scorecardresearch
Live

Tamil News Today : சட்டம் – ஒழுங்கு குறித்து மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை ஆலோசனை

Tamil Nadu News, Tamil News Updates, Omicron Latest News 6th February 2022 தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil News Today : சட்டம் – ஒழுங்கு குறித்து மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை ஆலோசனை

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு நாடு முழுவதும் 2 நாள் துக்கம் அனுசரிப்பு. தேசியக் கோடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Tamil Nadu News Updates: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று முதல் இணையம் வாயிலாக பரபரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் 2022 : முக்கிய தகவல்கள் 2 நிமிடத்தில்

பெட்ரோல், டீசல் அப்டேட்

94ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்

நீட் விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் வரும் 8 ஆம் தேதி நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் ராமானுஜரின் பிரம்மாண்ட சிலை

ஹைதராபாத்தில் 1,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 216 அடி உயர ராமானுஜர் சிலையை, பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். வரும் 7 ம் தேதி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், 8 ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 13ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோர் வருகை தர உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
22:21 (IST) 6 Feb 2022
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 6,120 பேருக்கு கொரோனா; 22 பேர் பலி

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 6,120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 22 பேர் உயிரிழந்தனர்.

22:12 (IST) 6 Feb 2022
மத்திய அரசு அலுவலகம் நாளை முதல் 100% பணியாளர்களுடன் இயங்கும் – மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங்: மத்திய அரசு அலுவலகங்கள் பிப்ரவரி 7ம் தேதி முதல் முழு அளவிலான பணியாளர்களுடன் இயங்கும். கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை பணியாளர்கள் பின்பற்றுவதை துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

22:03 (IST) 6 Feb 2022
‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசிக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி

ரஷ்யாவின் ஒற்றை டோஸ் 'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசிக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதியளிக்கப்படும் 9வது தடுப்பூசியாக ஸ்புட்னிக் லைட் இடம்பிடித்துள்ளது.

21:37 (IST) 6 Feb 2022
சட்டம் – ஒழுங்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

சட்டம் – ஒழுங்கு குறித்து துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் காவல்துறாஇ உயர் அதிகாரிகளுடன் பிப்ரவரி 7ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

21:13 (IST) 6 Feb 2022
அனைத்துகட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காதது ஒரு பொருட்டே இல்லை – சீமான்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்: “திமுக ஆளும் கட்சி ஆனவுடன் சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மட்டுமே அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியும் என்கின்றனர். அனைத்துகட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காதது ஒரு பொருட்டே இல்லை. சமூக நீதி என்றால் என்னவென்று தெரியாத பாஜகவிடம் நாடு சிக்கிகொண்டுவிட்டது. ஏழரை ஆண்டுகளில் அதானியை இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் ஆக்கியதே பாஜகவின் சாதனை.” என்று கூறினார்.

20:00 (IST) 6 Feb 2022
1000வது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. மேற்கு இந்திய தீவுகள் அணி 176 ரன்னுக்கு சுருண்டது. 177 ரன் என்ற வெற்றி இலக்கை இந்திய அணி 28வது ஓவரிலேயே எளிதாக எட்டியது.

19:33 (IST) 6 Feb 2022
லதா மங்கேஷ்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல், 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் தகனம் செய்யப்பட்டது.

19:31 (IST) 6 Feb 2022
மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை

மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில், மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. லதா மங்கேஷ்கர் உடலுக்கு துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது. லதா மங்கேஷ்கரின் உடலில் போர்த்தப்பட்ட தேசியக்கொடி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

18:34 (IST) 6 Feb 2022
லதா மங்கேஷ்கர் உடலுக்கு மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி இறுதி அஞ்சலி

மும்பை – சிவாஜி பூங்காவில், மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் உடலுக்கு மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

18:32 (IST) 6 Feb 2022
நீட் விவகாரத்தில் திருடனைப் போல சிக்கிக்கொண்டது அதிமுக – முதலமைச்சர் ஸ்டாலின் சாடல்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் காணொலி வழியாக பரப்புரை செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்த ஸ்டாலினின் அரசு, உங்களுடைய அரசு, உங்க எல்லோருக்குமான் அரசு, இது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல… இனத்தின் ஆட்சி. நீட் விவகாரத்தில் திருடனைப்போல சிக்கிக்கொண்டது அதிமுக. படிப்பதற்கே ஒரு தகுதி வேண்டும் என்று தடுக்கிற சூழ்ச்சியுடன் வருபவர்களைத்தான் எதிர்க்கிறோம். நீட் எதிர்ப்பில் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். நீட் மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு விரோதமாக எந்த திட்டம் வந்தாலும் அதை எதிர்ப்போம்” என்று கூறினார்.

17:55 (IST) 6 Feb 2022
கோவை மாவட்டம் முழுவதும் 300 இடங்களில் காணொலி வழியாக மு.க. ஸ்டாலின் பரப்புரை

கோவை – நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். கோவை மாவட்டம் முழுவதும் 300 இடங்களில் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை செய்கிறார்.

