வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபனி புயல் தமிழகத்தை நெருங்காது என தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி அளித்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ தளத்தில், ஃபனி புயல் ஏப்.30ம் தேதி மாலை வட கடலோர தமிழகத்தை நெருங்கும் என்று குறிப்பிட்டிருக்கிறது. புயல் குறித்த இந்த மாறுபாடான புரிதலை தெளிந்து கொள்ள பிரபல தனியார் வானிலை ஆய்வாளரான 'தமிழ்நாடு வெதர்மேன்' என்றழைக்கப்படும் ஜான் பிரதீப்பிடம் ஐஇ தமிழ் சார்பில் தொடர்பு கொண்டு பேசினோம்.
அவர் கூறுகையில், "இந்திய வானிலை ஆய்வு மையம் சொல்லி இருப்பது உண்மை தான். இந்த ஃபனி புயல் அதி தீவிர புயலாக மாறப்போகிறது. இன்னும் 24 மணி நேரத்தில் அதி தீவிரமாக உருமாறும். ஏப்ரல் 30ம் தேதி மாலை வட கடலோர தமிழகத்தை ஃபனி புயல் நெருங்கும் என்று இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. ஆனால், எவ்வளவு கி.மீ. தொலைவில் அது நெருங்குகிறது என்பதே இங்கு கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
மேலும் படிக்க - Fani cyclone chennai live updates: ‘ஃபனி புயல் பற்றிய லைவ் அப்டேட்ஸ்
150 கி.மீ. தொலைவில் ஃபனி புயல் தமிழகத்தை நெருங்கினால், நமக்கு நல்ல மழை கிடைக்கும். அதுவே, 30ம் தேதி மாலை 300 கி.மீ. தொலைவில் திரும்பினால், மேகங்கள் எந்தளவிற்கு இருக்கும் என்று சொல்ல முடியாது. மழை அளவு குறையும்.
ஆனால், இதில் பிரச்சனை என்னவெனில், தமிழகத்தில் இருந்து 300 கி.மீ. தொலைவில் புயல் திரும்பிவிட்டால் ஈரப்பதத்தையும் சேர்த்து எடுத்துச் சென்றுவிடும். இதனால், நமக்கு வெப்பம் தான் அதிகரிக்குமே தவிர, மழை இருக்காது.
மேலும் படிக்க - '30ம் தேதி மாலை ஃபனி புயல் தமிழகத்தை நெருங்கும்' - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
நாளை(ஏப்.28) 80 சதவிகிதம் ஃபனி புயல் குறித்த விவரத்தை நம்மால் கணித்துவிட முடியும். நாளை மறுநாள் (ஏப்.29) முழுதாக புயல் குறித்த தகவலை நாம அறிந்து கொள்ள முடியும்.
அட்லாஸ்ட், இயற்கையை யாராலும் 100% துல்லியமாக கணிக்கவே முடியாது. மற்றபடி, தமிழக வானிலை அறிக்கைக்கும், இந்திய வானிலை அறிக்கைக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
பட், அது 150 கி.மீட்டரா தொலைவிலா அல்லது 300 கி.மீட்டர் தொலைவிலா என்பதே நம் முன்னே இப்போது இருக்கின்ற மிகப்பெரிய கேள்வியாகும். அதற்கும் நாளை ஏறக்குறைய பதில் கிடைத்துவிடும்" என்று தெரிவித்தார்.