மெரினா காந்தி சிலை அருகே கவுரி லங்கேஷ் படுகொலைக்கு நீதி கேட்டு காந்தி ஜெயந்தியன்று போராடிய எழுத்தாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
காந்தி பிறந்த நாளையொட்டி (அக்.2) இன்று சென்னை மெரினாவில் காந்தி சிலைக்கு ஏராளமானோர் மலரஞ்சலி செலுத்தினர். அங்கு கூடிய எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டசிலர், கர்நாடகாவில் இடதுசாரி எழுத்தாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதிகேட்டு முழக்கம் எழுப்பினர்.
இதைக் காவல்துறையினர் தடுக்க முயன்றனர். ‘பதாகைகள் வைக்கக்கூடாது, முழக்கங்கள் எழுப்பக்கூடாது’ என கட்டுப்பாடு விதித்தனர். அதற்கு எழுத்தாளர்கள், ‘ஜனநாயக உரிமையை மறுக்கப்படுவதை ஏற்க முடியாது’ என்று கூறியபடி காந்தி சிலை அருகே அமர்ந்து கோஷம் எழுப்பினர்.
‘காந்தியை கொன்றவர்களே கவுரி லங்கேஷையும் கொன்றார்கள்’ என்று கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் கைது செய்து மயிலாப்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்குக் கொண்டு சென்றனர். பேராசிரியர்கள் வீ. அரசு, மங்கை, எழுத்தாளர்கள் மனுஷ்யபுத்திரன், வ. கீதா, கல்பனா உள்ளிட்டோர் அங்கு அடைக்கப்பட்டனர்.
இது பற்றி தகவல் கிடைத்து இவர்களைக் காண செயல்பாட்டாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அங்கேயும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கைதாகி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மனுஷ்யபுத்திரனை தொடர்புகொண்டு விவரம் கேட்டார். பிறகு மைலாப்பூர் திமுக நிர்வாகிகள் அங்கு சென்று கைதான பிரமுகர்களுக்கு அடிப்படை உதவிகளை செய்தனர்.
இந்தக் கைது நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், “கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான இந்தத் தாக்குதல், மற்றவர்களை எச்சரிக்கிற மிரட்டலுமாகும்” என்று விமர்சித்துள்ளது.
இந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் சு. வெங்கடேசன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“வரலாற்று உண்மைளைச் சொல்லக்கூடாது என்று தடுக்க சங் பரிவார அமைப்புகள் நாடு முழுவதும் பல முயற்சிகளைச் செய்துவருகின்றன. தமிழக அதிமுக அரசோ, தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாய்கிறது என்ற சொலவடைக்கு ஏற்றாற்போல, மத்திய ஆட்சியாளர்களுடன் இணக்கமாகச் செல்வதற்காக இப்படிப்பட்ட ஒடுக்குமுறைகளில் ஈடுபடுகிறது.
மதவெறியை எதிர்த்துப் போராடி, மக்கள் நல்லிணக்கத்திற்காக உயிர் நீத்தார் காந்தி என்பது வரலாற்று உண்மை. அவரது பிறந்தநாளில் சிலை அருகில் கூடியவர்கள், அவர் சுட்டுக்கொல்லப்பட்ட உண்மையோடு சேர்த்து இன்றைய கருத்துரிமை ஒடுக்குமுறை நிலைமை குறித்தும் சுட்டிக்காட்ட முயன்றிருக்கிறார்கள். இதை ஒரு பெரிய குற்றச்செயலாகக் கூறி, முழக்கமிடுவதற்குத் தடை விதித்ததும், அவர்களை அப்புறப்படுத்திக் கைது செய்ததும் இந்திய அரசமைப்பு சாசனம் உறுதிப்படுத்தும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானதாகும்.
முழக்கமிடுவதில் பங்கேற்றவர்கள் சமூகப் பொறுப்புடன் அறிவுத்தளத்தில் செயல்படுகிற எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் சிந்தனையாளர்களுமாவர். நாட்டின் பன்முகப் பண்பாட்டு மரபைப் பாதுகாக்கும் முனைப்புடன் அவர்கள் எழுப்பிய முழக்கம் நியாயமானது. காவல்துறையின் இந்த நடவடிக்கை மூலம் ஆர்எஸ்எஸ்-பாஜக திட்டங்களுக்குத் தனது ஒத்துழைப்பை அதிமுக அரசு காட்டிக்கொள்கிறது என்றே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
ஜனநாயக உரிமைக்காகக் குரல் எழுப்பியோருடன் தமுஎகச தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள்கிறது. கைது-வழக்கு நடவடிக்கையை அரசு விலக்கிக்கொண்டு, கருத்து வெளிப்பாட்டு உரிமை பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. அரசியல், சமூக, பண்பாட்டுத்தள இயககங்கள் ஒரே குரலாக இந்த நடவடிக்கையைக் கண்டிக்க வேண்டும் என்றும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது”. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கைதானவர்களை மாலை 6 மணிக்கு போலீஸார் விடுவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.