கிரிக்கெட்டில் புகுந்த மாட்டிறைச்சி; வெஸ்ட் இண்டீசை கலக்கிய தமிழர்!

நேற்று போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன் மழை பெய்ததால், ஆட்டம் 43 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 43 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் அஜின்க்யா ரஹானே 103 ரன்கள் விளாசினார். தவான் 63 ரன்களும், கேப்டன் கோலி 87 ரன்களும் எடுத்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் 14 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 4 ரன்னிலும் அவுட்டானார்கள்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 43 ஓவர்களில் 205 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது. இளம் வீரர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில், இந்தியா பேட்டிங் செய்துக் கொண்டிருந்த போது, மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர் ஒருவர், தன் கையில் ஒரு பதாகையை வைத்திருந்தார். கேமரா அவர் பக்கம் திரும்ப, அந்த பலகையை தூக்கி காண்பித்தார். அதில், “நாங்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவோம் – இப்படிக்கு தமிழன்” என்று குறிப்பிட்டிருந்தது.

முன்னதாக, கால்நடைகளை இறைச்சிக்காக விற்பதற்கும், வாங்குவதற்கும் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. மேலும், சந்தைகளில் கால்நடைகளில் வாங்கியவர்கள் அவைகளை இறைச்சிக்காக பலியிடக் கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவிக்கையின் மூலம் வெளியிட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்து, சென்னை ஐஐடியில் சூரஜ் எனும் மாணவர், மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக மாட்டிறைச்சி சாப்பிடும் திருவிழாவினை நடத்தினார். சுமார் 80 மாணவர்கள் இணைந்து இந்த மாட்டிறைச்சி நிகழ்வில் கலந்து கொண்டனர். இவர்கள் மாட்டிறைச்சி உணவு வகைகளை ஹோட்டலில் வாங்கிவந்து வளாகத்தின் உள்ளேயே இணைந்து சாப்பிட்டனர். இதனால், சூரஜ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் வெடித்தது. காவல்துறை கொண்டு இந்த மாணவர்கள் போராட்டம் ஒடுக்கப்பட்டது. இருப்பினும், ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றது.

இந்தச் சூழ்நிலையில், நேற்று வெஸ்ட் இண்டீசில் நடந்த கிரிக்கெட் போட்டியில், மத்திய அரசின் மாட்டிறைச்சி கொள்கைக்கு எதிராக, அங்கு வசிக்கும் தமிழர் ஒருவர் பொதுவெளியில் தனது எதிர்ப்பைக் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close