சர்ச்சைக்குரிய Zoom செயலியை பதிவிறக்கம் செய்ய மாணவர்களைக் கட்டாயப்படுத்துவதா? கல்வியாளர்கள் கேள்வி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் பொது முடக்கம் எப்போது முடியும் என்று தெரியாத நிலையில், தமிழகத்தில் சில ஆசிரியர்களும் பள்ளிகளும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்த Zoom செயலியை அவர்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

tamil nadu teachers impose 10th class student to download zoom app, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூம் செயலியில் ஆன்லைன் பாடம் நடத்த கல்வியாளர்கள் எதிர்ப்பு, ஜூம் செயலி, கொரோனா வைரஸ், பொது முடக்கம், tamil nadu teachers take lessons to 10th class student, teachers take online class to 10th class, educationist opposed to teachers online class, coronavirus, lock down, latest tamil nadu news, latest tamil news
tamil nadu teachers impose 10th class student to download zoom app, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூம் செயலியில் ஆன்லைன் பாடம் நடத்த கல்வியாளர்கள் எதிர்ப்பு, ஜூம் செயலி, கொரோனா வைரஸ், பொது முடக்கம், tamil nadu teachers take lessons to 10th class student, teachers take online class to 10th class, educationist opposed to teachers online class, coronavirus, lock down, latest tamil nadu news, latest tamil news

கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள இந்த பொது முடக்க காலத்தில், அனைவரும் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எப்போது ஓயும் பொது முடக்கம் எப்போது முடியும் என்று தெரியாத நிலையில், தமிழகத்தில் சில ஆசிரியர்களும் பள்ளிகளும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்த Zoom செயலியை அவர்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியானது. ஒரு தொற்று நோயால் ஏற்பட்டுள்ள பொது முடக்கத்தால் ஏற்கெனவே மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களை, ஆசிரியர்களின் இந்த நடவடிக்கை மேலும் பாதிக்கும். அதிலும், பாதுகாப்பற்ற zoom செயலியை கட்டாயமாக பதிவிறக்கம் செய்யச் சொல்லி பாடம் நடத்துவது என்பது மாணவர்களின் மனநிலையை மேலும் சிக்கலாக்கும் என்று கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “10 ஆம் வகுப்பு மாணவர்களை Zoom செயலி பதிவிறக்கம் செய்யக் கட்டாயப்படுத்துவதை கைவிட்டுவிட்டு அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் தினம் ஒருமணி நேரம் கல்வி ஓளிபரப்பு செய்ய வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், அந்த அறிக்கையில், “கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி,கல்லூரிகள் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. தினக்கூலித்தொழிலாளிகள் தினம்தினம் மன உளைச்சலிலேயே உள்ளார்கள்.இதனால் ஏழை,எளியோர் தங்களின் வாழ்வாதாரத்தினை இழந்து எப்போது கொரோனா முடிவுக்கு வரும் வாழ்க்கை மேம்படும் என கேள்விக் குறியாகவே வாழ்ந்து வருகிறார்கள். வெளியில் வரமுடியாததால் பத்துக்கு பத்து இடவசதி கொண்ட வீடுகளிலேயே முடங்கிப் போயுள்ளார்கள்.

இந்நிலையில் 10 ஆம்வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படும் என்று கூறி மாணவர்களைத் தொடர்புகொண்டு Zoom செயலியை பதிவிறக்கம் செய் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். ஆண்ட்ராய்டு செல்போன் இல்லாத மாணவர்கள் பெற்றோர்களை தொந்தரவு செய்கிறார்கள். பெற்றோர்கள் இயலைமையை எண்ணி ஒவ்வொரு நாளும் சாப்பாட்டிற்கே திண்டாடும் நிலையில் ஆண்ட்ராய்டு போன் எப்படி வாங்க முடியும்.

ஆன்லைன் வகுப்புகள் வரவேற்புக்குரியது அதேசமயம் அதனை செயல்படுத்தும் வசதிகளை ஆராயவேண்டும்.
வரும் அழைப்பை ஏற்பதைத் தவிர வேறு எதுவுமே தெரியாமல் மொபைல் போன் வைத்திருக்கும் பெற்றோரின் குழந்தைகள் ஆன்லைன் வகுப்பை எப்படி எதிர் கொள்வார்கள்?

