூழலுக்கு என்னால வீட்டு வாடகைய தரமுடியுமான்னே தெரியல. வேற வழியில்லாம, முதல்வர்கிட்ட உதவி கேட்டுருக்கேன்.. கெடைக்கலைன்னா எங்க அப்பா மாதிரியே நானும் பெயிண்ட் அடிக்கத்தான் போகணும்” என்று கூறினார் அசோக் மிதுன்.

இரண்டாம் கட்ட கலந்தாய்வின் போது தனக்கு மருத்துவப் படிப்பு வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் அது சுயநிதிக் கல்லூரியாக இருந்தால், தன்னுடைய படிப்பிற்கு தேவையான நிதியை வழங்க இன்று தனக்கு யாரும் இல்லை. வாழ்வாதாரமா, மருத்துவர் கனவா என்று கேள்வி கேட்டால் வாழ்வாதாரத்திற்காக வேலைக்கு தான் போக வேண்டும் என்கிறார் அசோக் மிதுன். அறிவிக்கப்பட்ட 2.5% இட ஒதுக்கீடு தொடர்பாக தன்னுடைய கேள்விகளையும் சந்தேகங்களையும் முதல்வரின் தனிப்பிரிவு இணைய வழி கோரிக்கைப் பதிவு முறைமையில் கேட்டுள்ள அவருக்கு அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கப்பெறவில்லை.

உள் ஒதுக்கீடு கடந்த வந்த பாதையும் மாணவர்களின் 2.5% ஒதுக்கீடு கோரிக்கையும்

நீட் தேர்வால் மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைத்துள்ளது. மாணவர்கள் இதனால் கஷ்டம் அடையவில்லை என்று கூறி நீட் விலக்கு மசோதாவை சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பி வைத்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழக அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை ஏற்பாடு செய்து ஒரு மனதாக நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு மீண்டும் அனுப்பியுள்ளது. இந்த மசோதாவை குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு அனுப்ப இத்தனை காலம் தான் ஆளுநர் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அரசியல் அமைப்பில் எந்த பிரிவும் குறிப்பிடாததால், விலக்கு தொடர்பான கேள்வியை விலக்கி வைத்துவிடுவோம்.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என்று ஒரு பக்கம் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை வைத்தாலும் கூட, நீட் தேர்வுக்கு முன்பும் மருத்துவக் கல்வி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்துள்ளது என்கின்றனர் கல்வியாளர்கள். காமதேனு தமிழ் இந்து வெளியிட்டுள்ள கட்டுரையில் ”2015ம் ஆண்டு 36 அரசுப் பள்ளி மாணவர்களும், 2016ம் ஆண்டு 37 அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். நீட் தேர்வுக்கு பிறகு 2017ம் ஆண்டில் 3, 2018ம் ஆண்டில் 5 , 2019ம் ஆண்டில் 6 அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவக் கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளது.

மாணவர்கள் படும் இன்னல்களை உணர்ந்து கொண்ட அஇஅதிமுக அரசு, நீதியரசர் கலையரசன் தலைமையிலான குழு ஒன்றை ஏற்பாடு செய்தது. பெற்றோர்களின் வருமானம் அடிப்படையில் அவர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகள் குறித்து விரிவாக அலசிய அறிக்கை ஒன்றை நீதியரசர் கலையரசன் தலைமையிலான குழு வெளியிட்டது. அறிக்கையின் அடிப்படையில் 7.5% இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது அன்றைய எடப்பாடியார் அரசு. உள் ஒதுக்கீடு வந்த பிறகே 347 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கு முன்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 1%க்கும் குறைவானவர்களே மருத்துவ படிப்பு கனவை நனவாக்கியுள்ளனர்.

2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது தி.மு.க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 2.5% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படும் என்று குறிப்பிட்டிருந்தது. சமீபத்தில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவும் இந்த உள் ஒதுக்கீட்டிற்கு பரிந்துரை செய்துள்ளது. இருப்பினும் 2.5% இட ஒதுக்கீடு குறித்து இதுவரை தமிழக அரசு எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அஇஅதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜகன்நாதன் சமீபத்திய கூட்டத் தொடரில் பேசிய போது, “அஇஅதிமுக அரசு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கிய 7.5% இட ஒதுக்கீட்டை தி.மு.க அரசு 15% ஆக உயர்த்த வேண்டும். மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7%, தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு 5% , மாற்றுத் திறனாளிகளுக்கு 2% இட ஒதுக்கீட்டையும் வழங்க வேண்டும்” என்று கூறினார்.

publive-image
நீட் தேர்வு எழுத தேர்வு மையங்களுக்கு முன்பு காத்திருக்கும் மாணவிகள்

அண்மையில் நியூஸ் 18 வெளியிட்டுள்ள செய்தியில் ”கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களில் 347 பேருக்கு மருத்துவம் படிக்க 7.5% இட ஒதுக்கீடு பெரிய அளவில் உதவியுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களில் வெறும் 14 பேர் மட்டுமே மருத்துவம் படிக்க வாய்ப்பைப் பெற்றனர்” என்று குறிப்பிட்டுள்ளது.

மதுரையில், அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த கூலித்தொழிலாளியின் மகள் மீனாட்சி என்பவர் 2020ம் ஆண்டு நீட் தேர்வு எழுதி 274 மதிப்பெண்களைப் பெற்றார். ஆனால் அந்த மதிப்பெண் போதாத சூழலில் ஓராண்டு வீட்டில் எந்த உதவியும் இன்றி தானாக படித்து 2021 நீட் தேர்வில் 464 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். ஆனாலும் அவருக்கு இந்த முறையும் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பலரின் எதிர்ப்பார்ப்பும் 2.5% இட ஒதுக்கீட்டை அரசு உடனே அமல்படுத்த வேண்டும் என்பதாக உள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் போன்றே, இந்த மாணவர்களின் நிலைமையையும் புரிந்து கொண்டு அரசு விரைவில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்கள் மத்தியில் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மத்தியிலும் நிலவி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment