கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களான தியேட்டர், பார்க், கோவில்கள், போக்குவரத்து என அனைத்தும் தடை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மேலும் இந்த உத்தரவினால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவில் படிப்படியாக தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்தக்கு அனுமதி அளிக்கப்பட்டு, கோவில்களும் திறக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கில் பல கட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான தடை இன்னும் தொடர்ந்து வருகிறது.
இதனால் கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலே முந்தைய அரையாண்டு தேர்வின் அடிப்படையில் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவில் தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைளுடன் கல்லூரிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும் தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பினால் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பொதுமக்களிடம் பெரும் கேள்வி எழுந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"