17:47 (IST) 6 Feb 2022
அதிமுகவினர் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம் – இ.பி.எஸ்

தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளதால், அதிமுகவினர் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். நீட் தேர்வை கொண்டு வந்தது திமுகவும், காங்கிரசும்தான்; நீட் தேர்வை தடுப்பதுதான் அதிமுக என்று இ.பி.எஸ் கூறியுள்ளார்.

17:39 (IST) 6 Feb 2022
மறைந்த பாடகி லதா மங்கேஷ்கருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி மும்பை வருகை

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி மும்பை வந்தார்.

17:32 (IST) 6 Feb 2022
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சரண்ஜித் சன்னி தேர்வு

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சரண்ஜித் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

17:05 (IST) 6 Feb 2022
1000-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – வெஸ்ட் இண்டீஸ் அணியை 176 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா

அகமதாபாத் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 176 ரன்களுக்கு இந்தியா அணி சுருட்டியது. இந்திய அணியில் அதிகபட்சமாக சஹால் – 4, வாஷிங்டன் சுந்தர் – 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்

16:41 (IST) 6 Feb 2022
லதா மங்கேஷ்கர் மறைவு பேரிழப்பு, வேதனை அளிக்கிறது: இளையராஜா

பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் மறைவு பேரிழப்பாகும். ஆழ்ந்த வேதனை அளிக்கிறது என இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்

16:26 (IST) 6 Feb 2022
ஆளுநர் ஒரு ஏஜெண்ட் போல் செயல்படக் கூடாது – கமல்ஹாசன்

ஆளுநர், மத்திய அரசின் பேச்சை கேட்டு செயல்படுகிறர். ஆளுநர் ஒரு ஏஜெண்ட் போல் செயல்படக் கூடாது. கிழக்கு இந்திய கம்பெனியை அனுப்பிவிட்டு, வடக்கு இந்திய கம்பெனி ஆளுவதற்கா குடியரசு பெற்றோம்? என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்

16:15 (IST) 6 Feb 2022
நீட் தேர்வு விவகாரம்; அமைச்சர் துரைமுருகனின் அறிக்கைக்கு ஓபிஎஸ் கண்டனம்

நீட் தேர்விற்கு மூல காரணமாக திமுக இருந்ததை மறைத்து, அதிமுக மீது வீண் பழி சுமத்தப்படுகிறது என அமைச்சர் துரைமுருகனின் அறிக்கைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்

15:53 (IST) 6 Feb 2022
பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு நேபாள அதிபர் இரங்கல்

பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு நேபாள அதிபர் வித்யா தேவி பண்டாரி இரங்கல் தெரிவித்துள்ளார்

15:40 (IST) 6 Feb 2022
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; 697 வட்டார பார்வையாளர்களின் விவரங்கள் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், சாதாரண தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க உள்ள வட்டார பார்வையாளர்களின் விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் மாவட்ட வாரியாக 697 வட்டார பார்வையாளர்களின் பெயர், கைப்பேசி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது

15:22 (IST) 6 Feb 2022
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; மதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்த‌லில் மதிமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

15:01 (IST) 6 Feb 2022
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு சசிகலா இரங்கல்

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். லதா மங்கேஷ்கர் பாடிய 'ஆஜா சனம் மதுர சாந்தினி மெஹம்' என்ற பாடலை ஜெயலலிதா அடிக்கடி பாடிக்கொண்டே இருப்பார் என்று சசிகலா தெரிவித்துள்ளார்

14:18 (IST) 6 Feb 2022
பாடகி லதா மங்கேஷ்கரின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

மும்பையில் மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

13:59 (IST) 6 Feb 2022
பாடகி லதா மங்கேஷ்கர் கிரிக்கெட் ரசிகை: பிசிசிஐ

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் கிரிக்கெட்டுக்கு ரசிகையாக இருந்தவர் என்றும் இந்திய கிரிக்கெட் அணியை எப்போதும் ஆதரித்தவர் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

13:49 (IST) 6 Feb 2022
கோபி அருகே வனப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

கோபிசெட்டிபாளையம் அருகே புகையிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வனத் துறையின் அதை தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.

13:46 (IST) 6 Feb 2022
பெண் என குறிப்பிட்டு வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்!

விண்ணப்பத்தில் தனது பாலினத்தை பெண் எனக் குறிப்பிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பாமகவைச் சேர்ந்த குமரேசன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதே நபர் திமுக சார்பிலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

13:36 (IST) 6 Feb 2022
கருப்பு பேண்ட் அணிந்து களமிறங்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தி விதமாக மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான இன்றைய ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடவுள்ளனர்.

13:30 (IST) 6 Feb 2022
முதல் ஒரு நாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு

மே.இ.தீவுகள், இந்தியா இடையேயான முதல் ஒரு நாள் ஆட்டம் ஆமதாபாதில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் ஜெயித்த ரோஹித் தலைமையிலான இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, பொல்லார்டு தலைமையிலான மே.இ.தீவுகள் பேட்டிங் செய்ய உள்ளது.

