தமிழகத்தில் எங்கோ ஒருமூலையில் பிறந்து வளர்ந்து, புதுமுகங்களாக மாறி மாநிலத்தின் சாதனைப்பெண்களாக மாறிய பெண்களின் எண்ணிக்கை 2019ம் ஆண்டில் அதிகம் நிகழ்ந்துள்ளது.
தங்களின் உழைப்பு, விடாமுயற்சி உள்ளிட்டவைகளால் தாங்கள் சார்ந்த துறைகளான சமூக சேவை, சுகாதாரம், விளையாட்டு, கல்வி, பொழுதுபோக்கு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கி தங்களுக்கு மட்டுமல்லாது, தாங்கள் சார்ந்துள்ள தமிழ்நாட்டுக்கும் பெருமை தேடித்தந்துள்ள சில சாதனை பெண்கள் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
தமிழகத்தில் முதன்முதலில் மின்கம்பம் ஏறிய பெண்
/tamil-ie/media/media_files/uploads/2019/12/page1-300x200.jpg)
தமிழக மின்வாரியத்தில் ஐந்தாயிரம் `கேங்மென்' பணியிடங்கள் காலியாக உள்ளன. மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த அந்தப் பணிக்கு சேலம் உடையாப்பட்டி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் உடற்தகுதி தேர்வு நடைபெறுகிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்களும் பத்துக்கும் மேற்பட்ட பெண்களும் இதில் கலந்துகொள்கிறார்கள்.
30 மீட்டர் உயரமான மின்கம்பத்தில் 8 நிமிடங்களில் ஏற வேண்டும். அந்தப் பெண்ணோ, 6 நிமிடங்களில் ஏறி அசத்துகிறார். அதேபோல 31.5 கிலோ மின்சாதனங்களைத் தூக்கிக்கொண்டு ஒரு நிமிடத்தில் 100 மீட்டர் கடக்கவேண்டிய தூரத்தை 46 நொடிகளிலேயே கடக்கிறார். 2 நிமிடங்களில் இணைக்கவேண்டிய உயர் மின் அழுத்தக் கம்பிகளை 1.46 நிமிடங்களில் இணைத்து அனைவரது பாராட்டுகளையும் பெறுகிறார். அவர்தான் லதா. தமிழகத்தில் முதன்முதலில் மின்கம்பம் ஏறிய பெண் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்!
யார் இவர், அவர் தான் லதா...
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகிலுள்ள அமரம்திட்டு சேவிவளவு பகுதியில் வசித்து வருகிறார்.
அரசுப் பள்ளியில படிச்சப்ப, `ஆண்களுக்கு இணையா நீங்களும் வேலைக்குப் போனாதான் மதிப்பா பார்க்கப்படுவீங்க'ன்னு என் ஆசிரியர் சொன்னது மனசுல பதிஞ்சுபோச்சு. கல்யாணத்துக்குப் பிறகு நிறைய தேர்வுகள்ல கலந்து கிட்டேன். ஆனா, உயரம் ஒரு குறையா இருந்தது. அப்போதான் மின்வாரியத் துறையில் கேங்மென் பணிக்கு அஞ்சாயிரம் பேர் தேவைங்கற அறிவிப்பு வந்தது. ஏப்ரல் மாதம் விண்ணப்பிச்சேன். முதலில் பெண்கள் அரைக் கம்பம் ஏறினால் போதும் சொல்லியிருந்தாங்க. எனக்கு மின்கம்பம் ஏறி பழக்கமில்லை. என் கணவர்தான் மின்கம்பம் ஏற சொல்லித்தந்தார். அதனாலதான் உடற்தகுதி தேர்வுல வெற்றிபெற முடிஞ்சது. நான் ஏறினப்ப எடுத்த வீடியோ சமூக வலைதளங்கள் பரவுச்சு. எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னும் எழுத்துத் தேர்வு மட்டும்தான் பாக்கி. அதுல நிச்சயம் ஜெயிச்சு என்னை மாதிரி கிராமப் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமா ஆவேன்'' என்று தம்ஸ்அப் காட்டுகிறார் லதா.