மேலும் Zoom செயலி பாதுகாப்பானது அல்ல என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனை சரியான வழிகாட்டுதல் இல்லாமல் பயன்படுத்தகூடாது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் Zoom செயலி மூலம் வகுப்புகள் நடத்தி அதில் தவறான படங்கள் வெளிபட்டு தொடர்பிலிருந்த அனைவரும் பார்க்க நேர்ந்ததால் ஏற்பட்ட விளைவுளால் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் Zoom செயலியை தடைசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.

வேலையிழந்து நிற்கும் நடுத்தர வர்க்கம், தினக்கூலி வேலைசெய்வோர் தங்கள் குழந்தைக்கு லேப்டாப், ஹெட்செட், வாங்கிக் கொடுத்து தனியறை என்பதே அறியாதவர்கள் அதிவேக இணைய இணைப்புடன் ஆன்லைன் வகுப்பை கவனிக்க வசதி செய்து கொடுப்பது சாத்தியமா? இந்த வாய்ப்புப்பெற்ற குழந்தைகள், வாய்பில்லாத குழந்தைகளின் நிலை? சம வாய்ப்பு மறுக்கப்படுமே. இந்த சிக்கல்களாலும் பொருளாதார காரணங்களாலும் இடை நிற்றல் அதிகரிக்கலாம்.

ஏற்கனவே வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு புதிய தலைவலியைக் கொடுக்கவேண்டாம்.
கல்வி தொடர்பு விட்டுவிடாமல் இருக்க தற்போது அரசு கல்வி டிவி, பொதிகை சேனல்களில் ஒளிபரப்புவது போல அனைத்து முதன்மை தொலைக்காட்சிகளிலும் தினம் ஒரு மணி நேரம் மாறுபட்ட நேரங்களில் கல்விக்காக ஒதுக்கி பாடம் நடத்தினால் பாதிப்பில்லாமல் கல்வி கற்க முடியும். ஆகையால் ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் Zoom செயலியை பதிவிறக்கம் செய்ய கட்டாயப்படுத்தி பெற்றோர்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்குவதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தடுத்து நிறுத்தியும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் கொரோனா பிரச்சினை முடிவுக்கு வரும்வரை தினம் ஒரு மணிநேரம் 10 ஆம் வகுப்பு பாடம் ஒளிபரப்பு செய்ய ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன். என்று தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் Zoom செயலியை பதிவிறக்கம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தப்படுவது குறித்து, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஐ.இ. தமிழுக்கு கூறுகையில், “இது ஒரு பேரிடம் காலம் என்பதையும் பேரிடரால் பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொண்டு இதை பேச வேண்டும். கொரோனா வைரஸ் பேரிடராலும் பொது முடக்கத்தாலும் ஏற்கெனவே மன ரீதியாக அச்சத்திற்குள்ளாகி இருக்கிறார்கள். இந்த நேரத்தில், Zoom செயலி மூலமாகவோ அல்லது வேறு எந்த ஆன்லைன் மூலமாகவோ மாணவர்களுக்கு பாடம் நடத்துவது மாணவர்களை மேலும் சிக்கலாக்கவே செய்யும்.

முதலில் எல்லா மாணவர்களுக்கும் ஆண்ட்ராய்டு போன் இருக்குமா என்பது தெரியாது. அவர்களுக்கு இணைய வசதி இருக்குமா என்பது தெரியாது? அவர்களுக்கு சரியான இணைய இணைப்பு இருக்குமா என்பதும் கேள்வி. வீடில்லாத பல மாணவர்கள் ஆண்ட்ராய்டு போனுக்கு எங்கே செல்வார்கள். பத்துக்கு பத்து சிறிய வீடுகளில் வசிக்கும் மாணவர்கள் என்ன செய்வார்கள் என்று யோசிக்க வேண்டும். மலைக் கிராமங்களில் உள்ள மாணவர்களின் நிலை பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும்.

இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பாதுகாப்பு இல்லாத Zoom செயலியை கட்டாயமாக பதிவிறக்கம் செய்யச்சொல்லி பாடம் நடத்துகிறார்கள் என்றால் அதனால் மாணவர்கள் மேலும் மன அழுத்தத்துக்கு உள்ளாவார்கள்.

அரசும் ஆசிரியர்களும் இந்த பேரிடர் காலத்தில் பொது முடக்கத்தால் கல்வி செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதை ஒரு நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயமாக மட்டுமே பார்க்கக் கூடாது.

பத்தாண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 15-க்கு மேல்தான் வெளியாகும். அதனால், இப்போது மே மாதத்திற்குள் அல்லது ஜூன் மாதத்திற்குள்ளாகவே எல்லாவற்றையும் முடிக்க வேண்டும் என்று அவசரம் காட்டத் தேவையில்லை.