13:21 (IST) 6 Feb 2022
ஊர்வலம், சைக்கிள் பேரணிக்கான தடை தொடரும்- தேர்தல் ஆணையம்

தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் ஊர்வலம், சைக்கிள், பைக் பேரணிக்கு ஏற்கனவே விதித்துள்ள தடை தொடரும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:53 (IST) 6 Feb 2022
புதுச்சேரியில் அதிகரித்துவரும் கொரோனா பரவல்

புதுச்சேரியில் மேலும் 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரியில் தற்போது 4,152 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

12:40 (IST) 6 Feb 2022
வார்த்தை ஜாலங்களால் மக்களை ஏமாற்றுகிறார் முதல்வர்-எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வார்த்தை ஜாலங்களால் மக்களை ஏமாற்றி வருகிறார் என்றும் தேர்தலில் வாக்குறுதிகளை அளித்துவிட்டு வெற்றி பெற்ற பின்பு எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என்றும் சேலத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தபோது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

12:32 (IST) 6 Feb 2022
மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

12:21 (IST) 6 Feb 2022
ஆஸி. கிரிக்கெட்டுக்கு சோகமான நாள் – முன்னாள் கேப்டன் பாண்டிங்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பதவியை ராஜிநாமா செய்ததையொட்டி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இது ஆஸி. கிரிக்கெட்டுக்கு சோகமான நாளாகும் என்று கவலை தெரிவித்துள்ளார்.

12:10 (IST) 6 Feb 2022
நீட் விவகாரம்: அதிமுக மீது திமுக அமைச்சர் குற்றச்சாட்டு

''ஆளுநரை திருப்திப்படுத்தவே நீட் மசோதா விவகாரம் தொடர்பாக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை. சமூக நீதி கூட்டமைப்பிற்கு தன்னை தலைவர் என முதல்வர் ஸ்டாலின் கூறவில்லை'' என்பதை அதிமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

11:57 (IST) 6 Feb 2022
மாலை 6.30 மணிக்கு லதா மங்கேஷ்கரின் இறுதிச் சடங்கு: மகாராஷ்டிர அரசு

மறைந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல் நண்பகல் 12.30 மணிக்கு அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் மும்பை, சிவாஜி பூங்காவில் மாலை 6.30 மணிக்கு அரசு சார்பில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்றும் மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

11:46 (IST) 6 Feb 2022
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு- கவிஞர் வைரமுத்து இரங்கல்

“ஒரு தாய் மாதிரி வருடிக்கொடுத்த பாடல்கள் லதா மங்கேஷ்கருடையது… இந்திய இசைக் குயிலுக்குத் தமிழ் அஞ்சலி” என்று கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

11:29 (IST) 6 Feb 2022
லதா மங்கேஷ்கர் மறைவு-முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவின் இசைக் குயில் லதா மங்கேஷ்கர் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். பல்வேறு மொழிகளில் தனது மெல்லிய குரலால் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் தொட்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

11:17 (IST) 6 Feb 2022
அதிமுக வேட்பாளரின் மனு நிராகரிப்பு – திமுக – அதிமுகவினர் கடும் வாக்குவாதம்

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் 33 வார்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களின் பரிசீலனை நடைபெற்றது. இதில் 7ஆவது வார்டு அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுவை தேர்தல் அலுவலர் நிராகரித்துள்ளார். இந்நிலையில், அங்கு திமுக-அதிமுகவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

10:54 (IST) 6 Feb 2022
லதா மங்கேஷ்கர் மறைவு – ராம்நாத் கோவிந்த் இரங்கல்

பாடகி லதா மங்கேஷ்கரின் பாடல்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தின; அவரின் சாதனைகள் ஒப்பிட முடியாதவை என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

10:45 (IST) 6 Feb 2022
முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

லதா மங்கேஷ்கரின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

10:39 (IST) 6 Feb 2022
லதா மங்கேஷ்கர் மறைவு – ராகுல் காந்தி இரங்கல்!

பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவு செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது தங்கக் குரல் ரசிகர்களின் இதயங்களில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டு இருக்கும். அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

10:24 (IST) 6 Feb 2022
லதா மங்கேஷ்கர் மறைவு – பிரதமர் மோடி இரங்கல்

பாடகி லதா மங்கேஷ்கர் மரணச் செய்தி வருத்தமளிக்கிறது. அவருடனான எனது உரையாட்கள் என்றும் மறக்க இயலாதவை; அவரை இழந்து வாடும் குடும்பத்தினரிடம் எனது ஆழந்த இரங்கலை தெரிவித்தேன் என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

09:53 (IST) 6 Feb 2022
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் (92) இன்று காலை காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

09:34 (IST) 6 Feb 2022
கடந்த 24 மணி நேரத்தில் 1.07 லட்சம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,07,474 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 865 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பிலிருந்து 2,13,246 பேர் குணமடைந்துள்ளனர்

09:02 (IST) 6 Feb 2022
ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மோடி வாழ்த்து

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “இளம் வீரர்களின் நேற்றைய ஆட்டம் இந்தியாவின் கிரிக்கெட் எதிர்காலம் பாதுகாப்பான கரங்களில் இருப்பதை காட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.

Web Title: Tamil news today local body election mk stalin campaign live updates