Tamil News Highlights : அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்து வருகின்றனர். அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் சோதனை நடைபெற்று வருகிறது. ஜோலார்பேட்டை , திருப்பத்தூர், ஏலகிரி மலை, சென்னை உள்ளிட்ட வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் சோதனை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சபரிமலை கோயிலில் நடை திறப்பு
சபரிமலை கோயிலில் புரட்டாசி மாத பூஜைக்காக இன்று நடை திறக்கப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வரும் 21-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
கோவை கல்லூரியில் 46 மாணவர்களுக்கு கொரோனா: கூடுதல் கட்டுப்பாடுகள்
கோவையில் கல்லூரி ஒன்றில் 46 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி கோவை மாவட்டத்தில் பால், மருந்தகம், காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளைத் தவிர, பிற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், அடுமனைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்காக மட்டும் இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மதுரை, ஈரோடு, புதுக்கோட்டை, சேலம் ஆகிய மாவட்டங்களில் காற்றுடன் நல்ல மழை பெய்ததால், நீர்நிலைகளில் தண்ணீர் சேரும் என்றும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 25 பேர் உயிரிழந்துள்ளனர்
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ. 34 லட்சம் பணம், ரூ.1.80 லட்சம் வெளிநாட்டு பணம், 623 சவரன் தங்க நகைகள், 7.2 கிலோ வெள்ளி, ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது
அரசு பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பினை 2 ஆண்டுகள் உயர்த்தப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது
T20 உலகக் கோப்பைக்கு பின், T20 அணி கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த இந்த முடிவை எடுத்துள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோர் வரும் சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் சொகுசு காருக்கான நுழைவு வரியை செலுத்தி விட்டார் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.
டிஜிட்டல் ஊடகங்களை கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான
கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் தங்கம், பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கலசப்பாக்கத்தில் உள்ள வீரமணியின் உறவினர் வீட்டில் இருந்து ஹார்டு டிஸ்க், பென்டிரைவ், மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி 2020ல் மட்டும் இந்தியாவில் சூழலியல் குற்றங்களின் எண்ணிக்கை 78.1%ஆக அதிகரித்துள்ளது. 2020ல் சூழலியல் குற்றங்கள் அதிகம் நடந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்னும் 4 பேரை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது என்று ஆறுமுகசாமி ஆணையம் அறிவித்துள்ளது.
அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் தங்கள் அரசு பள்ளியில் படித்தது குறித்து விண்ணப்பத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும், அவ்வாறு குறிப்பிடாத மாணவர்கள் மீண்டும் தெரிவிக்கலாம் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டுள்ளார்.
7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 11 ஆயிரம் மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு 5 முறை கலந்தாய்வு நடத்தப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கே 7.5% இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநில முதல்வராக பொறுப்பேற்ற பூபேந்திர படேல் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 04:30 மணிக்கு காந்திநகரில் நடைபெற உள்ளது.
ஒரு டோஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்து கூடுதல் தகவல்கள் தேவைப்படுவதால் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் தேவை என்று அறிவித்துள்ளது இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம்
அறிவிப்புகள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வருவதற்கு துறை செயலாளர்கள் பொறுப்பேற்க வேண்டும். குறிப்பிடப்பட்ட கால வரம்புக்குள் அறிவிப்புக்ளை நிறைவேற்ற வேண்டும். அறிவிப்புகளை செயல்படுத்தும் போது வழக்குகள் மூலம் தடை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து முதல்வர் அறிவித்துள்ளார்.
1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளி திறப்பு குறித்த அறிக்கை முதல்வரிடம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
டி.20 பேட்ஸ்மேன்களுக்கான ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் டேவின் மலான் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகின்ற நிலையில், 5வது இடத்தில் இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஓரிடம் முன்னேறி 4வது இடத்தைப் பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீரரான லோகேஷ் ராகுல் 6வது இடம் பிடித்துள்ளார்
ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 19ம் தேதி முதல் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற உள்ளன. 50% ரசிகர்களுக்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து இன்று முதல் டிக்கெட் விற்பனை ஆரம்பமானது.
