பேச்சுவார்த்தை தோல்வி... திட்டமிட்டபடி நாளை முதல் ஸ்டிரைக்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

மே 15-ம் தேதி தான் போராட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து இன்றே ஸ்டிரைக் தொடங்கியது

அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இறுதிகட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து திட்டமிட்டபடி நாளை முதல் வேலைறுத்தம் தொடங்கும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஓய்வூதியம், நிலுவைத்தொகை உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மே-15-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தன. இது தொடர்பாக முன்னனதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில், சென்னையில் உள்ள பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடனான இறுதிகட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்தையும் தோல்வியில் முடிவடைந்ததால், திட்டமிட்டபடி நாளை முதல் (மே-15) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஓய்வூதியம், நிலுவைத்தொகை உள்ளிட்ட பணப்பலன்கள் ரூ.7,000 கோடி தரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.1250 கோடி தர தயார் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நாளை முதல் வேலை நிறுத்தம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வேலூர், நீலகிரி, திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் இன்றே வேலை நிறுத்தம் தொடங்கிவிட்டது. போக்குவரத்து ஊழியர்கள் பணிமனைகளில் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தை தொடங்கிவிட்டனர். இதனால், வெளியூர் சென்று வீடு திரும்பும் மக்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதனிடையே, பணிமனை ஊழியர்களை கொண்டு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

×Close
×Close