பாடப்புத்தகங்களில் உள்ள விஷயங்கள் மட்டும்தான் கல்வியியல் செயல்பாடு என்று கருதாமல், மாணவர்களை இந்த வரலாற்றில் இது போன்ற தொற்று நோய் தாக்கம் குறித்து கற்க செய்யலாம். பொது முடக்க காலத்தில் சமூகம் எப்படி இருக்கிறது? அல்லது அவர்கள் வசிக்கும் பகுதியின் வரலாறு, சமூக என்று சமூகக் கல்வியுடன் இணைந்த கல்வி செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்தலாம். சமூகக் கல்வியுடன் இணைந்து கற்றவர்களே பின்னாட்களில் பெரிய மனிதர்களாக உருவாகியிருக்கிறார்கள்.

எப்படியானாலும், இந்த ஆன்லைன் வகுப்புகள், அல்லது Zoom போன்ற செயலிகள் மூலம் நடத்தப்படும் பாடங்கள் வகுப்பறை வகுப்புக்கு இணையாக முடியாது. அதனால், மாணவர்களுக்கு மேலும் அழுத்தம் கொடுக்காமல் இவற்றை தவிர்க்க வேண்டும்.

பொது முடக்கம் முடிந்தாலும் குறைந்தது 15 வகுப்பு நாட்களாவது மாணவர்களுக்கு வகுப்பு நடத்திய பிறகே அவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் தேர்வை எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கை ஏற்படும். தனியார் பள்ளிகளைப் பார்த்து ஆன்லைனில் பாடம் நடத்துவதை அரசு பள்ளிகளும் செய்தால் கல்வி சந்தைப் படுத்துவதை அங்கீகரிப்பதாக ஆகிவிடும். அதனால், அனைத்து பள்ளிகளிலும் இந்தப் போக்கை நிறுத்த வேண்டும்.” என்று கூறினார்.

மாணவர்களைக் கட்டாயப்படுத்தி Zoom செயலியை பதிவிறக்கம் செய்யச்சொல்லி ஆசிரியர்கள் பாடம் நடத்துவது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “அரசு அதிகாரப்பூர்வமாக அலுவலக ரீதியாக இது போல எதுவும் அறிவிக்கவில்லை. தொழில்நுட்பம் தெரிந்த சில ஆசிரியர்கள் ஒரு ஆர்வத்தில், வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு இப்படி ஆண்லைனில் பாடம் நடத்துகின்றனர். இதில் எல்லா மாணவர்களிடமும் ஆண்ட்ராய்டு செல்போன் இருக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. அப்படியே அனைவரிடமும் போன் இருந்தாலும் அனைவருக்கும் இணையவசதி சீராக கிடைக்குமா என்றால் அதற்கு வாய்ப்பு இல்லை. சில தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் நடத்துகின்றனர். தனிபட்ட முறையில் என்னிடம் கேட்டால், இப்படி ஆன்லைனில் பாடம் நடத்துவது எல்லாம் தேவையில்லை என்றுதான் சொல்வேன். pnptf யூ டியூப் சேனலில் பாடங்களை நடத்தி பதிவேற்றியுள்ளனர். ஆசிரியர்களும் பாடங்களை நடத்தி பதிவேற்றலாம். பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர்கள், மாணவர்களுக்கு செயலி மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதை தடை செய்து உத்தரவிட வேண்டும்.

அதோடு, பொது முடக்கம் முடிந்து மாணவர்களை நேரடியாக தேர்வறைக்கு அனுப்ப முடியாது. அவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு மாதம் வகுப்புகள் நடத்தப்பட்டு அவர்கள் இயல்பு நிலைக்கு வந்த பிறகே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.

கொரோனா பேரிடராலும் பொது முடக்கத்தாலும் ஏற்கெனவே மன அழுத்தத்திற்குள்ளாக இருக்கும் மாணவர்களுக்கு சர்ச்சைக்குரிய Zoom செயலியை கட்டாயப்படுத்தி பதிவிறக்கம் செய்து ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவதற்கு கவ்வியாளர்கள், ஆசிரியர்கள் என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை விரைந்து நடவடிக்கை எடுக்குமா? கல்வியாளர்களின் கேள்வி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu teachers impose 10th class student to download zoom app to take lesson in online educationist opposed

Next Story
தமிழகம்- ஆந்திரா எல்லையில் திடீர் தடுப்புச்சுவர்: போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com