பிரேமலதா ( கல்வி)
/tamil-ie/media/media_files/uploads/2019/12/template-2019-12-25T161249.421-300x200.jpg)
சமீபத்தில் ஜெனீவா நகரில் நடைபெற்ற ஐ.நா சபையின் மனித உரிமைகள் கவுன்சில் சிறப்பு அமர்வில் கலந்துகொண்டு பேசிய மதுரை மாவட்டம் இளமனூரை அடுத்த கார்சேரி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரேமலதா பலரின் கவனத்தைக் கவர்ந்தார். இளமனூர் ஆதி திராவிடர் நலப் பள்ளியில் பள்ளிக்கல்வி முடித்து, இப்போது கல்லூரிப்படிப்பைத் தொடர்ந்துவரும் பிரேமலதா, பள்ளியிலேயே மனித உரிமைக் கல்வி கற்றவர். மனித உரிமை பற்றிய குறும்படம் ஒன்றில் பேசியுள்ள அனுபவத்தால் பிரேமலதாவைத் தேடி வந்தது ஐ.நா சபையில் உரை நிகழ்த்தும் வாய்ப்பு. `கண்ணியத்துக்கு ஒரு பாதை: மனித உரிமைகள் கல்வியின் சக்தி' என்ற தலைப்பில் உரையாற்றிய பிரேமலதா, “இந்தியாவில் நிலவும் சாதிய முறையால் பாதிக்கப்பட்ட பெண் நான். நான் பிறந்த நேரம் முதலே என் மேலான சாதிய அடக்குமுறை ஆரம்பித்துவிட்டது. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று பிரித்துப்பார்த்து சாதி அடிப்படையில் குழந்தைகள் மனத்தில் பிரிவினையை உண்டாக்குவதை மனித உரிமைப் பாடங்கள் பயின்றபோது தெரிந்துகொண்டேன். இந்தியாவில் இப்போதைய கல்வி முறை இந்த ஏற்றத்தாழ்வுகளைக் களைவதாக இல்லை. நீட் தேர்வு முறை ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான வேறுபாட்டை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
மதுரை சின்னப்பிள்ளை (சமூக சேவை)
/tamil-ie/media/media_files/uploads/2019/12/template-2019-12-25T161523.609-300x200.jpg)
மதுரை மாவட்டத்தை சேர்ந்த 66 வயதான சின்னப்பிள்ளை, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னை சமூகப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறார். களஞ்சியம் என்ற பெயரில் மகளிர் சுய உதவிக் குழு அமைப்பை நிர்வகித்து வருகிறார். தமிழகம் முழுவதும் சுமார் 2,000 மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்க உதவியிருக்கிறார். மரபுசார் வேளாண்மை மீது கொண்ட ஈடுபாட்டால், அது குறித்த விழிப்புணர்வையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார். கடந்த 2000மாவது ஆண்டில் `ஸ்த்ரீ புரஸ்கார்' விருதை இவருக்கு வழங்கி கவுரவித்த அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், இவரது சமூக சேவையைப் பாராட்டும் வகையில் சின்னப்பிள்ளையின் கால்களைத் தொட்டு வணங்கினார். கிராமப்புறங்களில் மட்டுமே இயங்கிக்கொண்டிருந்த மகளிர் சுய உதவிக் குழுக்களை நகரத்துப் பெண்களும் பயன்படுத்தலாம் என்ற தெளிவைக் கொண்டுவந்தவர் சின்னப்பிள்ளை. இப்போது 12 மாநிலங்களைச் சேர்ந்த 250 கூட்டமைப்புகளுக்குத் தலைவியாக முதிய வயதிலும் ஓடி உழைத்து வருகிறார் சின்னப்பிள்ளை. மத்திய அரசு, இவரது சேவையை பாராட்டி, 2019ம் ஆண்டின் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.
இளவேனில் வாலறிவன் ( விளையாட்டு)
/tamil-ie/media/media_files/uploads/2019/12/template-2019-12-25T161346.634-300x200.jpg)
2019ம் ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்றவர், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். தைபே நகரில் நடைபெற்ற ஆசிய சீனியர் போட்டிகளில் தன் முதல் சர்வதேச தங்கப்பதக்கத்தை வென்றார் இளவேனில். தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சர்வதேசப் போட்டிகளில் தங்கம் வெல்வது இதுவே முதன்முறை.
இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட தமிழகத்தைப் பூர்வீகமாகக்கொண்ட விளையாட்டு வீராங்கனை இளவேனில் வாலறிவன். கடலூரில் பிறந்த இளவேனில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் வசித்து வருகிறார். துப்பாக்கி சுடுதலில் ஆர்வம்கொண்டவரின் திறமைக்கு தீனி போட முயன்றது குடும்பம். 2018-ம் ஆண்டு, தன் 19-வது வயதில் ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டிகளில் தங்கம் வென்றார் இளவேனில்.
சௌமியா சுவாமிநாதன் (சுகாதாரம்)
/tamil-ie/media/media_files/uploads/2019/12/template-2019-12-25T161440.832-300x200.jpg)
உலக சுகாதார அமைப்பின் ( World Health Organization (WHO)) ஒரு துறையின் தலைமை விஞ்ஞானியாக சௌமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னால், இந்த அமைப்பின் துணை பொது இயக்குனர் பதவியை கடந்த 2017ம் ஆண்டு முதல் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. மருத்துவத்தில் மேற்படிப்பு பயின்று இருக்கும் இவர், காசநோய், எய்ட்ஸ் பற்றிய ஆய்வு மற்றும் விழிப்புணர்வு திட்டங்களில் பெரும்பங்காற்றியுள்ளார்.
இவர், பசுமைப்புரட்சியின் தந்தை என்றழைக்கப்படும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களின் மகள் ஆவார்.