கத்தாரில் வருகின்ற 28ம் தேதி அன்று நடைபெற இருக்கும் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க இருந்த முன்னணி வீராங்கனை மனிக்கா பத்ரா, சோனிபட்டில் நடைபெற்ற தேசிய பயிற்சி முகாமில் பங்கேற்காத காரணத்தால் போட்டிகளில் இருந்து நீக்கியுள்ளது ஆணையம்.
டெல்லி போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான விவசாயிகளின் கோரிக்கைகளுக்கே செவி சாய்க்காத மத்திய அரசு மாணவ – மாணவிகளின் இறப்புக்கா செவி சாய்க்கும். நீட் என்ம் கொடிய அரக்கனை ஏவி உள்ளது மத்திய அரசு என்று அமைச்சர் துரைமுருகன் சாடல்
அதிமுக ஆட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் பலவற்றை ஐ.ஜி. முருகன் விசாரித்த நிலையில், தமிழகத்தில் வழக்கு நடைபெற்றால் தனக்கு நீதி கிடைக்காது என்று பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. உயர் நீதிமன்றத்தில் முறையிட்டதால் வழக்கு தெலுங்கானாவுக்கு மாற்றப்பட்டது. தற்போது ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் வழக்கை தெலங்கானாவுக்கு மாற்றியதற்கு எதிராக தமிழ்நாடு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தமிழ்நாட்டிலேயே ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் வழக்கை விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு முறையீடு செய்துள்ளது.
பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான 6 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று சோதனை நடைபெற்ற இடங்களில் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஐதராபாத்தில் 6 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த ராஜூ என்பவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் உள்ள 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 13ம் தேதி அன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி ஆன நிலையில் பிற மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் 6வது முதல் 8வது வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் துவங்க வாய்ப்புகள் இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை வெற்றிகரமாக நடத்திட காங்கிரஸ் சார்பில் தேர்தல் பணிக்குழுவை நியமித்து அறிவித்துள்ளது தமிழக காங்கிரஸ் கமிட்டி.
நடைபெறவுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொண்டு பணியாற்றிட காங்கிரஸ் கட்சி சார்பில் கீழ்க்கண்ட தேர்தல் பணிக்குழு நியமிக்கப்படுகிறது. pic.twitter.com/huh67uokRL— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) September 16, 20216 முதல் 8-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
சமயபுரம், திருச்செந்தூர், திருத்தணி கோயில்களில் அன்னதான திட்டத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காலை 8மணி முதல் இரவு 10மணி வரை 3 வேளையும் அன்னதானம் வழங்கப்படும். தமிழ்நாட்டில் அன்னதான திட்டம் செயல்படும் கோயில்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்திருக்கிறது.
நாடு முழுவதும் கொரோனாவுக்கு 3,42,923 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 431 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 4,43,928 ஆக உயர்ந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, 8,303 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். நலம்பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3,25,60,474-ஆக அதிகரித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடப்பதில் உள்நோக்கம் உள்ளது என்றும் அதிமுகவினர் தேர்தல் பணிகளில் ஈடுபடக் கூடாது என்பதற்காக நடத்தப்படும் சோதனை இது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் குறிப்பிட்டார்.
2021-ம் ஆண்டில் உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பிரபலங்கள் பட்டியலை அமெரிக்காவின் டைம் இதழ் வெளியிட்டுள்ளது. இதில், பிரதமர் மோடி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பாளர் அதார் பூனவல்லா உள்ளிட்ட சில இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.
2016 முதல் 2021 வரை 28.78 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் வாங்கியுள்ளார் என்றும் ரூ.1.83 கோடிக்கு மிகாமல் மட்டுமே சொத்து இருந்திருக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது எஃப்.ஐ.ஆர் செய்யப்பட்டிருக்கிறது. இதனால், 5 ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்து சேர்த்ததாக கே.சி.வீரமணி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.