Latest Tamil News : உடல்நலக் குறைவால் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அவருடைய சகோதரர் சத்தியநாராயணன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் எந்த பாதிப்புமில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக 32-வது நாளாக டெல்லி-ஹரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை விவசாய சங்கங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. எனவே வருகிற 29-ம் தேதி காலை 11 மணியளவில் அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் அரசு பேருந்துகளைத் தனியார் வசம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து ‘இன்று முதல் அரசு பேருந்துகளை இயக்க மாட்டோம்’ எனத் தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
சென்னையில் தொடர்ந்து விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.51-க்கும், டீசல் ரூ.79.21-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
Live Blog
Today Tamil News : இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த நேரலையுடன் இணைந்திருங்கள்
ஆனால் தமிழக அரசின் இந்த அறிவிப்பு அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து சுயநலத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், ஊதிய உயர்வு கொடுக்க காலம் தாழ்த்தி வரும் தமிழக அரசு வரும் ஜனவரி 4-ந் தேதிக்குள் ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியிடவில்லை என்றால் பொங்கல் பரிசு விநியோகிப்பதை நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் சார்பில், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: “மாறுபட்ட கொரோனா தொற்றைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை. கொரோனா நெறிமுறைகளை மக்கள் தவறாமல் கடைப்பிடித்தால் மீண்டும் ஊரடங்கு தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மநீம தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இதுகாறும் ‘அம்மா ஆட்சி’ என்றே முழங்கிக்கொண்டிருந்தவர்கள் மீண்டும் புரட்சித் தலைவரின் பெயரைப் புழங்க ஆரம்பித்திருக்கிறார்கள். மகிழ்ச்சி. எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கும் முன்னரே, அவரவர் குவித்த சொத்துக்களுக்கு கணக்கு காட்டச் சொன்னவர் வாத்யார். காட்டுவீர்களா? ஒரே நாளில் 10 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தவர் எம்.ஜி.ஆர். ஊழலில் சாதனை படைத்தவர்களை நீக்க துணிச்சல் உண்டா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுகவின் சாதனை வரலாற்றைத் தெரிந்து கொண்டு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் விமர்சிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “மத்திய அரசு வேளாண் சட்டங்கள் குறித்து விவசாய பிரதிநிதிகளுடன் பொதுவெளியில் விவாதிக்க வேண்டும். விவசாயிகள் கடந்த ஒரு மாதமாக தெருக்களில் கடுங்குளிரில் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து, அவர் ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்தார்.
தமிழகத்தை டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவதே எங்களது திட்டம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் செல்லுபடிக் காலம் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
கோவிட்-19 பரவலைத் தடுப்பதற்காக, ஒட்டுநர் உரிமம், பதிவுச் சான்றிதழ்கள், அனுமதிகள் போன்றவற்றுக்கான காலக்கெடுவை 2021 மார்ச் 31ஆம் தேதி வரை, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது
அய்யன் வள்ளுவருக்குக் கல்வித் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் காவி வர்ணம் பூசத் துணிந்தவர் எவராயிருப்பினும் அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், இத்தகைய செயல்கள் வருங்காலங்களில் நடைபெறாது தடுக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.
பிரிட்டனில் பரவிவரும் புதியவகை கோவிட்-19 பாதிப்பு முதல்முறையாக ஸ்பெயினிலும் கண்டறியப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஒருவாரம் ஓய்வெடுக்க மருத்துவமனை நிர்வாகம் அறிவுறித்தியுள்ளது.
டெஸ்ட் ஆட்டங்களுக்கான ஐ. சி. சி கனவு அணி அறிவிக்கப்பட்டது- இதில் , விராட் கோலி , அஷ்வின் இடம் பெற்றுள்ளனர்.
கோவிட் – 19 பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் விகிதம் 95.82 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 21 ஆயிரத்து 430 பேர் குணமடைந்துள்ளதாக அந்த அமைச்சகம் கூறியுள்ளது. புதிதாக 18 ஆயிரத்து 732 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 279 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 13 வயதுச் சிறுமி சீரழிக்கப்பட்ட கொடுமை கண்டு மனம் பதறுகிறது! சட்டங்கள்-சமூகத்தின் தோல்வி இது. பெண்களின் கண்ணியமே நம் நோக்கமாக வேண்டும். திமுக ஆட்சியில் பெண்கள் – குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைத்து, ரகசியப்பிரிவும் உருவாக்கப்படும்! என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அம்மையார் யசோதா அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன் என்று சீமான் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து அதன் பாதிப்பில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற உறுதி மொழியை இந்த புத்தாண்டில் ஏற்க வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.
அறிவியல் உலகம் வியந்திடும் வகையில் தஞ்சை மாணவர் ரியாஸ்தீன் உலகின் எடை குறைந்த செயற்கைகோள்களை வடிவமைத்திருக்கிறார்; அவற்றை 2021-ல் நாசா விண்ணில் ஏவுவது இந்தியாவுக்கும் நம் தமிழகத்துக்கும் பெருமிதம் தரும் சாதனை என்று மு.க ஸ்டாலின் தெரிவித்தார்
திமுக அளித்த ஊழல் பட்டியலில் உண்மை இல்லை என்றும் பொய்யும், எரிச்சலும்தான் உள்ளது என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
7.5% இட ஒதுக்கீடு மூலம் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது அதிமுக அரசு என்றும் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் புதிதாக 1,650 மருத்துவ இடங்கள் உருவாகும் என்றும் பொதுக்கூட்டத்தில் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
“எம்.ஜி.ஆருக்கும் வாரிசு கிடையாது, ஜெயலலிதாவுக்கும் வாரிசு கிடையாது; அவர்களுக்கு நாட்டு மக்கள்தான் வாரிசு” பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி.
“அதிமுகவில் சாதாரண தொண்டனும் முதல்வர் ஆகும் வாய்ப்பு உள்ளது; சாதாரண தொண்டனுக்கும் கதவைத் தட்டி பதவி வழங்கும் கட்சி அதிமுகதான்” என்று சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான யசோதாவின் மறைவிற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்திருக்கிறார். மேலும், யசோதாவின் பூத உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காகச் சென்னை கோடம்பாக்கம் வேளாளத் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான அதிமுகவின் பிரச்சாரம் சென்னை ராயப்பேட்டையில் இன்று நடைபெறுகிறது. ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அவைத்தலைவர் இ.மதுசூதனன், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், பல்வேறு பிரிவுகளின் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் ஏற்கெனவே நிர்வாக வசதிகளுக்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு இருந்த நிலையில் நாளை முதல் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் நாளை உதயமாகிறது. இதனையடுத்து அம்மாவட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான யசோதா உடல் நலக்குறைவால் இன்று மரணமடைந்தார்.